Wednesday, July 04, 2018

யார் சிவன்? யார் முருகன்?யார் ஜக்கி?

யார் சிவன்? யார் முருகன்?யார் ஜக்கி?
சிவனுக்கு தமிழ் தெரியாது என்கிறார் ஜக்கி வாசுதேவ்.
சிவனின் உடுக்கையிலிருந்து தான் தமிழும் சமஸ்கிருதமும் பிறந்தன என்கின்றனர் இல.கணேசன் உள்ளிட்ட சங்கிகள்.
மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் என்பது இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முந்தையது.அதாவது பார்ப்பனியப் படையெடுப்புக்கு முந்தையது. பார்ப்பனியப் படையெடுப்பு கிமு 1 க்கும் கிபி 1 க்கும் இடைப்பட்டதே. சிவன் தான் அந்த மக்கள் வழிபட்ட தெய்வம் என்பது ஆய்வாளர் ஜான் மார்சல் கருத்து.
பார்ப்பனியம் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு அது உருவாக்கியதே மும்மூர்த்தி கொள்கை. இந்த மும்மூர்த்திக் கொள்கைப்படி பிரம்மா படைப்பவராகவும், விஷ்ணு காப்பவராகவும்,சிவன் அழிப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டனர்.
படைத்தல் காத்தல் போன்ற நல்ல வேலை அவர்களுக்கு.அழித்தல் மட்டும் சிவனுக்கு. இங்க தான் இவனுக டகால்டி வேலை ஆரம்பமாகுது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா மக்களை அவர்கள் உருவாக்கிய அணையை உடைத்தே பார்ப்பனியம் அழித்தது என்பது ஆய்வு. பார்ப்பனிய சம்பிரதாயங்கள் படி வருண பகவானைத் தடுக்ககூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.
வடநாட்டு சிவனை அழிப்பவராக மட்டுமே முன்னிறுத்திய பார்ப்பனிய அரசியலுக்கு எதிராக உருவானதே தென்னாட்டு சைவ மரபு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதிலிருந்து வடநாட்டு சிவனோடு தென்னாட்டவருக்கு தொடர்பில்லை.
வடநாட்டு சிவனை யாரும் அங்கு தொட்டு வழிபடலாம்.அதற்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. அங்கு சிவனே தீண்டப்படாதவர் தான். வடநாட்டு சிவனுக்கு அழித்தல் மட்டுமே வேலையாக பார்ப்பனியம் நிச்சயித்தது.
ஆனால் தென்னாட்டு சிவன் ஐந்து வேலைகளைச் செய்வதாக நம்புவது சைவ மரபு.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல், அருளல் ஆகியவையே அந்த ஐந்தொழில்.
இந்த ஐந்தை மையமாக வைத்தே சிதம்பரம் நடராஜர் உருவம் இருக்கும். அவர் தென் மேற்கே பார்த்து தான் ஆடுவார்.ஏனெனில் பொதிகை மலைக் காற்றை சுவாசித்து ஆடுவதாக ஐதீகம்.
நடனத்தின் அரசனாக சிவனை பாவிப்பதும் தென்னாட்டில் மட்டுமே. தென்னாடு என்பது தமிழ்நாடு மட்டுமே.
தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தெய்வங்கள் கொற்றவையும் அவர் மகன் முருகனும் தான். கொற்றவையின் கணவன் சிவன் அல்ல. அப்போது தாய்வழிச் சமூக மதிப்பீடே இருந்தது.தந்தை வழி மதிப்பீடு இல்லை. கொற்றவையும் முருகனும் கிபி 7 ம் நூற்றாண்டில் ஆரியத்தை நோக்கி இழுக்கப்பட்டனர்.
ஆரியக் கடவுளான ஸ்கந்தனுடன் முருகன் இணைக்கப்பட்டான். முருகனின் மனைவியாக அதுவரை இருந்த வள்ளி இரண்டாமவளாக ஆக்கப்பட்டு ஸ்கந்தனின் மனைவி தேவசேனை முதல் மனைவியாக ஆக்கப்பட்டாள்.முருக வரலாறு ஸ்கந்த புராணமாக இக்காலத்தில் மாற்றப்பட்டது.
சங்க இலக்கியங்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு பிசைந்து திணை மாவை படையலிடுவார்கள். அப்போது வேலன் என்ற தனது பூசாரியின் மீது ஆவி உருவில் வந்து குறி சொல்வான் முருகன். பார்ப்பனியம் முருகனைக் கையிலெடுத்த போதுதான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட புனிதமான ஸ்கந்தனாக மாறி தேவசேனாதிபதியாக ஆக்கப்படுகிறான். சேயோன், செவ்வேள்,வேலன் என்ற அடையாளங்கள் அகற்றப்பட்டு ஸ்கந்தன்,சண்முகன்,சுப்பிரமணியன் என்ற அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
கொற்றவை,மாரி,பேச்சி போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் பிம்பங்களாக மாற்றப்படுகிறது. சுடலை மாடன் காடன் ஆகியவை சிவனின் பிம்பங்களாகவும் மாற்றப்படுகிறது.உழைக்கும் மக்களின் லட்சக்கணக்கான கிராம தெய்வங்கள் அனைத்தும் அவதாரம்,அம்சம்,புராணக்கதைகள் மூலம் பார்ப்பனிய ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததே கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம்.அது உருவாக்கிய பெரிய புராணமும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேல் வழிபாடும், அதன் பிறகு முருக வழிபாடும் நடந்த இடம் பரங்குன்றம்.இலக்கியங்களில் வேற் கோட்டம் என அழைக்கப்பட்ட இடமே பரங்குன்றம். கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் பிதாமகன்கள் திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் இதை சிவத்தளமாக மாற்றி தேவாரம் பாடினர்.சிவனுக்கும் முருகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அவர்கள் பாடலின் மையக்கரு. அன்றிலிருந்து பாண்டி நாட்டின் பதினான்கு பாடல் பெற்ற தளமாக பரங்குன்றம் திருப்பரங்குன்றமாக மாற்றப்பட்டது.
தேவாரத்தின் படியான பூஜை முறையால் இங்கு கடைபிடிக்கும் பூஜை மரபு சிவமரபு தான்.இங்கு ஏற்றப்பட்டுள்ள கொடி முருகனுக்குரிய சேவற் கொடி அல்ல. சிவனுக்கான ரிஷபக் கொடி தான். பள்ளியறையும் சிவனுக்குத்தான்.முருகனுக்கல்ல. ஆனால் பக்தர்கள் முருகன் கோவில் என்றே இங்கு வருகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் இது ஈஸ்வரத்தலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக்குள் தங்களுக்கான காரியத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வைதீகக்கூட்டத்தின் மாற்று மரபுக்கும், உழைக்கும் மக்களின் முருக வழிபாட்டிற்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தப் போர்க்களம் தான் திருப்பரங்குன்றம்.
எந்தப் பார்ப்பனரும் முருகன் என்று பெயர் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால் சுப்பி்ரமணி என்று எல்லா சூத்திர பஞ்சமர்களும் பெயர் வைப்பார்கள்.
முருகன் தமிழகத்தில் இவர்களுக்கு அரசியல் கருவிதான்.ஆனால் பக்தர்களுக்கு பண்பாட்டின் நீட்சியே.
சக்கி வாசுதேவ் தமிழனோ, தென்னாட்டு சைவனோ அல்ல. வடநாட்டு சிவனை ருத்ரனாகப் பார்க்கும் தெலுங்கைப் பூர்விகமாகக் கொண்ட கன்னடனே.
சிவன் வடக்கே கெட்டதை மட்டுமே அழிப்பவர். இவன் இங்கு நல்ல பலதையும் சிவன் பெயரைச் சொல்லி அழிப்பவனே.
இங்குள்ள முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல.
ஜக்கி வாசுதேவையே.

No comments: