Tuesday, January 16, 2018

தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி

1977 ஆம் ஆண்டு
புதுடில்லியில் உள்ள Constitution club of India வில் ஜாதி ஒழிப்பு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதை தொடங்கி வைத்த மத்திய சுகாரதுறை அமைச்சரான ராஜ் நாராயண் தன் துவக்க உரையின் போது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை “ஹரிஜன்” என்ற வார்த்தையை கொண்டு அடிக்கடி குறிப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த இளம்பெண் எழுந்து “ மந்திரி அவர்களே நீங்கள் அடிக்கடி எங்களை நோக்கி ஹரிஜன் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது சரியான முறை அல்ல “ என்கிறார்.
அதற்கு மத்திய அமைச்சர் “ இது தேசத்தந்தையான காந்தி பட்டியல் இனம் மற்று பழங்குடியினரை குறிப்பிட உபயோகித்த வார்த்தைதானே. அதைத்தானே நானும் குறிப்பிடுகிறேன்”
என்றிருக்கிறார்.
அதற்கு அந்த இளம் பெண் ”இந்த ஹரிஜன் வார்த்தையை காந்தி குறிப்பிடுவதை சுட்டிக் காட்டிய அம்பேத்கர் “நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள் பேய்களின் குழந்தைகளா என்ன? “ என்று பதிலுக்கு ஏற்கனவே கேட்டுவிட்டார். இந்த ஹரிஜன் வார்த்தை தவறு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றிருக்கிறார்.
மத்திய அமைச்சர் மறுக்க அந்த இளம்பெண்ணோட ஒத்த கருத்துடையவர்கள் அதை ஆமோதித்து கோஷம் எழுப்ப மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு போய்விட்டார்.
அந்த தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி கேட்கும் திறனைக் கண்டு வியந்த பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினரை ஒன்றிணைக்கும் வேலையில் இருந்த அரசியல் தலைவர் ஒருவர் உடனே அவரை தேடிச் சென்றார்.
அந்த பெண்ணின் அப்பா “நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வர வேண்டும். நாங்களே வந்திருப்போமே” என்று அரசியல் தலைவரை வரவேற்கிறார்.
அரசியல் தலைவர் அப்பெண்ணை பாராட்டி “ உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன “ என்று கேட்க படித்து ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகி மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும்” என்றிருக்கிறார்.
அதற்கு தலைவர் “ நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டால் ஒரு மந்திரி சொல்லும் பொறுப்பை முடிப்பதுதான் வேலையாக இருக்கும். அதே சமயம் தனியாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் நீங்களே முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெற முடியும். அப்போது இன்னும் அடக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும்” என்று சொல்ல,
அந்த அரசியல் தலைவர் முதலில் தொடங்கிய இயக்கத்தில் உடனே சேர்கிறார் அந்த இளம்பெண்.
அந்த அரசியல் தலைவர்தான் கன்ஷிராம் அவர்கள்.
அந்த தைரியமான இளம்பெண்தான் மூன்று முறை உத்திரபிரதேச முதல்வரான மாயாவதி அவர்கள்.
பகுஜன் சமாஜன் தலைவர் கோபிநாத் அவர்கள் பேசும் உரையில் கேட்டு புரிந்து கொண்டதை எழுதி இருக்கிறேன்.
அன்று (1977) மாயாவதி என்ற இளம்பெண் மத்திய அமைச்சரை தன்னம்பிக்கையாய் கேள்வி கேட்டு பின் மூன்று முறை உத்திர பிரதேச முதல்வராய் இருந்து சமூகநீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்று (2018) ஜிக்னேஷ் மேவானி தொடர்ச்சியாக அட்டூழியம் செய்யும் ரிப்பளிக் டிவியை ‘எழுந்து போ”என்று விரட்டி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜிக்னேஷின் இந்த நேரடியான அதிரடி நிச்சயம் போராட்ட உணர்வை உடைய மக்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
”நேரடியான தைரியம்” என்பதை விட சிறந்த போராட்ட குணம் ஏதாவது உண்டா என்ன...

No comments: