Tuesday, May 22, 2018

அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு

வழக்கறிஞர் சு. கலைச்செல்வன்
இராமமூர்த்தியின் பதிவு #வதந்திகளுக்கு_முற்றுப்புள்ளிவையுங்கள்..
காலையில் பத்து மணி அளவில் போராட்டக் குழுக்கள் அனைவரும் தத்தமது போராட்டக் களத்திலிருந்து மிகவும்அமைதியான முறையில் ஒருங்கிணைந்து மாதா கோவில் வளாகத்தில் கூடிய பிறகு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டோம்.. மாதா கோவிலுக்கு செல்லும் முன்னரே நாங்கள் சென்ற புதுத்தெரு போராட்டக் குழுவை தடுக்க முற்பட்டனர்.. வாக்குவாதம் செய்து முன்னேறினோம்..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியெங்கும் பல காவல்துறை வாகனங்களை வைத்து தடுக்க முற்பட்டனர்.. அனைத்து தடைகளையும் தகர்த்துக் கொண்டே முன்னேறி சென்றோம் இளைஞர்கள், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும்.. முக்கியமாக சில திருநங்கைகள் உட்பட..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையில் இருக்கும் பாலத்திற்கு கீழே முதன்முதலில் பெட்ரோல் குண்டுகளை வீசியது காவல்துறை.., அதையும் மீறி முன்னேறினோம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்ணீர் புகை குண்டுகளை தொடர்ச்சியாக வீசியதும் காவல்துறையே..
அதையும் மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க., போனது மட்டும் தான் உண்மை, உள்ள ஒரு மிகப்பெரிய படையே காத்திருந்தது.. அங்கு கொளுத்தப்பட்டதாக கூறப்படும் வேன் மக்கள் கொளுத்தியது நிச்சயமாக அல்ல.. அரசே திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க இவ்வாறு தீ வைத்துவிட்டு, துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணமாக அதை கூறி உயிர்ப்பலிகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது கையாலாக அரசு..
எத்தனை பெட்ரோல் குண்டுகள், எத்தனை கண்ணீர் புகை குண்டுகள், எத்தனையெத்தனையோ துப்பாக்கிச் சூடுகள் அத்தனையும் தாண்டி மீண்டும் மீண்டும் முன்னேறி உள்ளே சென்று மாண்டு மாண்டு வெறும் உடலாய் மட்டும் திரும்பினர் நம் உறவுகள்..
அவர்களிடம் இருந்த வலி, வேதனை, கையறு நிலை, ஆதங்கம், வெறுப்பு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடியே ஆகனும்கிற வெறி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடைசி சொட்டு இரத்தம் வரை ஊறியிருந்ததை பார்க்க முடிந்தது..
பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்களை மட்டும் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.. நாங்கள் திரும்பி வரும் வழியில் சந்தித்த அடக்குமுறைகளோ உட்சபட்சம்.. இரண்டு கிலோ மீட்டரில் சேர வேண்டிய இடத்திற்கு 8கிலோமீட்டர் அளவில் சுற்றி வந்தும், மெயின் ரோட்டிற்கு வந்தபோது, யதேச்சையாக வருவது போல் வந்து பெண்கள் என்றும் பாராமல் (வயதான பெண்கள், குழந்தைகள் உட்பட) கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய ஏவல்துறை..
இன்னும் அவர்களின் அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு..
மாண்டு போவோம், ஆனால் மீண்டு வருவோம்.. உங்கள் அடக்குமுறையாலும் ஒடுக்குமுறையாலும் எங்கள் உயிரை மட்டும் தான் எடுக்க முடியும்.. எங்களின் சந்ததியை காக்கும் போராட்ட வெறியை சிறு துளி கூட உங்களால் சீர்குலைக்க முடியாது..
பிகு: துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடந்த வாகனங்கள் மீது கல்லெறிந்தது உண்மைதான்.. அப்புறம் நீ துப்பாக்கி குண்டால எங்க மார்பை துளைச்சா உனக்கு பூவா பரிசளிப்போம்..

No comments: