Tuesday, July 24, 2018

குழந்தை வளர்ப்புக்காக, ஒரு பெண் தன் இயல்பை இழந்து புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாகி விடுகிறாள்

" குழந்தைப் பெறுவதாலேயே பெண்கள் தங்களின் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிட நேர்கிறது. பெண்ணானவள் ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றவுடனேயே விரக்தியடைந்து குழந்தையின் வளர்ச்சிக்கும் புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாக கிடக்கிறாள். பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்கவேண்டியது அவசியமாகும். ஆண் - பெண் இருவரின் சுயேட்சைக்குமே பிள்ளைப்பேறு ஒரு பெரும் இடையூறாகும்"!!! - பெரியார்!!!//
பெரியாரின் இந்தச் சிந்தனையை எப்போது எங்கு, யார் பதிவிட்டாலும் அதில் சில பின்னூட்டங்கள் அதிகம் இடப்படும்.
1.இயற்கைக்கு விரோதமாக பெரியார் யோசித்திருக்கிறார்.
2.இந்த அறிவுரையை பெரியாரின் தாய்க்கு சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
3. மனித இனமே அழிந்து விடும்.
கருக்கலைப்பு,கர்ப்பத்தடை,செயற்கைக் கருத்தரிப்பு எல்லாம் சாதாரணமாகி விட்ட காலத்திலும் இயற்கை விதி பேசுவது செம காமெடி.
மற்றபடி, பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது அவசியம் என்கிற வரிகளை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவதற்குக் காரணமுண்டு.
குழந்தை வளர்ப்புக்காக, ஒரு பெண் தன் இயல்பை இழந்து புருஷனுக்கும் குடும்பத்திற்கும் அடிமையாகி விடுகிறாள் என்கிற வரிகள் நம் மனதைத் தொந்தரவு செய்கின்றன.
உடனே, நம் அன்றாட வாழ்வின் ஒழுங்கு குலையுமோ என்கிற ரகசிய அச்சம் எழுந்து விடுகிறது.
எனவே, இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை ஏன் எழுந்தது என்கிற கோணத்தில் சிந்திப்பதை விட,
இயற்கைக்கு விரோதமானதென முரட்டடி அடிக்கப் புறப்பட்டு விடுகிறது நம் மனம்.
குழந்தை பெற்றாலும் பெண்கள் தங்களின் சுதந்திரம், மானம், அறிவு உள்ளிட்டவற்றை இழக்க நேராத ஒரு சூழல் ஏன் இங்கில்லை என்று யோசிக்கத் துவங்குவதே சரியான அணுகுமுறை.
அதுதான், தற்சார்பற்று ஒடுக்கப்படும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் பற்றி யோசிக்கத் தூண்டும்.
குழந்தை பெற்றே ஆக வேண்டும் அப்போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்கிற கருத்து வன்முறை பெண்ணுடல் மீது செலுத்தப்படுவது தவிர்க்கப் படும்.
குழந்தைப் பேறு என்பது,சமூக/ குடும்ப அமைப்பின் அழுத்தத்தினால் அல்லாமல், ஒரு பெண்ணின் உள்ளார்ந்த விருப்பத்தினால் மட்டுமே நிகழ முடியும் என்கிற சூழல்தான் ஒரு வளர்ந்த சமூகத்திற்கான குறியீடாக இருக்க முடியும்.

No comments: