Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (13)

#திராவிடம்அறிவோம் (13)

தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தைப் பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான். கோயிலில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்டதன் காரணமாக வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களும் அவர்கள்தான்.

 எடுத்துக்காட்டாக 1921இல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அக்கிரமங்களை எதிர்த்துப் பார்ப்பனரல்லாதாரைத் திரட்டிப் போராடிய ஜே.என்.இராமநாதன், டி.வி.சுப்பிரமணியம், ஜே.எஸ்.கண்ணப்பர் ஆகியோர் மீது கல்லடித் தாக்குதல் நடத்தப்பட்டது. மூவர் மீதும் ஏறத்தாழ 300 வழக்குகள் போடப்பட்டன.

 ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்குப் படியேறிச் சென்ற போது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்துப் பாறைகளில் உருட்டிவிடப்பட்டார்கள்.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தையும் இன்றைய தமிழகத்தின் குமரி மாவட்டத்தையும் சேர்ந்த சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து நடந்த கிளர்ச்சிகளில் பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தினரும் பங்குகொண்டனர்.

தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் திருவண்ணாமலைக் கோயிலில் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பர் கோயிலுக்குள் வைத்துப் பூட்டப்பட்டார்.

    கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927இல் சுமார் 1000 அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோயில் நிர்வாகிகள் பூட்டிவிட்டபோதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினர்.

12.8.1928 இல் திருவானைக்கோயிலிலும் 25.6.28இல் திருச்சி மலைக் கோயிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

No comments: