Monday, November 18, 2019

பாரதி"யார்"?

பாரதி"யார்"?

“பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார்.

பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.

பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.

பார்ப்பனப் பெண்கள் சாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் பாரதி மிக கவனமாகவே இருந்தார் என்பதுதான் ஓர் செய்தி!

பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை என்பது இதிலுள்ள இன்னொரு செய்தி!

No comments: