Wednesday, May 23, 2018

எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதேன்

ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களை ஒடுக்க தமிழக காவல்துறை தான் பயன்படுத்தப்பட்டனர். ஒன்றிரண்டு ஆங்கிலேய ஜெனரல்கள் உயரதிகாரிகள் மட்டுமே அவர்களை இயக்குவார்கள்.
தமிழன் மீது விழுந்த அடியை எல்லாம் பிரிடிஷ் அடித்த அடியாகத் தான் பார்க்கப்பட்டது. தமிழனை தமிழன் உதைத்தான் அய்யகோ என்று எதிர்ப்புக்குரலை மடைமாற்றிவிடும் வேலையை யாரும் செய்யவில்லை.
மாறாக ஆங்கிலேயர்களை எதிர்க்க மேலும் மேலும் குரல் வலுப்பெற்றது.
ஆனால் இப்பொழுது திட்டமிட்டு லாவகமாக போலீஸ் ஒருவரின் ஃபோட்டோ பகிரப்பட்டு வருகிறது. சுட்டது அவர் தான். ஆனால் என்னவோ இது முழுவதையுமே அவர்மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தியதைப் போல் ஒரு பிம்பம் நிறுவப்படுகிறது.
எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதேன்?
தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள், வஜ்ரா வாகனம் ரப்பர் தோட்டாக்கள் அதன் பின்னர் தான் துப்பாக்கிச் சூடு என "protocol" இருக்கையில் திடுமென துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பாய்வதை எப்படி அந்த ஒற்றை போலீஸ்காரர் திறனாக்கம் செய்திருக்க இயலும் என்பது இங்கே தொக்கி நிற்கும் கேள்வி.
"ஒருத்தனாவது சாவனும்" என்ற குரல் கேட்கும் ஒலி/ஒளித்துணுக்கு வெளியாகிறது. காவலர்கள் ஏறி நின்று குறிப்பார்த்து சுடுகிறார்கள். சிறுமி ஒருவர் பலியாகிறார். முழங்காலுக்கு கீழ் எல்லாம் சுடாமல் முகம், மார்பு பகுதிகளில் குறிவைக்கப்படுகிறது. தோட்டா பாய்கிறது. ரத்த பிசுபிசுப்பு அந்த உடல்களில் காய்வதற்கு முன்னரே "நீ எல்லாம் 10 லட்சத்துக்கு தான் வொர்த்து " என்று கெக்கிலி கொட்டி கொக்கரிப்புடன் நீலிக்கண்ணீர் சிந்தி ஒரு அறிக்கை வருகிறது. ஆளும் கட்சியை "வைத்திருக்கும்" தேசிய கட்சியில் ஒருவர் இதை தவிர்க்க முடியாது என்று துள்ளலும் எள்ளலும் கலந்து பதிவிடுகிறார். அடுத்த நாளே இன்னொரு இளைஞர் சுடப்படுகிறார்.
மேலும் கருப்பு சட்டை அணிந்த காரணத்திற்காகவே போராட்டத்துக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத ஒருவர் சுடப்படுகிறார். காவல்துறை மருத்துவமனைகளில் புகுந்து வெறியாட்டம் ஆடுகிறது.
தூத்துக்குடியை பரமகுடி 2.0 ஆக்கியதைத் தொடர்ந்து நடுகுப்பம் 2.0 ஆக்குகிறது காவல்துறை.
நாளை இன்னும் எத்தனை உயிர்கள் போகும் என்று தெரியாத நிலையில் இணைய சேவையை தூத்துக்குடி, கன்னியாரியில் துண்டிக்க சொல்கிறார் இ.அ.ப நிரஞ்சன் மார்டி. ( காஷ்மீரில் இணையம் துண்டிக்கப்பட்டபோதும், தொலைதொடர்பு வசதி நிறுத்தப்பட்டபோதும் ஏன் இவ்வளவு புலம்புகிறீர்கள் என்று அங்கலாய்த்தவர்கள் இஃதை உற்றுநோக்கவும்).
சொல்லி வைத்ததாற்போல் தினமலர், வேதவிற்பன்னர்கள் இதை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் இருக்குமா தெரியாது. ஆனால் நாளை பாயப்போகும் தோட்டாக்களில் வெனஸ்டா, காலியப்பன், அனிதா, லூர்துமேரி என ஏதாவது ஒரு பெயர் இன்றே எழுதப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.
இதை எல்லாம் கிடுகிடுவென ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அந்த ஒற்றைப் போலீஸ்காரரோ, அல்லது 10 பேர் கொண்ட குழுவோ இதையெல்லாம் செயல்படுத்தவில்லை. லகான் உண்மையில் யார் கையில்?
திட்டமிட்டு இது போலீசாரின் சதி மட்டுமே என்று பரப்பும் போக்கை யார் துவங்கியிருப்பார்கள்?
இது தான் தமிழகத்தில் போலீஸ் செய்யும் முதல் கொலையா?
கர்த்தாக்களை விட்டுவிட்டு ஏன் கருவிகளை மட்டும் சாடிக்கொண்டிருக்கிறோம்?
இதற்கு Red herring fallacy என்று தலைப்பிடலாம் அல்லது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு வாக்கியத்தை வைத்துக்கொள்ளலாம்.
யாருடைய சோதனைச்சாலை எலிகள் நாம்?
யாரை நோக்கி குற்றம்சாட்ட கைகள் நீளவேண்டும் என்றுகூட தெரியாத "ஆஃபாயில்" சந்ததியா நாம்?.
சமூக வலைதளம் இல்லாததால் விடுதலைப் போராட்டம் வென்றது.
இனி இங்கே வரப்போகும் எந்த போராட்டமும் வெல்லாமல் வீணாய் போவதற்கான காரணமும் சமூக வலைதளமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் அரச பயங்கரவாதம் என்ற மலையை நம் கண்ணிலிருந்து மறைக்க காவலாளி ராஜ் திலீபன் என்ற தூசு மட்டுமே போதுமானதாய் இருக்கிறது..
மீண்டும் கேட்கிறேன்.
யாருடைய சோதனைச்சாலை எலிகள் நாம்?

No comments: