Wednesday, January 17, 2018

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜக்கி வாசுதேவின் கோவை ஆசிரமத்துக்கு எனது மனைவி மகளுடன் சென்றிருந்தேன். அதைப்பற்றி ஒரு கட்டுரை கூட உயிர்மையில் எழுதியிருந்தேன். தியானலிங்கம் பார்த்துவிட்டு திரும்பும்வழியில் ஒரு குடும்பம் நிற்பதை கவனித்தேன். அவர்களை பார்த்தாலே பொருளாதார வசதி படைத்தவர்கள் இல்லை என்று தெரிந்தது. அந்த நபருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அழுக்கு வேட்டியும் கையில் ஒரு கிழிந்த துணிப்பையும் வைத்திருந்தார். அருகில் சாயம்போன சேலையுடன் கழுத்தில் எந்த நகையுமில்லாமல் அவரது மனைவி. அவர்களின் மகளுக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அந்த பெண் தேம்பி அழுதுக்கொண்டே இருந்தார். அந்த பெண்ணின் கையில் சின்ன பெட்டி இருந்தது. அந்த பெண்ணின் அம்மா அவரது அழுகையை கட்டுப்படுத்த தெரியாமல் நின்றுக்கொண்டிருக்க பக்கத்தில் நின்றிருந்த அப்பா கண்டிப்பான தொனியில் ஏதோ கறாராக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவரும் உள்ளுக்குள் அழுதுக்கொண்டிருப்பார் என்று தோன்றியது. நான் கவனிப்பதை பார்த்ததும் அந்தப்பெண் ஒருவித கூச்சத்துடன் அழுகையை மறைத்துக்கொண்டார். நான் விலகிவந்து அங்கிருந்த பிரமாண்ட ஆதியோகி சிலையை (அந்த சிலையை அப்போதுதான் புதிதாக நிறுவினார்கள் என்று நினைக்கிறேன்) வெகுநேரம் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் எல்லாம் தெரிந்ததுபோல ஒருவித அமைதியுடன் வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த உலகில் இரண்டே வர்க்கம்தான் இருக்கமுடியும். பணம் இருப்பவர்கள். பணம் இல்லாதவர்கள். இங்கு எல்லாமே பணத்தை முதன்மைப்படுத்திதான் இயங்குகிறது. கேரளா செல்லும்போதெல்லாம் அங்குள்ள கடற்கரையோர குப்பங்களை பார்ப்பேன். பெரும்பாலும் எளிய குடிசைகள். குடிசைகள் வாசலில் தேவனின் பிறப்பை அறிவிக்கும் நட்சத்திரங்களோ, அடக்குமுறையின் குறியீடான மரச்சிலுவைகளோ தொங்கும். அவர்கள் எல்லாரும் பணத்தை காட்டி மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களை மதமாற்றம் செய்த பாதிரியார்கள் பிரமாண்ட சர்ச் கட்டி பணத்தில் குளிப்பார்கள். அவர்கள் கழுத்தில் தங்கச்சிலுவைகள் தொங்கும். ஆனால் இவர்களோ சில நூறு ரூபாய்கள் வாங்கிக்கொண்டு தேவனின் வருகையை எதிர்பார்த்து குடிசைக்குள் தவம்கிடப்பார்கள். கடவுளுக்காக, ஆன்மீகத்துக்காக தங்களை விற்றுக்கொள்ளும் ஏழ்மையை பார்த்தால் எனக்கு கோபம் வருவதில்லை. ஒருவித பரிதாபம்தான் வருகிறது. இப்போது வைரமுத்துவை வசைபாடும் நித்யானந்தா க்ரூப்பில் இருக்கும் சிலர்கூட ஏழ்மையின் காரணமாக அறியாமை காரணமாக அங்கு சேர்ந்திருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு தேவன் ஒருபோதும் உதவமாட்டார் என்பதை எப்படி இவர்களுக்கு புரியவைப்பது என்றுதான் தெரியவில்லை.

No comments: