Monday, July 23, 2018

கருப்பு ஜூலை 02

அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.
தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.
அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.
ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.
தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.
வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.
கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.
உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"
உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.
இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.
நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.
இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.
போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை
ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.
புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.
இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.
சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.
ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?
ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.
அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.
ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.
1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.
வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.
ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.
ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.
அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.
அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.
ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கலைஞரும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌
"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"
கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.
அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.
சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.
அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.
மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை
இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.
இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்
அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"
அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.
அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.
பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.
சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது. ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை
சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.
அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்
இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.
இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.
முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக அன்னை இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.
அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.
தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும்.

No comments: