Wednesday, June 19, 2019

*ஏண்டா வெங்கட்ட நாயக்கா!*

*ஏண்டா வெங்கட்ட நாயக்கா!*




ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சுமார் 30, 35 வருடங்களுக்கு முன்பு, எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர் பிரபல வியாபாரி. சுமார் 100, 150 ரூபாய் 'இன்கம் டாக்ஸ்' கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் ரூ. 12½ இ ரூ. 15 வரை மாதச்சம்பளம் உள்ள முனிசிபல் பில் கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமாக ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக்கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படி கூப்பிட வந்தால் அவனைக்கண்டதும் என் தகப்பனார் எழுந்து ' ராவாலராவாலதேவடா' 'வரவேணும் வரவேணும் ஸ்வாமீ' என்று இரு கைகூப்பிக் கும்பிட்டு, உட்காரச்சொல்லிவிட்டு, நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு, 'ஏமிரா, வெங்கிட்ட நாயுடு! போத்தம்மா ஆ இண்டினி குசேதானிக்கி ? - ' ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டை பார்க்கப்போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ' ஆஹா ' என்று சொல்லி வஸ்திரத்தை தலையில் பூட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டுவிடுவார். சுற்றிவிட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி, வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி, ஒரு பையனிடம் கொடுத்து, ' சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டு வா' என்று சொல்லி வழி அனுப்பினார். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பான், நாயிலும் கீழாக மதித்து ஆடா புடாவென்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். அன்றைய நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சுயமரியாதை இயக்கத்திற்க்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும், மத உணர்ச்சியும் எப்படி இருந்தன, இப்போது எவ்வளவு மாற்றமடைந்துள்ளன என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும்.

-- தந்தை பெரியார்
[காஞ்சிபுரத்தில், 1.3.1938 ல்]
தலைமையுரை 'குடியரசு' .
பதிப்பு :
6.3.1938

No comments: