"நாம் பாரம்பரிய தொழிலை இழந்துவிட்டோம். இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால், ஊருக்கே சோறு போடும் விவசாயத்தையும், விவசாயியையும் நாம் மதிப்பதே இல்லை," இது போன்ற வசனங்கள் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கின்றன. போதாதற்கு நம்மாழ்வார் போன்று ஒரு சில அதிதீவிர சமூக ஆர்வலர்கள் வேற இயற்கை விவசாயம், அது இதுன்னு உணர்ச்சி பொங்க பேசி பல இளைஞர்கள் மூளை மழுங்கி, "விவசாயம் என் உயிர்மூச்சு, அதிலும் இயற்கை விவசாயம் என் உயிர்மூச்சுக்கு ரெண்டு படி மேல" என்பன போன்ற வசனங்கள் பேசுவதையும் பார்க்கமுடிகிறது.
இவையெல்லாம், மத நம்பிக்கைகளைப் போல விவசாயத்தை புனிதப்படுத்தும் இழிவான செயல் என்பதை படித்த இளைஞர்கள் உணர மறுப்பது ஏனோ! மற்ற தொழில்களைப் போல விவசாயம் ஒரு தொழில். அவ்வளவே. என்னைக் கேட்டால் விவசாயத்தை விட மற்ற தொழில்கள் மேலானவை என்பேன். ஏனெனில், விவசாயத்திற்கு சாதி அமைப்பை ஊட்டி வளர்த்து தாங்கிப் பிடிப்பதில் மிக முக்கிய பங்குள்ளது. ஒரு விவசாயியின் மகளாக எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கண்கூடாக நான் இதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பல ஆண்ட சாதி பிரியர்கள் அரசின் 100 நாள் வேலைத்திட்டம் விவசாயத்தை அழித்துவிட்டது எனப் புலம்புவதிலிருந்து என் கூற்று நிரூபணமாகும். 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் வேலையே செய்வதில்லை என்பதெல்லாம் பிறகு வாதிடலாம். நில உடமையாளர்களின் நிலத்தில் வேலை செய்ய செல்லும் ஆட்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆண்டைகள் அவர்களின் மகன், மகள்களை படித்துவிட்டு நல்ல வேலைக்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பிவிட்டு, அவர்கள் நிலத்தில் வேலை செய்ய யாரும் இப்போதெல்லாம் வருவதில்லை! 100 நாள் வேலைத்திட்டம் தான் கெடுத்துவிட்டது! விவசாயத்தை காப்பற்ற யாரும் இல்லை! என்று வெற்று சாதிவெறி கூச்சல் போடுவார்கள். ஆக, ஒடுக்கப்பட்டவர்கள் படித்து வேறு வேலை பார்த்து மேலே வரக்கூடாது, அவர்களிடமே கைகட்டி வேகும் வெயிலில் கூலி வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அப்பட்டமான சாதிவெறி.
நமது நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்திற்கு சாதி அமைப்பை ஒரு நேரடிக் காரணம் ஆக டாக்டர் அம்பேத்கார் முன்வைக்கிறார். தொழில் பிரிவினையோடு இல்லாமல், தொழிலாளர்களையும் பிரிப்பது தான் சாதி. பிரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பிரிக்கப்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்பது வேலையில்லா நிலைமைக்கு இட்டுச்செல்கிறது எனவும் கூறுகிறார். விவசாய நிலத்தில் அடிமைகளைப்போல இரவும், பகலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இப்படி பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுபவர்கள் தான் கூலி விவசாயிகள்.
அவர்கள் தெளிந்தால் என்ன ஆகும் என பயந்து பீதியில் தான் விவசாயம் ஒரு புனித பிம்பமாக கட்டமைக்கப்படுகிறது. விவசாயமாகிய ஒரு தொழிலுக்கு உணர்ச்சி ஊட்டப் படுகிறது. இளைஞர்களைக் கவர இயற்கை விவசாயம் என கவர்ச்சியூட்டப் படுகிறது.
No comments:
Post a Comment