Friday, July 27, 2018

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?
ஆம், வேறு வழியில்லை. எல்லாவற்றிற்குமே இவர்கள் இப்படித்தான் காத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் தானாக நடந்தால்தான் உண்டு. நடத்திக் காட்டுகின்ற வல்லமை அவர்களிடம் இல்லை. எதிர்காலத்திலும் அது வரப் போவதும் இல்லை.
காணி வேண்டுமா? காணாமல் போனவர்கள் நிலை தெரிய வேண்டுமா? அதிகாரப் பகிர்வு வேண்டுமா? எதுவும் தமிழர்களின் போராட்டத்தினால் வரப் போவது இல்லை. வேறு யாரவது அழுத்தம் தந்து இவை கிடைக்க வேண்டும். அல்லது எதிரியே போனால் போகட்டும் என்று தந்து விட வேண்டும். இதுதான் நிலை. தானாக எல்லாம் நடக்கட்டும் என்று காத்திருக்க வேண்டிய பரிதாபமான நிலையில் ஈழத் தமிழினம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தியாமல், இயற்கையாக வந்தே ஆக வேண்டிய சாவு கலைஞருக்கு எப்பொழுது வரும் என்று சில ஈனத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
கலைஞர் சில ஆண்டுகளாகவே செயற்பட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால் தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சி வலுவோடு இருப்பதற்கான ஏற்பாடுகளை அவர் என்றைக்கோ செய்து முடித்து விட்டார். மிகப் பெரும் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட அவருடைய கட்சி, இன்றைக்கும் மிகப் பெரும் வலிமையோடு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும்.
இன்றைக்கு தேர்தல் நடந்தால், கலைஞரின் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார். இது எல்லோருக்கும் தெரியும். கட்சி மட்டும் அல்ல. கட்சியின் சமூகநீதிக் கொள்கையும் தமிழ்நாட்டில் வலுவோடு என்றைக்கும் இருக்கும். கலைஞரின் சாதனை இது. தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சியும், கொள்கையும் வலுவோடு இருப்பதற்கான அடித்தளத்தை அவர் போட்டிருக்கிறார்.
மறுபுறம் ஈழத் தமிழர்கள் தமது தலைமையை இழந்து பத்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பல குழுக்களாக சிதைவுற்று, தமக்குள் மோதிக் கொண்டு, எல்லாம் தானாக நடக்கும் என்று காலத்தை கழிக்கின்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
அவர் சாவார், இவர் சாவார், முகநூலில் வெடி கொழுத்தலாம் என்று தமது வக்கிரத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பவர்கள், இந்தப் பரிதாப நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படியான வக்கிரபுத்தி படைத்தவர்கள் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது.

No comments: