Tuesday, May 22, 2018

மக்களின் கோபம் வெல்லட்டும், நீதி தமிழக மக்களுக்கு கிடைக்கட்டும்

தூத்துகுடியில் நடந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்விற்கு கலவரம் என்றும், அதை அரசு அடக்குகின்றது அதில் சிலர் பலி என செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
திருத்தபட வேண்டிய வரி இது, மக்கள் தங்களுக்குள் அடித்தால் மட்டுமே அது கலவரம், இது ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற மக்களின் குரலுக்கு அரசு தன் ஆயுதபடை மூலும் அரக்கதனமாக தடை செய்யும் கொடூர சம்பவம்
அதாவது இது எங்களை கொல்லும் ஆலை என மக்கள் தடுத்தால், ஆலையால் சாவுங்கள் இல்லை தடுத்தால் நாங்கள் சுட்டுகொல்வோம் என மிக பகிரங்க கொலையினை செய்திருக்கின்றது அரசு
நிச்சயம் இதில் தவறு யார் பக்கம்? பழிபாவம் யார் பக்கம் என்றால் நிச்சயம் அரசின் பக்கம்
மக்கள் முதலில் அழுது கேட்டார்கள், மன்றாடி பார்த்தார்கள், அடிக்கடி பெரும் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்
கத்தினார்கள், கதறினார்கள், கெஞ்சி கேட்டார்கள் இறுதியாக வேறு வழியின்றி கூடி வந்தார்கள். வந்து அடிபட்டு செத்திருக்கின்றார்கள்
ஒருவாரமாகவே பெரும் போராட்டம் நடத்த அவர்கள் தயாரானார்கள், உளவுதுறை மூலம் அரசுக்கும் செய்தி சென்றது ஆனால் கன்னட தேர்தலுக்கு வாழ்த்து பின் கவலை என இருந்த அரசு அதை கண்டுகொள்ளவில்லை
ஆனால் மக்கள் சொல்லிகொண்டேதான் இருந்தார்கள், மும்பையில் விவசாயிகள் திரண்டது போல பக்கத்து கிராமங்கள் சுமார் 50 கிராமம் திரண்டுவந்தது
சத்தியமாக திடீரென வரவில்லை, சொல்லிவிட்டுத்தான் வந்தார்கள்
அரசு முன்பே பேசியிருக்க வேண்டும் அல்லது வந்தவர்களிடம் சில உறுதிமொழிகளையாவது சொல்லியிருக்க வேண்டும்
மாறாக அடித்துவிரட்ட உத்தரவிட்டது பெரும் சாவில் முடிந்திருக்கின்றது
இதற்கு முழு காரணம் இந்த அரசு, இது ஒன்றே காரணம். இந்த ரத்தபழியும் அதன் பாவமும் கதறலும் அவர்களையே சேரும்
ஸ்டெர்லைட் வந்த நாள் முதலே சர்ச்சை, சரி 20 வருடம் முடிந்து சனியன் கிளம்பட்டும் என்றால் மறுபடியும் அது பிரமாண்டமாக வளர ஒப்பந்தம் நீட்டித்தால் யாருக்கு கோபம் வராது
அவர்கள் இந்நாட்டு மக்கள், இந்த அரசினை தேர்ந்தெடுத்த மக்கள் , அதனிடம் இந்த நாசகார ஆலை வேண்டாம் என சொல்ல வந்திருக்கின்றார்கள்
அரசு அவர்கள் கோரிக்கைக்கு செவிமடுத்திருந்தால் இச்சோகம் நடந்திருக்காது
நிச்சயம் ஸ்டெர்லைட் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு கொஞ்சமும் குறைவானதல்ல, அது ஒரே நாளில் கொன்றது, ஸ்டெர்லைட் கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றது
அவ்வளவுதான் விஷயம்
போபால் ஆலை மூடபட்டது என்றால் ஸ்டெர்லைட்டும் மூடபட்டே தீரவேண்டும்
இந்த தொழிற்ச்சாலைகள் தேவை சந்தேகமில்லை ஆனால் இப்படி அபாயகரமான தொழிற்சாலைகள் அமைவதில் இனி ஏகபட்ட கட்டுபாடுகளும் பல நிபந்தனைகளும் அமையபெற்று மக்கள் நலன் காக்கபட வேண்டும்
இந்த கொடூர சம்பவம், அரச அடக்குமுறை தமிழகமெங்கும் பெரும் கிளர்ச்சியினை ஏற்படுத்திற்று, ஆங்காங்கே மக்கள் கடும் கோபத்தில் சாலைக்கு வருகின்றார்கள்
இந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கூட மக்களை காப்பாற்றமுடியாத, மாறாக கொல்ல துணியும் அரசு இனி எதற்கு
குருமூர்த்தி சொன்ன அந்த வார்த்தையின் அரசு , கையாலாத அரசு உடனே பதவி விலகட்டும். இப்படி மக்கள் மாள்வதற்கு ஒரு அரசா? அதற்கொரு முதலமைச்சரா?
அரசு பதவி விலகட்டும், நாசகார ஸ்டெர்லைட் நாசமாகட்டும்
தங்கள் மண்ணில் தங்கள் உரிமைக்காக தங்கள் அரசாலே செத்த அந்த மக்களுக்கு கண்ணீருடன் கூடிய ஆழ்ந்த அஞ்சலிகள்
அவர்கள் தியாகத்திற்கு ஈடாக அந்த ஸ்டெர்லைட் மூடபடட்டும், அதன் வாசலில் இவர்களுக்கு நினைவு சின்னம் எழும்பட்டும்
கொலைகார ஸ்டெர்லைட்டும், அந்த கொலைகார கூட்ட அடியாளாக உருவாகி நிற்கும் இந்த கூலிப்படை அரசும் ஒழியட்டும்
மக்களின் கோபம் வெல்லட்டும், நீதி தமிழக மக்களுக்கு கிடைக்கட்டும்
கூலிப்படை அரசு ஒழிக....

No comments: