Thursday, April 12, 2018

தமிழர் உரிமைக்காக போராடவராதவன் தமிழனா? அவனை/அவளை அடித்தால் என்ன தப்பு?

தமிழர் உரிமைக்காக போராடவராதவன் தமிழனா? அவனை/அவளை அடித்தால் என்ன தப்பு? அவர்கள் மீது செறுப்பு வீசினால் என்ன குற்றம்? என வக்கணை பேசும் அறிவுசீவிகளே, நடுநிலைகளே, பெரியாரியரே, அம்பேட்காரியரே, மார்க்சியரே இன்னுமுள்ள முப்பத்து முக்கோடி முற்போக்காளர்களே தன்னை சகமனிதனாக கூட மதிக்கமறுக்கும் சமூகத்தை தலித்துகள் அடிக்கவேண்டுமானால் சாதித்திமிர்பிடித்த மனிதர்கள் மீது செறுப்பெறியவேண்டுமானால் எத்தனை கோடி பேரை அடிக்க வேண்டும்? எத்தனை கோடி செறுப்புகள் தேவைப்படும்? தலித்துகள் யாரும் இன்னும் அப்படி அடிக்கப்புகவில்லையே? பல தலித்துகளால் இன்னும் அவர் சொந்தக்காசில் வாங்கிய செறுப்பை தம் சொந்தக்கால்களில் அணிந்து ஊர்த்தெருக்களில் நடக்கவே முடியாதபோது அவர்கள் எங்கே செறுப்பால் அடிப்பது? அம்பேட்கரும் பெரியாரும் அவர்களை ஒருநாளும் அப்படி செய்யச்சொல்லவில்லையே? இன்னும் சட்டத்திற்குட்பட்டுத்தானே அவர்களின் சமத்துவத்துக்கான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது? அந்த சட்டத்தையும் நீர்த்துப்போகச்செய்யும் அதிகார எல்லை மீறிச்செயற்படும் உச்சநீதிமன்றமுள்ள ஒரு நாட்டில்
என்றேனும் நீவிர் தலித்துகளின் சமத்துவ போராட்டத்தை ஆதரித்தீர்களா? அல்லது அம்பேட்கர், பெரியாரை அஹிம்சாமூர்த்திகள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ கொண்டாடியிருக்கிறீர்களா? இல்லையே? அப்படியிருக்க இதென்ன தமிழரின் உரிமைக்காக தறுதலைத்தனத்தை ஊக்குவிக்கும் முற்போக்கு முகமூடி? தற்குறித்தனம், தறுதலைத்தனம், இலக்கற்ற தாக்குதல், எளியவர் மீதான வன்முறை, கும்பல் கலாச்சாரம் இவையெல்லாமே வெகுஜன விரோத அரசியலே. அவை எதன்பேரால் நிலழ்த்தப்பட்டாலும். யார் அதை செய்தாலும். இதிலெல்லாம் நீக்குப்போக்காக இருந்தால் நீங்கள் காந்தியின் படுகொலையை செய்த, நியாயப்படுத்திய, கொண்டாடிய கொலைகார அரசியலை பிரதியெடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இனியேனும் தெளியுங்கள். அரசியல் பாசிஸத்தின் அடிப்படை குணமே அது தன்னை ஆதரித்து வளர்த்தவர்களையே முதலில் பலிவாங்கும். ஜெர்மனி, ஈழம், இந்துத்துவம் மூன்றிலும் அது தான் நடந்தது. தமிழ்த்துவத்தின் பேராலும் அதுவே நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் அறிகுறியே நேற்றைய அசிங்கம்.

No comments: