Thursday, May 24, 2018

எது நம் மண்? யார் நம் சகோதரர்? எது நம் தேசம்? அகர்வால்களின் நிலம் இது, நம் நிலம் அன்று!

அகர்வால்களின் நிலம் இது, நம் நிலம் அன்று!
நாம் என்னவாக மாறினாலும், படைப்பாளிகளாக, மருத்துவர்களாக, சமூகப்பொறியாளர்களாக, அரசியல் வல்லுநர்களாக, ஊடகவியலாளர்களாக, சமூகச் சீர்திருத்தவாதிகளாக என்னவாக மாறினாலும், நம் முதுகை அழுத்தும் சாதிய இருள் புழுதியினை உதறி எழுந்து நம்மை என்னவாக மாற்றிக்கொண்டாலும், இது அகர்வால்களின் நிலம் தான், மக்களே!
நான் அடிக்கடி சொல்வதுண்டு, கல்யாணத்திற்கெல்லாம் பணத்தை விரயமாக்காமல் செல்வம் சேர்த்துக்கொண்டு எப்படியாவது வேறு நாடுகளில் சென்று படியுங்கள் என்று. இரண்டு வகைகளில் இது நம்மை மாற்றும். ஒன்று, நம் சாதி சார்ந்த அழுத்தங்களையும், சமூகம் நம்மிடம் எதிர்பார்க்கும் சாதிய வழக்கங்களையும் உதறிவிட முடியும். இன்னொன்று, இங்கேயே இருந்து நான்கு முழம் ஏறி இரண்டு முழம் சறுக்காமால் ஒவ்வொரு கட்டமாக நிரந்தரமான முன்னேற்றத்தை அடைய முடியும்.
இந்த தேசத்தில் இருந்தால், நாம் யாராக மாறினாலும், அவர்கள் பார்வையில் கருப்பர்கள் தாம், தீண்டத்தகாதவர்கள் தாம். கண்டால், சுடத்தான் செய்வார்கள். நம் முன்னேற்றத்தை, முற்போக்கைச் சகித்துக் கொள்ளமுடியாத வெறுப்புணர்வைக் கசிய விட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.
இது நம் மண் இல்லையா? நாம் இந்த மண்ணின் மக்கள் இல்லையா? இந்தக் கேள்விகளை நாம் உதறிவிடவேண்டுமா? என்று கேட்டால், தூத்துக்குடி படுகொலைகளுக்குப் பிறகும், நமது இயலாமைகளுக்குப் பிறகும், நம் சகோதரர்களை விட்டே நம் கண்களைக் குத்திய அவலத்திற்குப் பிறகும் எது நம் மண்? யார் நம் சகோதரர்? எது நம் தேசம்? எல்லாம் மாயையான கயிறுகள்.
இங்குள்ளவர்களுக்கும், அகர்வால் போன்றோருக்கு அடிமை வேலை செய்வதில் தான் குஷி. அவர்கள் கொடுக்கும் துப்பாக்கியை எடுத்து நம்மைச் சுடுவதில் கொஞ்ச நேரம் அதிகாரப்பசியையும், சுயவெறுப்பையும் மற்றவர்கள் மீது சுட்டுச் சுட்டுத் தீர்த்துக்கொள்வார்கள்.
நம் மரபணுக்களில் ஏறிய அடிமை உணர்வை உதறவும், அகர்வால்கள் போன்றோருக்குச் சமத்துவம் கற்பிக்கவும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், நம் மக்களைப் பூண்டோடு அழித்துவிடுவார்கள். நம் மக்களின் பொருளாதார நிலை ஓங்காதவரை, இங்கிருக்கும் இயற்கை வளங்களைப் பேணும் பொறுப்புணர்வை, தகுதியை நாம் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இது தான் நிலை.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்று சொல்வார்கள். உண்மையில், சமூகநிலையில் உயர்ந்த நம் மக்களே, சமூகப்பொறுப்பின்றி ஆகிவிடுவதால் தான் சமூகத்தில் ஒரு பாதி அவர்களுக்காகவெல்லாம் சேர்த்துப் போராடி உயிரை விடுகிறார்கள்.
நாம் உண்மையில் யார் மீது கோபப்படவேண்டும்?

No comments: