அது அண்ணா மறைந்த நெருக்கடியான நேரம், அடுத்த முதல்வர் யார் என தமிழகமும் இந்தியாவும் எதிர்பார்த்திருந்த நேரம்
காரணம் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சியினை பிடித்த திமுக, அப்பொழுது பலத்த கவனம் பெற்றிருந்தது. அண்ணாவிற்கு அடுத்தது யார் என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தது
நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன், நடராசன் என்ற பலத்த வரிசையில் 5ம் நபராக இருந்தார் கலைஞர். ஆனால் கட்சியில் கலைஞருக்கே செல்வாக்கு இருந்தது
இதை புரிந்துகொண்ட ராமசந்திரனும் கலைஞர் பக்கம் சாய்ந்தார், கலைஞர் முதல்வரானார். பெரியாருக்கு பெரும் மகிழ்ச்சி
அய்யயோ கருணாநிதியா? என முகம் சுழித்தவர்கள் உண்டு, காரணம் அண்ணா பண்பாளர் என பெயரெடுத்தவர், கல் எறிந்தாலும் பூக்களை சுற்றி வலிக்காமல் எறியும் பக்குவம் அவரிடம் இருந்தது
கலைஞர் தீ போல சுட்டவர், சூறாவளியாய் தாக்கியவர் என்பதால் அவர் மேல் எல்லோருக்கும் ஒருவித நெருடல் இருந்தது
எதை வைத்து அவரை பழிக்கலாம் என்றிருந்தவர்கள், அவரின் நடத்தை சரியில்லை பல திருமணம் செய்தவர், திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றவர் என சாட ஆரம்பித்தனர்
நேரு ஐரோப்பாவில் லேடி மவுண்பேட்டனுடன் ஊர் சுற்றினால் அது சோஷலிசம், ஆனால் கலைஞர் ஒழுங்காக தன் மனைவியோடு குடும்பம் நடத்தினால் அது ஒழுக்கம் கெட்டதனம் என்பது காங்கிரசார் நிலைப்பாடு
அதை தவிர கலைஞர் மேல் குற்றம்சாட்ட அவர்களுக்கு ஒரு விஷயமும் சிக்கவில்லை
ஆட்சிக்கு கலைஞர் வந்தாரே தவிர, கட்சியில் சிக்கல் இருந்தது
ஆம் திமுக தொடங்கும்பொழுது அதற்கு தலைவர் பதவி கிடையாது, பெரியாரே தலைவர் என் காலி நாற்காலியினை காட்டினார்கள்
பொதுசெயலாளர் பதவி இருந்தது, அவை தலைவர் பதவி இருந்தது, தலைவர் பதவி காலியாகவே இருந்தது
இந்நிலையில் சக்திவாய்ந்த பொதுசெயலாளர் பதவியினை பிடிக்க நெடுஞ்செழியன் காய்நகர்த்தினார், முதல்வர் பதவி கிடைக்கா நிலையில் இப்பதவி தனக்கே என்பதில் அவர் உறுதியாக இருந்தார்
இவர்களை கவனித்துகொண்டிருந்த பெரியார் தனக்கே உரித்தான புத்தி கூர்மையில் ஆலோசனை சொன்னார்
கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற சிக்கலில்தான் காங்கிரஸ் தோற்கடிக்கபட்டது, இதனால் சக்தியும் ஆற்றலும் வாய்ந்த ஒருவரிடம் இருபதவியும் இருக்க வேண்டும் என தன் பாணியில் சொன்னார்
பஞ்சாயத்து செய்ய மறுபடியும் ராமசந்திரன் வந்தார், பெரியாருக்கு அது பிடிக்கவில்லை ராமசந்திரன் மேல் அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததே இல்லை
சிக்கலை தீர்க்க திமுகவின் விதி திருத்தபட்டது, அவை தலைவர் பதவி திமுக தலைவராக்கபட்டது. பொதுசெயலாளர் பதவி டம்மியாக்கபட்டது
நெடுஞ்செழியனுக்கு அவர் விரும்பிய பொதுசெயலாளர் பதவி கொடுக்கபட்டது, ஆனால் அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாதபடி பல் பிடுங்கபட்டது
முதல்வர் பதவியினை நெடுஞ்செழியனிடமிருந்து தட்டிவிட்டோம், அவர் சக்திவாய்ந்த பதவியில் இருந்தால் நம்மை கடிக்காமல் விடமாட்டார் என தந்திரமாக அவர் பல்லை பிடுங்கினார் கலைஞர்
ஆயினும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க தவறவில்லை
இந்த கட்சி சீர்திருத்தத்தில் இன்னொரு இமாலய தவறு நடந்தது, கலைஞர் செய்த அந்த மாபெரும் தவறே பின்னாளில் திமுக எதிர்கொண்ட சிக்கல்களுக்கு எல்லாம் அதுவே காரணம்
ஆம், கட்சியின் பொருளாளர் பதவிக்கு செல்வரஜ் என்பவரும், தேவசகாயம் என்பவரும் போட்டியிட்டனர்
ஆனால் ராமசந்திரனை பொருளாளர் ஆக்கினார் கலைஞர், அவரை அவ்வளவு நம்பினார்
எல்லோரும் ஆதரிக்க பெரியார் மட்டும் தள்ளி இருந்து புலம்பினார்
"கருணாநிதி எதிலோ கால்வைத்துவிட்டார், அய்யோ இது பெரும் சிக்கலை பின்னாளில் கொடுக்கும்"
பின்பு பெரியார் கணித்ததே நடந்தது
இதே ஜூலை 27, 1969ல் திமுக தலைவரானார் கலைஞர். திமுகவின் முதல் மற்றும் இன்றுவரை உள்ள ஒரே தலைவர் அவரே, 50 வருடமாக அவரே
நிச்சயம் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி என்ற வார்த்தைகள் அவர் காதில் விழப்போவதில்லை,
அவ்வகையில் யாருக்கும் இல்லா வரலாறு அம்மனிதனுக்கு இருக்கின்றது
No comments:
Post a Comment