Tuesday, April 10, 2018

தொலைந்து போன ஆறுகள்


ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு
அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு
ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர்
சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் அதை நிரூபிக்கின்றது
அப்பகுதியினை உற்று கவனித்தால் நாயக்கர் கால அடையாளம் உண்டு, ஆம் சித்தூர், முத்துலாபுரம், நாகலபுரம் எல்லாம் ஆந்திர பகுதி பெயர்கள்
தெற்கே வந்த நாயக்கர்கள் முதலில் ஆற்றங்கரையில்தான் அமர்ந்தார்கள், அவர்கள் நம்பியாற்றுபக்கமும் வந்திருக்கலாம் அப்படி அவர்கள் காலத்தில் இந்த பகுதியில் சில பெயர்கள் அவர்கள் பாணியில் மாற்றபட்டிருக்கலாம்
ஆக பெரும் நதியாக யாரெல்லாமோ வந்து வாழும் பகுதியாக செழிப்பாக இருந்ததுதான் நம்பியாறு
பின் ஏனோ அதில் நீரோட்டம் தடைபட்டது, தடைபட்டது ஏன் என இன்றுவரை தெரியவில்லை, ஆனால் காரணம் இருக்கின்றது என்கின்றார்கள்
காவேரியும், வைகையும், தாமிரபரணியும் , தென்பண்ணையும் வழி மாறாமல் பாயும் தமிழகத்தில் நம்பியாறு மட்டும் நின்றுவிட்டது என்றால் எப்படி?
அதன் உற்பத்தியிடம் மேற்கு தொடர்ச்சி மலை, சிற் சில ஓடைகள் இணைந்தே நதியாக உருவெடுக்கும், அப்படி நம்பியாற்றின் உற்பத்தி இடங்களில் ஏற்பட்ட சில இயற்கை தடைகளிலோ அல்லது செயற்கை தடைகளிலோ அந்த நதியின் முக்கிய நீர் ஆதாரம் மேற்கே சரிந்துவிட்டது என்கின்றார்கள்
யாரும் இதுவரை அந்த நீர் ஆதாரங்களை சோதித்ததுமில்லை, அதில் அவ்வளவு தூரம் செயல்பட யாரும் இல்லை. நம்பியாற்றில் நீர் இல்லை என சொல்லிவிட்டு அமைதியானார்கள்
ஆனால் ஆறு மேல்தான் நீர் ஓடவில்லையே தவிர, ஆற்று மணலுக்கு அடியில் அது சுரந்துகொண்டே இருந்தது. நம்பியாறு மிக சிறிய நீர்வீழ்ச்சியாக நம்பி மலையில் கொட்டும் கொஞ்சதூரம் வந்து காணாமல் போய்விடும்
அது ஆற்று மணலில் புகுந்து அது கடலில் கலக்கும் ஆத்தங்கரை வரை சென்றது
வைகை மட்டும் ஊற்றுபெருக்கால் நீர் ஊட்டும் ஆறு அல்ல, நம்பியாறும் அப்படியே
அக்காலத்தில் எந்த கோடையிலும் அந்த ஆற்றுமணலை 2 அடி தோண்டினாலே நீர் சுரக்கும், அற்புதமான ஆற்று நீர்
அதுவரை அந்த ஆறு பகுதி எல்லாம் குடிநீருக்கோ, நிலத்தடி நீருக்கோ சிக்கல் இல்லை
சிக்கல் மணற்கொள்ளை வடிவில் வந்தது, மகாபாரத போர் வேகத்தில் அள்ளினார்கள் , லாரி லாரியாக எறும்பு போல் தொடர்ச்சியாக அள்ளிகொண்டே இருந்தார்கள்
தடுத்தவர் மேல் கல்லை போட்டு, இல்லை வழக்கு போட்டு அள்ளிகடத்தினார்கள்
தடுத்து கதறியவர்கள் குரல் யார் காதில் கேட்டது? பல்லாயிரம் காலம் ஆண்டு அப்பகுதிக்கு நீர் ஊற்றிய நம்பியாறு, காலம் கெடுத்தாலும் அரைமயக்கத்தில் அடிவயிற்றில் இருந்து நீர் கொடுத்த அந்த நம்பியாறு கொல்லபட்டது
இன்று ஒரு கூடை மணல் கூட இல்லை, சுரண்டியாயிற்று
குடிநீர் தட்டுபாடும், நிலத்தடி நீர் தட்டுபாடும் தலைவிரிக்கின்றன‌
உலகில் எந்த நதிக்கும் இல்லா சிறப்பு நம்பியாற்றிற்கு உண்டு
அதன் தொடக்கம் புனிதமான நம்பியாழ்வார் கோவில் அவர் பாதத்தில் இருந்தே அது புறப்படும்
பின் திறுக்குறுங்குடி வழியாக சில ஆலயங்களை தொட்டு வரும்
பிரசித்தி பெற்ற சிறுவளஞ்சி ஆலயத்தை அது சுற்றி வணங்கும்
(ஜெயலலிதாவிற்கே அவர் ஆலயங்களில் ஆடுகோழி வெட்ட தடை என்றபொழுது "சீக்கிரம் உன் அட்டகாசம் ஒழியும்" என ஆருடம் சொன்ன சிறுவளஞ்சி ஆலயம் அதன் கரையில்தான் உண்டு, அது அப்படி சொல்லி 12 ஆண்டுகளில் ஜெயலலிதா இல்லை, மர்மமாக மறைந்தார்)
ஏர்வாடி தர்காக்கள் அந்த ஆற்றின் அருகே உண்டு
சித்தூர் எனும் மகா பழமையான சாஸ்தா கோவிலை அது வணங்கும்
அணைக்கரை எனும் கிறிஸ்தவர்களின் மிக பழமையான ஆலயத்தின் ஓரம் வந்து அது வளைந்து வணங்கும்
அப்படியே கடலில் கலக்கும் முன் இஸ்லாமியரின் புனிதமான ஆற்றங்கரை பள்ளிவாசலையும் தரிசித்துவிட்டு கடலில் கலக்கும்
இப்படி எல்லா மதத்தவருக்கும் மிக மிக நெருக்கமான நதி அது, அற்புதமான ஆறு
ஒரு காலத்தில் தாமிரபரணி போல் இருந்த‌ ஆற்றினை முதலில் மர்ம்மான முறையில் யாரோ கொன்றார்கள், ஏதோ நடந்திருக்கின்றது. ஆற்றுநீர் குறைந்திருக்கின்றது
அதன் பின் மண்ணில் ஊறி அந்த ஆறு தன் கடமையினை செய்திருக்கின்றது
அந்த அரைமயக்க நிலையில் அந்த ஆற்றினை கதற கதற கொன்ற கொடுமை அதிமுக ஆட்சியில் நடந்தது, இதனை சொல்ல ஒரு தயக்கமும் இல்லை
ராட்சத புல்டோசர்களும், பெரும் எந்திரங்களும் இரவெல்லாம் மணல் அள்ளும் போது ஏற்பட்ட அந்த பெரும் ஒலி அந்த ஆற்றின் மரண ஓலம்
லாரிகளில் நீர் வடிய வடிய அதனை ஏற்றிசென்றபொழுது அந்த ஆற்றின் ரத்தம் வழிந்து கிடப்பதாகவே பட்டது
காவேரிக்காக பொங்கும் யாரும் அழிந்துவிட்ட நம்பியாற்றை பற்றி பேசமாட்டார்கள்
நம்பியாறு தென்நெல்லை மக்களின் தாய், இன்று தொலைந்துவிட்ட அல்லது அடித்துவிரட்டபட்ட தாய்
அவள் இல்லை என்றாலும் அவளின் தடம் அப்படியே நிற்கின்றது, நீருமின்றி மணலுமின்றி அந்த பாறைகள் பழம் வரலாற்றையும், நிகழ்ந்துவிட்ட பெரும் கொடுமையினையும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌
புனிதமான நம்பிகோவிலின் அருகே பிரமாண்டமாக ஆர்பரித்த நம்பியாறு இன்று மிக சிறு அருவியாக கொட்டுகின்றது
அந்த சிற்றருவி ஆர்பரிக்காது மாறாக வாழ்ந்துகெட்ட ஒரு மூதாட்டி முணகி அழும் அழுகை ஒலி போலவே கேட்கும்
அப்படி மாபெரும் கொடுமை அந்த ஆற்றுக்கு நிகழ்ந்தது, இதனால் பாதிக்கபட்ட கிராமங்களும் மக்களும் கால் நடைகளும் ஏராளம்
இன்றும் மழை கொட்டினால் அந்த தாய் தன் மக்களை சந்திக்க ஆர்பரித்து வருகின்றாள் , ஆனால் 1 மாதத்திற்குள் அந்த நீர் வற்றிவிடுகின்றது, ஒரே ஒரு சிறு தடுப்பணை தவிர ஏதும் அந்த ஆற்றில் கிடையாது.
அக்காலங்கள் அவ்வளவு சுகமானவை
எந்த கோடை ஆனாலும் 2 அடியில் நீர் கொடுத்த மணல் அது. எந்த வெயில் காலமானாலும் இரவு துண்டை விரித்தால் ஏசி குளிமெத்தை கொடுத்த இரவுகள் அவை
இன்றும் அந்த ஆற்றுகரை ஆலயங்களில் விழா நடக்கின்றது, விமரிசையாக நடக்கின்றது. ஆனால் தள்ளி இருந்து அந்த ஆற்றின் குளிர்மணலில் இருந்து அந்த ஆலயத்தை நோக்கிய அந்த சுகமான அனுபவம் யாருக்குமில்லை
உணவை மட்டும் கொண்டு சென்று ஆற்றில் 2 அடி தோண்டி நீர்பருகிய காலமெல்லாம் போய் , அந்த மணலும் போய் இன்று வெற்றுபாறையில் வெற்று பாட்டில்களை வீசி வருகின்றார்கள்
இதெல்லாம் கண்டு நிச்சயம் அந்த ஆற்றின் ஆன்மா அழுதுகொண்டே இருக்கும்
அழ ஒரு காலம் உண்டென்றால், சிரிக்கவும் ஒரு காலம் உண்டு
அந்த ஆறு இன்று வரண்டு விட்டாலும், இன்னொரு நாளில் அதன் பழமையான காலம்படி ஆண்டுமுழுக்க செழித்து ஓடும், அந்த மலையில் அதன் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு அதனை மீட்டெடுத்தல் வேண்டும்
வந்தது மறையும், சென்றது திரும்பும் என்பது உலகவிதி, இது ஆற்றுக்கும் உண்டு.
ஆற்றை மீட்டுவிடலாம், காலம் வரும். நிச்சயம் வரும்
ஆனால் அந்த மணலை மீட்டெடுப்பது யார்?ஆற்றின் உயிர் நிச்சயம் அந்த மணல்தான்.
ஆற்றினை திருப்பி கொண்டுவந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உயிரை திருப்பிவிடலாம் , வருங்கால சந்ததிக்கு பாதுகாப்பாக விட்டுவிட்டு செல்லலாம்
தமிழகத்தில் காக்க வேண்டிய ஆறுகளில் நம்பியாற்றுக்கு மிக முக்கிய‌ இடம் உண்டு

No comments: