Thursday, July 05, 2018

தமிழ்த் தெரியாத சிவனுக்கு 'சிவன்' என்று தமிழில் பெயர் வைத்தது யார்?

சிவனுக்குத் தமிழ் தெரியாது
-ஜக்கி வாசுதேவ்
அதுசரி, தமிழ்த் தெரியாத சிவனுக்கு 'சிவன்' என்று தமிழில் பெயர் வைத்தது யார்?
சிவனுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியுமெனில், அந்த ஆதிக் கடவுளைப் பற்றி, சமஸ்கிருத ஆதிநூலான ரிக் வேதத்தில் 'சிவன்' என்ற சொல் ஒருமுறைக்கூட ஒரு இடத்திலும் குறிக்கப்படவில்லையே ஏன்? சிவன் மட்டுமல்ல திருமால், முருகன், வினாயகர், பிரம்மா என எந்தக் கடவுள்களின் பெயர்களும் ரிக் வேதத்தில் இல்லையே ஏன்?
ஏனெனில், ரிக்வேத காலத்தில் இந்தக் கடவுள்கள் ஒன்றைக்கூட ஆரியர்கள் அறிந்திருக்கவில்லை. ரிக்வேதம் என்பதே சிந்துவெளி நாகரிக அழிவு குறித்தும், அவற்றின்மீது ஆரியர்கள் படையெடுத்து அழித்த விதம் குறித்தும் தெளிவாய் பேசும் 'இன அழிப்புக் களஞ்சியம்'தான்.
அப்போது ஆரியர்கள் தெய்வமாக அறிந்திருந்தது மூன்றை மட்டும்தான்.
1.அக்னி
2.இந்திரன்
3.ருத்திரன்
ரிக்வேதத்தில் இம்மூன்று கடவுள்கள் மட்டுமே தெய்வங்களாகப் போற்றிப் பாடப்பட்டிருக்கிறார்கள்; வன்முறையில் ஈடுபட வேண்டி அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; வன்முறைக்குப்பின் விருந்திற்குப் போற்றி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (விருந்தில் மாட்டுக்கறியும் சோமபானமும் கட்டாயம்)
அதாவது, சிந்துவெளி திராவிட மக்களின் வாழ்வியலை, அவர்களின் பண்பாட்டு வகைமைகளை, பலநூறு கோட்டைகளை அழிக்க ஆரியர்கள் பயன்படுத்திக்கொண்ட ஆயுதங்கள்தான் இவை.
அக்னி - நெருப்பால் தீமூட்டி அழிப்பது (சிந்துவெளி அகழ்வாய்வில் பல கோட்டைகள் ஒரே நேரத்தில் தீயால் கருகி அழிக்கப்பட்டதாக நிறுவப்பட்டிருக்கிறது)
இந்திரன் - நீரால் அழித்தல் (சிந்துவெளி மக்கள் தேக்கி வைத்திருந்த நீர்நிலைகளை உடைத்து அம்மக்களின் கோட்டைகளில் பாயச்செய்து இந்திரன் அழித்ததாக ரிக்வேதம் கூறுகிறது)
அக்னி, இந்திரனுக்கு அடுத்ததாக ரிக்வேதத்தில் 'சோமன்' போற்றப்பட்டிருக்கிறான். சோமன் என்பது சோமபானம்(மது). மதுவை அருந்தி போரிட்டதால்தான் அறிவிலும் பண்பாட்டிலும் சிறந்தவர்களாய் இருந்த தஸ்யூக்களை(திராவிடர்களை) வெல்ல முடிந்தது. அதனால் அவனை இறைவனுக்கு நிகராய்ப் போற்றுவோம் என்கிறது ரிக்வேதம்.
அடுத்ததாக ருத்திரன்..
அக்னியின் மறுபெயர்தான் ருத்திரன். சிந்துவெளி மக்களின் சிவவழிபாட்டு முறையை அறிந்துகொண்ட ஆரியர்கள், சிவனுக்கு இணையாக ஒரு கடவுளைத் தங்களுக்காகத் தோற்றுவித்துக்கொள்ள நினைத்தனர். அதனால் சிவனுக்கு எதிராக அக்னியை உருவகப்படுத்தி ருத்திரனை உருவாக்கினர்.
சிந்துவெளிச் சிவன் - அறமும் அமைதியும் உருவானவன். அதன் எதிர்பதம்
ஆரிய ருத்திரன் - கோபமும் தீமையும் உருவானவன்.
ருத்திரன் - உருத்திரன் (தமிழின் திரிபு) உறுத்துபவன், துன்பம் தருபவன் என்ற பொருளில்)
இதையே பின்னாலில், சிவன்தான் ருத்திரன் என்றும் சிவனின் கோபமே ருத்திரனாய் வடிவெடுத்து நாட்டையும் மக்களையும் அழித்து, இறைவன் அழிக்கும் தொழிலை முதன்முதலில் தொடங்கியதாகத் திரித்துக் கூறிக்கொண்டனர்.
ஆரிய வேத புராணங்களில்
ருத்திரன்
தெக்ஷன்
ஷிவ
கைலாஷ்
என நான்குவித படிநிலைகளில் சிவன் குறிக்கப்படுகிறான்.
சிந்துவெளி மக்கள்மீதான இன மற்றும் பண்பாட்டு அழிப்பிற்குப் பின் ருத்திரன் சாந்தமாக்கப்பட்டு 'தெக்ஷன்' என அழைக்கப்படுகிறான்.
தெக்ஷன் என்பது தெக்கன் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு.
சிந்துவெளி மக்கள் சிவனை 'தெக்கன்' என்றே அழைத்தனர்.
தெக்கன் - தென்னகத்து கடவுள்.
சிந்துவெளிக்குத் தெற்கு என்பது தமிழகத்தைக் குறிக்கும். இதன்மூலம் தெக்கன் (சிவன்) தமிழர்களால் உருவாக்கப்பட்ட கடவுள் என்பது தெளிவாகிறது.
இந்தத் தமிழகத்து தெக்கனையே ஆரியர்கள் சமஸ்கிருதத்தில் தெக்ஷன் என்றனர்.
தற்போதும் சிவனை தெக்ஷனாமூர்த்தி எனக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்குக.
ஆரியர்கள் வட இந்தியாவை மட்டுமே 'ஆரிய வர்த்த'மாக அறிந்திருந்தபோது தென்னகத்து தெக்கன் எப்படித் தெய்வமானான்?
தெக்ஷன் என்ற கடவுளை மிகப் பிந்தைய கால புராணங்களில் ஷிவ, கைலாஷ் எனக் குறிக்கின்றனர்.
சிவன் - ஷிவ
குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக 'சேயோன்' இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது.
குறிஞ்சி நிலத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள், இருளையும் பயத்தையும் போக்கி வெளிச்சத்தைத் தந்து காப்பதாக நம்பி சூரியனைக் கடவுளாக அறியாமையால் வணங்கினர்.
சேயோன் - சிவந்தவன் (சூரியன்)
சே என்றால் சிவப்பு.
சேவடி - சிவந்த பாதம்
சேவல் - சிவந்த கொண்டையுடைய பறவை
சேப்பெருமாள் - சிவந்த பெருமாள் (திருமாலை எதிர்க்க நாயன்மார்கள் சிவனை சேப்பெருமாள் என்றனர்)
சே என்று சிவப்பைக் குறித்த சொல் பின்னாளில் செ'வாகக் குறுகியது.
செம்மலர் - சிவந்த மலர்
செங்கொடி - சிவந்த கொடி
செந்தூரம் - சிவந்த பொடி
சே --> செ --> சி எனப் படிப்படியாக அச்சொல் குறுகியதைப்போல
சேயோன் --> சேவன் --> சிவன் --> எனக் குறுகியது.
ஆழிப்பேரலையிலிருந்து தப்பித்து சிந்துவெளியில் குடியேறிய தமிழர்கள், தங்களது முன்னோர்களை நினைவு கூறும்வகையில், சிவன் தோன்றிய இடத்தை (தமிழகம்) வைத்து தெக்கன் என்றனர். சிந்துவெளி அழிவிற்கு/அழிப்பிற்குப் பின் கங்கை சமவெளியை அடைந்த ஆரியர்கள், தங்களுக்கு ஏற்றவாறு புராணங்களை எழுதி 'ஆரிய வர்த்தம்' என்ற பகுதியைத் தங்களின் நாகரிக இடமாகத் தகவமைத்துக்கொண்டு, சிந்துவெளிச் சிவனை கைலாயத்திற்குக் கொண்டுச்சென்று 'கைலாஷ்' ஆரிய சிவனாக்கிக் கொண்டணர்.
சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லும் ஜக்கிக்கு சிவன் என்பதே தமிழ்தான் என்பது தெரியுமா?

No comments: