Sunday, June 16, 2019

திராவிடம் அறிவோம் (86)

திராவிடம் அறிவோம் (86)

அண்ணாவுக்கு “அறிஞர்” என்ற பட்டம் அளித்தது யார்?

1947ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டங்களில், அண்ணாவின் பெயரோடு “அறிஞர்” எனும் முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படலாயிற்று.

1948ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களான தி. சடகோபனும் அ. ந. கனகசபையும் ‘அறிஞர் அண்ணாதுரை’ எனும் தொகுப்பு நூலை வெளியிட்டனர். இந்நூலில் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்கள் அண்ணாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்து வழங்கினர்.

அறிஞர் அண்ணா எழுதி 1949இல் வெளிவந்த நல்லதம்பி, வேலைக்காரி போன்ற திரைப்படங்களிலும் ‘அறிஞர் அண்ணாதுரை’ என்றே அவரது பெயர் திரையில் காட்டப்படுகிறது.
தி.மு.க.வின் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்த இரா. நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் ஏட்டில், அவரால் இதற்கான விடை வெளியிடப்பட்டிருக்கிறது.
“அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சிலும், எழுத்திலும் திளைத்து, அவரது அறிவாற்றல் மேம்பட்டுத் திறனைக் கண்டு வியந்து, உவகையால் பொங்கி எழுந்த ஆயிரமாயிரம் உள்ளங்களிலிருந்து அன்பு வடிவாய் வெளிக்கிளம்பிய அரிய பாராட்டுச் சொல்தான் அறிஞர் என்பது. இன்ன இடத்தில் இன்னாரால் முதன்முதலாகச் சொல்லப்பட்டது என்று கண்டறிந்து கொள்ள முடியாத வகையில், அவரது அறிவாற்றல் திறனைக் கண்டறிந்து கொண்ட எல்லோராலும் ஒருமித்து எழுப்பப்பட்ட ஒரு பெரும் உவகைச் சொல்தான் ‘அறிஞர்’ என்பது”.

இதிலிருந்து, எந்தத் தனிமனிதரோ அமைப்போ அண்ணாவுக்கு ‘அறிஞர்’ எனும் பட்டத்தை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.

No comments: