மகாத்மா ஜோதிராவ் பூலே - இவர்தான் மகாத்மா.... இவர்தான் கல்வியின் அன்னை.. இவர்கள் தான் சீர்திருத்த போராளிகள்..
பிராமண ஜாதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட ஜோதிராவ், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதைப் பார்த்த நண்பரின் உறவினர், “சூத்திரனான நீ பிராமண கல்யாணத்தில் பிராமணர்களுக்கு இணையாக ஊர்வலத்தில் வருவதா? எங்களை அவமானப்படுத்திவிட்டாய் நீ” என்று கோபமாக திட்டி, நண்பரின் திருமண ஊர்வலத்திலிருந்து விரட்டிவிட்டார்.
அவமானப்படுத்தப்பட்ட ஜோதிராவ் ஆழ்ந்து சிந்தித்தார். அரசியல் அடிமைத்தனத்தை விட மோசமானது சமூக அடிமைத்தனமும், அதை வலியுறுத்தும் ஜாதி அமைப்பும். அதற்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்தினார். சமூக விடுதலைக்கு வழிவகுக்க அனைவருக்கும் கல்வி, குறிப்பாக பெண்களுக்கு கல்வி தேவை என்று முடிவெடுத்தார்.
1848-ல் பூனாவில் புதன்வார பேட்டையில் தனது நண்பர் பீடே என்பவரது வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார், ஜோதிராவ். இவர்தான் பெண்களுக்காக பள்ளியைத் துவங்கிய முதல் இந்தியர்.
பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே கஷ்டம். அதிலும் பெண்கள் என்றால் மிகவும் கடினம். எனவே, பள்ளியைத் துவங்கி எட்டு மாதம் கூட நடத்த முடியவில்லை.
இதனிடையே தீய சக்திகள் ஜோதிராவின் தந்தையின் மனதைக் கெடுக்க, அவர் மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். பிழைப்புத் தேடி ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தார் ஜோதிராவ்.
ஆரம்பத்திலிருந்தே தன் மனைவிக்கு கல்வியறிவு கொடுத்த ஜோதிராவ், கல்வித் துறையிலிருந்த தன் நண்பரின் உதவி கொண்டு சாவித்ரிக்கு ஆசிரியர் பயிற்சியும் கொடுத்தார்.
தனக்கும் இரண்டாண்டுக்கும் மேலாக கல்வித் துறையில் கிடைத்த அனுபவத்துடன் மீண்டும் 1851 ஜூலை மாதம் 5-ம் நாள் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். 8 பேர்களுடன் துவங்கி சில மாதங்களிலேயே மாணவிகளின் எண்ணிக்கை 48- ஆக உயர்ந்தது.
பூலே தொடங்கிய பள்ளியில் ஆசிரியையாக சேவை செய்ய துவங்கினார் சாவித்ரி பாய். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் இவர்தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்று கொடுத்ததை அறிந்த உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்.
சாவித்திரி பாய் பள்ளிக்கு நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர். சாவித்திரி பாய் ஜோதிராவ் பூலே விடம் புலம்பியதும் “பள்ளிக்கு போகும் போது அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ.. பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் ”என்றார் அவ்வாறே செய்தார்.
தன் கணவர் ஜோதிராவ் புலே செய்யும் சமூகப் பணிக்கு தன்னையும் ஒப்புக் கொடுத்து, ஒரு சக பயணியாக பயணித்து பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை போதித்து சமூக சீர்திருத்தத்தின் பெண் ஆளுமையாக களத்தில் நின்று போராடியவர் சாவித்திரி புலே.
பழமைவாதம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரான சாவித்திரி பட்ட பாடுகள் அளவிட முடியாதவை. சமூகத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் அதே வேளையில், குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளையும் சமாளித்து அவர்களுக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை புரிய வைத்து சமூகப் பணியாற்றியவர் சாவித்திரி.
சமூகப் பணிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்ட சாவித்திரி, உடல் நலமில்லாமல் தனது தாய்வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்து கொண்டார். அப்போது சாவித்திரி தனது கணவர் ஜோதிராவ் புலேவிற்கு எழுதும் கடிதத்தில் தனது சகோதரருக்கும் தனக்கும் நடந்த உரையாடல்களை பதிவு செய்கிறார்.
அதில், சகோதரர் தன்னை நன்றாக கவனித்து வருகிறார் என்று எழுதும் சாவித்திரி, “கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைகளை செய்து குடும்பத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளீர்கள். சமூகத்தில் என்ன பழக்க வழக்கம் இருக்கிறதோ அதனை பின்பற்றுங்கள்.” என்று தனது சகோதரர் சாவித்திரியிடம் கடுமையாக பேசியதை குறிப்பிட்டுள்ளார்.
“ஆடு மாடுகளிடம் நீங்கள் தீண்டாமை கடைபிடிப்பதில்லை. அவற்றை நேசிக்கின்றீர்கள். பாம்புத் திருவிழாவின் போது, பாம்புகளைப் பிடித்து பால் புகுட்டுகின்றீர்கள். ஆனால், உங்களைப் போன்ற மனிதர்களான தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமை கடைபிடிக்கின்றீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? பிராமணர்கள் உங்களை அசுத்தமானவராகவும் தீண்டத்தகாதவராகவும்தான் நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள். தாழ்ப்பட்டவர்களையும் உன்னையும் அவர்கள் வெவ்வேறாக நடத்துவதில்லை” என்று சகோதரின் பேச்சுக்கு சாவித்திரி கோபப்படாமல் பதில் உரைத்ததையும் கடிதத்தில் பதிவிடுகிறார்.
“பெண்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கற்பிக்கிறோம். இதனால் பிராமணர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர்கள் நினைப்பதால்தான், அவர்கள் நம்மை எதிர்கிறார்கள். என் கணவரின் இந்த செயல்பாடுகளுக்கு ஆங்கிலேய அரசு அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கடவுளின் வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் துணையாய் இருக்கிறேன். இந்த வேலைகளை நான் செய்வதன் மூலம் அளவிடமுடியாத மகிழ்ச்சியை அடைகிறேன்” என்று சாவித்திரி தனது சகோதரருக்கு சமூகப் பிரச்சனைகளை புரிய வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதையும் தனது கணவருக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
.
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கடந்து போனது. இந்த சீர்திருத்த தம்பதிகளுக்கு. ஒவ்வொரு மூடப்பழக்கத்தையும் ஒழிக்க களத்தில் நின்று போராடினர்.
.
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கடந்து போனது. இந்த சீர்திருத்த தம்பதிகளுக்கு. ஒவ்வொரு மூடப்பழக்கத்தையும் ஒழிக்க களத்தில் நின்று போராடினர்.
பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது. அந்தப் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் பூலே.
ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார்.
பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே.
பள்ளியை தனியாக துவங்காமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து ஒரு அமைப்பை (டிரஸ்ட்) ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளியை நடத்தினார்.
பள்ளி மாணவியர்களின் கல்வி அறிவை ஆங்கில அரசு அதிகாரிகள் பொதுமக்கள் முன்பாக சோதித்தனர். மாணவியரின் பதில் அவர்களை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. எனவே அரசு மானியமாக ரூ. 75-ஐ கொடுக்கத் துவங்கியது. மேலும் வேறு சில இடங்களில் பள்ளியைத் துவங்கினார் ஜோதிராவ். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒரு பள்ளியும் துவங்கப்பட்டது.
ஜோதிராவின் பணியின் வளர்ச்சியும் அதனால் பெண்களிடையே கல்வியறிவு ஏற்படுவதையும், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுவதையும் சகிக்க முடியாத தீய சக்திகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தன.
ரமோஷி, கும்பார் என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் (அந்தக் காலத்திலேயே) கொடுத்து ஜோதிராவை கொலை செய்ய அனுப்பினர். இரவில் சத்தம் கேட்டு எழுந்த ஜோதிராவ், அவர்களை யார் என்று கேட்டார். விஷயத்தைத் தெரிந்துகொண்ட அவர், ‘என்னுடைய மரணம் தாழ்த்தப்பட்ட உங்கள் வாழ்வில் வளத்தைச் சேர்க்கும் என்றால் அதுவும் நல்லதே ’என்று வெட்ட வசதியாக தலையை நீட்டினார். அவரது பேச்சும் செயலும் கொலையாளிகளின் உள்ளத்தை மாற்றின.
பின்னர் அவர்கள் ஜோதிராவ் நடத்திய மாலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியறிவும் சமூக விழிப்புணர்வும் பெற்றனர். அதில் ஒருவரான ரமோஷி பின்னர் ஜோதிராவின் பாதுகாவலராக மாறி அவருடனே இருந்தார். கும்பார் பின்னர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். ஜோதிராவ் ஆரம்பித்த ‘சத்யசோதக் சமாஜம்’ அமைப்பின் தூணாக விளங்கினார்.
பெண்கல்வி மட்டுமன்றி விதவா மறுமணம் போன்ற புரட்சிகரமான கொள்கைகளை முன்னோடியாக நடைமுறைப்படுத்திக்காட்டிய ஜோதிராவ் இப்புரட்சி கருத்துக்களை பரப்ப சத்யசோதக் சமாஜத்தை 1873 செப்டம்பர் 24-ல் துவங்கினார்.
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் முதன்முதலில் அமைப்பு ரீதியாகத் திரட்டி, சங்கம் அமைத்துப் போராடி உரிமைகளை பெற்றுத்தரக் காரணமாக இருந்தவர் ஜோதிராவும், அவர் ஆரம்பித்த சத்ய சோதக் சமாஜமும் தான்.
சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ஜோதிராவுக்கு பெரிதும் கடன்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது 60-வது வயது நிறைவின்போது 1888-ல், மிகப் பெரிய மாநாடு நடத்தி அதில் அவரை ‘மகாத்மா’ என்று போற்றி வணங்கினர்.
சமத்துவம், அறிவு, மனித நேயம் என்ற மூன்றையும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டி, மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட ஜோதிராவ் புலே 1890, நவம்பர் 28-ம் நாள் மறைந்தார்.
1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.
பிராமண எதிர்ப்பாளன், இந்துமத விரோதி, சண்டாளன், பண்பாடு தெரியாதவன் என்றெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் உயர்சாதி மக்களால் தூற்றப்பட்டவர். பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், அரிஜனர் கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களது சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக பாடுபட்ட முன்னோடி.
No comments:
Post a Comment