Thursday, April 12, 2018

ஒரு வயசாகியும் கல்யாணமாகாத ஐயரின் குமுறல்.

மந்தைவெளியில் இருக்கும் கல்யாண் நகர் அசோஸியேஷனில் பார்த்த காட்சியை கல்யாண வயதில் ஆண்பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் பார்த்திருந்தால் பாதிப்பேருக்கு நெஞ்சு அடைத்திருக்கும். இன்று அங்கு ஜாதகங்களை பதிவு செய்யும் ஒரு நிகழ்ச்சி நடந்தது நானும் அங்கே என் சகோதரியின் 32 வயது மகனுக்காக சென்றிருந்தேன் .அந்த மண்டபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கூடியிருந்திருப்பார்கள். ஆனால் பதிவு செய்யப்பட்ட பெண்களின் ஜாதகங்கள் வெறும் பத்துதான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கே கிட்டத்தட்ட எல்லார் முகங்களிலும் கவலை குடிகொண்டிருந்தது.
என்னதான் நடக்கிறது பிராமண சமுதாயத்தில்? இந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இருக்கிறார்களா இல்லையா ? என்ன ஆயிற்று இவர்களுக்கு ?
"எல்லாம் நாம செஞ்ச பாவம் சார் "என்று ஒரு அம்மா தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார். "அந்தக் காலத்தில் பிள்ளையைப் பெற்றவர்கள் செய்த அக்கிரமங்கள் என்ன பாவங்கள் என்னென்ன அதற்கு பகவானே கொடுத்த தண்டனை இது "என்று சொல்லி கண்ணைத் துடைத்துக்கொண்டார் . .கல்யாணத்தில் பேசிய வரதட்சிணையைத் தரவில்லை என்று கர்ப்பிணி என்றும் பார்க்காமல் பெண்ணை பிறந்த வீட்டுக்கு துரத்திய கதைகள் நம் சமுதாயத்தில் உண்டு. மறுத்து பேசுங்கள் பார்ப்போம் . பிள்ளையும் பெண்ணும் சேர்ந்து சினிமாவுக்கு போனாலே "தலைவலி "என்று படுத்துக்கொண்டு அவர்களது திட்டங்களை கே கெடுத்து அவர்களது சந்தோஷத்தை கெடுத்த மாமியார்கள் நம் சமுதாயத்தில் இல்லை என்று சொல்லமுடியுமா.? இதற்கு மேலும் வீட்டில் ஏதாவது அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அது "இவளால்தான் " என்று மருமகள்களை கரித்துக்கொட்டிய பெரியவர்கள் இல்லை என்று சொல்லுங்கள்? அன்றைக்கு அப்படி கஷ்டப்பட்டவர்களின் குடும்பங்களில் பிறந்த பெண்கள்தான் இன்று கல்யாண வயது வந்தும் "கல்யாணமே வேண்டாம் "என்று ஒருவித கசப்புடன் நிற்கிறார்கள். போதாக்குறைக்கு நாட்டில் இருக்கும் அரைகுறை ஜோதிடர்கள் வேறு . இவர்கள் படுத்தும் பாடு "தாங்க முடியலைடா சாமி "என்று சொல்ல வைக்கிறது. முக்கால் வாசி ஜோசியர்களுக்கு "செவ்வாய் தோஷம் "என்றால் என்னவென்றே தெரியாது. தோஷம் என்பதற்கு ஐந்தாறு அமைப்புகள் இருந்தால் தோஷம் இல்லை என்று சொல்ல ஐம்பது அமைப்புகள் இருக்கின்றன. அப்படி என்னதான் செவ்வாய் தோஷம் என்று இருந்தாலும் ஒரு கந்த சஷ்டி கவசமோ, ஒரு முருகன் கோவிலில் விளக்கு ஏற்றுவதனாலோ அந்த தோஷங்கள் அடி பட்டுப்போகின்றன. மேலும் சேஷாத்திரி நாத சுவாமிகள் என்ன சொல்கிறார் என்றால் ஜாதக பொருத்தமே பார்க்கத்தேவை இல்லை. கல்யாணத்தில் சொல்லப்படுகிற வேத மந்திரங்களே எல்லா தோஷங்களுக்கும் பரிகாரங்கள் ஆகும் என்கிறார். பள்ளிக்கூட பரீட்சைகளில் கேள்விகளை "சாய்ஸில்"விட்டுப்பழகிய நமக்கு கல்யாண மந்திரங்களையும் சாய்ஸில் விட வாத்யார்களை படுத்தி குழந்தைகளுக்கு கெடுதல் செய்கிறோமோ என்று தோன்றுகிறது.
பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
முதலில் "பணம் பணம் "என்று பணத்தின் பின் ஓடுவதை நிறுத்துங்கள். உங்கள் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு கடனை உடனை வாங்கி படிக்கச் வைத்து அந்தக் கடனை பெண்ணிடம் வசூல் செய்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் தற்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்களும் நீங்கள் கடன் வாங்கிய அதே வங்கிகளில்தான் கடன் வாங்குகிறார்கள். ஒரு பெண் தன் பெற்றோர்களுக்கு அவர்களது ஒய்வு காலம் அமைதியாக கழிய பொருளாதார உதவி செய்தால் அதை தடுக்காதீர்கள். ""கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பாத்தியமெல்லாம் எங்கள் குடும்பத்துக்குத்தான்" என்று மொண்ணை கண்டிஷன்கள் போடாதீர்கள். தவிர அவர்கள் வாழ்க்கையில் தேவை இல்லாமல் குறுக்கிட்டு குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள்.
பெண்கள் பக்கத்திலும் நிறைய தவறுகள் உள்ளன. பையனுடைய அப்பா அம்மா இரண்டு பெரும் பர லோகம் சென்று பையன் அனாதையாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்கிற அசட்டுப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு புத்திமதி சொல்லுங்கள். ஆனால் அவர்கள் சொற்ப சதவிகிதம்தான் என்று சொல்லலாம்.
நான் பார்த்தவரையில் தற்கால இளம் பெண்கள் நல்ல அறிவு உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். மாமனார் மாமியார்களிடம் அன்பாகத்தான் இருக்கிறார்கள். பெண்களிடம் இருக்கும் கல்யாணம் பற்றிய பயத்தை போக்கினால் பல ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் கிடைப்பார்கள். தவிர ஜாதக பொருத்தங்களை விட குடும்ப பொருத்தம், மனப் பொருத்தம் போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இரண்டு வீட்டாரும் பேசி முடிவெடுங்கள். கல்யாணங்களில் குத்துப்பாட்டு, வெட்டி டான்ஸ் போன்றவற்றை விட்டுவிட்டு புரோகிதர்களுக்கு அள்ளிக் கொடுத்து கல்யாணங்களை முழு வேத முறைப்படி நடத்துங்கள். பிராம்மண சமுதாயம் க்ஷீணமடைவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.
மேலும் இந்த பிரச்சினையை காஞ்சி இளைய சுவாமிகள், சிருங்கேரி சுவாமிகள் கவனத்துக்கும் யாராவது கொண்டு சென்றால் நலம்.
நம் குழந்தைகளுக்காக தயவு செய்து சிந்தியுங்கள்.
வாழ்த்துக்களுடன்
ராமகிருஷ்ணன்
மயிலாப்பூர்

No comments: