Monday, November 18, 2019

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை - வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை !!

இம்முறை ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் ( I.I.T) மானம் கப்பலேறுவதை தடுப்பது சற்றுக்  கடினம்தான். காரணம்,  கொல்லப்பட்டது, இளிச்சவாய தமிழ்நாட்டு மாணவரல்ல. போராட்டக்குணமுள்ள கேரள மண்ணின் மாணவி. ஐ.ஐ.டி மற்றும் அதனை ஆதரிக்கும் சங்கிகளுக்கு  கூடுதல் தலைவலி ....கொல்லப்பட்டவர் முஸ்லிம்.

1992 முதல் சென்னை ஐ.ஐ.டியின் முகத்திரையைக் கிழித்தது இரண்டே இதழ்கள்தான். ஒன்று 'நக்கீரன்' மற்றொன்று உங்கள் 'தாகம்'.

ஐ.ஐ.டி நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட கணித மேதை  பேராசிரியர் வசந்தா  கந்தசாமி அம்மாவை நான் 'நக்கீரன்' அலுவலகம் அழைத்துச்சென்றேன். அவர் பட்ட துன்பங்களைக் கேட்ட அண்ணன் நக்கீரன் கோபால், அண்ணன் லெனினை உடனே தன் அறைக்கு அழைத்தார். 'தம்பி ...கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. நீங்கள் அம்மாவிடம் பேசுங்கள் ' என்றார்.

அந்த வார 'நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரை வசந்தா கந்தசாமி அம்மாதான். 'நக்கீரன்' கடைக்கு வந்தவுடன், அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வந்த முதல் தொலைபேசியின் குரல் அவரை இப்படி மிரட்டியது...." என்ன கோபால்...யார் மேல கை வைக்கறீங்க? ஐ.ஐ.டி கோபால்  !! " மிரட்டியவர்......மாலன் !!

அந்தத் தொலைபேசி வரும்போது நான் அண்ணன் அறையில் இருந்தேன். 'இந்து' ராம் தொடங்கி பல முன்னணி பத்திரிகையாளர்கள் அவரிடம் பேசியபடியே இருந்தனர். அண்ணன் சிரித்தபடி அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். " நக்கீரன் " தந்த பலத்த அடியில்....ஆடிப்போனது ஐ.ஐ.டி 'அவாள்' கூடாரம்.

அடுத்த இரண்டாண்டுகளுக்கு 'தாகம்' இதழில், 'ஐ.ஐ.டி எனும் மர்ம தேசம்'  தலைப்பில் பேராசிரியர் வசந்தா கந்தசாமி தொடர் கட்டுரை எழுதினார்.  கட்டுரை வாங்க நான் ஒவ்வொரு முறை அம்மாவை சந்திக்க  ஐ.ஐ.டி உள்ளே நுழையும்போதும் கடுமையாக மிரட்டப்படுவேன். எச்சரிக்கப்படுவேன். கிண்டி முதல் அடையாறு வரை ஒட்டப்படும் 'தாகம்' இதழின் சுவரொட்டிகளை ஐ.ஐ.டி நிர்வாகம் சம்பளத்துக்கு ஆள் வைத்து கிழிக்கும். அப்பகுதி கடைகளுக்கு 'தாகம் ' வந்த அடுத்த நொடி, மொத்த இதழ்களையும் ஒரு ஜீப் வந்து பணம் கொடுத்து அள்ளிச்சென்று தீ வைத்துக் கொளுத்திவிடும்.

இன்று உள்ளது போல் அன்று சமூக வலைதளங்கள் இல்லை. ஐ.ஐ.டி செய்தியை வெளியிட அத்தனைப் பத்திரிகைகளும் மறுத்துவிடும்.

'தாகம்' இதழில் வந்த பேராசிரியர் வசந்தா கந்தசாமியின் கட்டுரையைக் கண்டித்து Hindu frontline கட்டுரை எழுதியது. Thirdrate filthy magazine Thaagam என்று நமக்குப் பட்டம் சூட்டியது.  ' ஏன் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற தீவிரவாத பத்திரிகைகளை தடை செய்யாமல் விட்டுவைத்து இருக்கிறார் ' என்று கேள்வியும் எழுப்பியது.  frontline ஆசிரியர் 'இந்து' ராம்.

அப்போது நான் 'நந்தன்' இதழிலும் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். ஐ.ஐ.டியை அதிலும் வெளுத்தோம்.

அடையாறு முதல் என் சொந்த ஊரான புதுச்சத்திரம் வரை என்னை ஐ.பி பின்தொடரும். உபயம் ஐ.ஐ.டி.

வெறும் செய்தி வெளியீட்டால் ஐ.ஐ.டியை வெல்ல முடியாது என்று முடிவு செய்தேன். வசந்தா அம்மாவை அண்ணன் வைகோவிடம் அழைத்துச்சென்றேன். ஐ.ஐ.டி அக்கிரமங்களை கேட்டவர் அதிர்ந்தார். ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வசந்தா அம்மாவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். ஐ.ஐ.டி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

அடுத்து நான் அம்மாவை அழைத்துச் சென்றது அண்ணன் திருமாவளவனிடம். சைதாப்பேட்டை முதல் ஐ.ஐ.டி வரை விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய பிரம்மாண்ட முற்றுகைப்போராட்டத்தால் ஐ.ஐ.டி இயக்குநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

' தாகம் ' இதழில் வெளிவந்த ஐ.ஐ.டி தொடரை கலைஞர் தொடர்ந்துப்படித்து வந்ததின் விளைவு....தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களுக்கு 'கல்பணா சாவ்லா' விருதை அறிவித்தார்.

அதன் பிறகுதான் ஊடகங்கள் அவர் குறித்த செய்திகளை வெளியிட தொடங்கின....

நேற்று வசந்தா அம்மாவிடம் பேசினேன்....' அவனுங்க(ஐ.ஐ.டி) திருந்தமாட்டானுங்கடா தம்பி ! ' என்றார் கோபமாக.

இன்னும் எத்தனை மாணவர்களை கொல்லப்போகிறோம்.....ஐ.ஐ.டியை என்று வெல்லப்போகிறோம் தோழர்களே?

வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று . அது உண்மை என்றால் இன்நேரம் ஐ.ஐ.டி இயக்குநர் சிறையில் இருப்பானே!!

- தாகம் செங்குட்டுவன்

No comments: