Tuesday, May 22, 2018

பொறுமை ஒருநாள் புலியாகும்... அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்

மராட்டியம், கோவா போன்ற மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்ட நச்சு ஆலைதான் நாசகார ஸ்டெர்லைட்...
ஒடிசா, ஜார்கண்ட் போன்ற கனிம வளம் மிகுந்த பகுதிகளில் பல்வேறு பாக்சைட் தாது மலைகளை கபளீகரம் செய்ய, மத்திய அரசோடு புரிந்துணர்வு செய்து கொண்டு, அங்குள்ள ஆதி வாசி மக்களை நர வேட்டையாடுகிற வரலாறும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்துகிற வேதாந்தா குழுமத்திற்கு உண்டு...
மத்திய நிதி அமைச்சராகும் வரை அக்குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்து, கூலி வாங்கியவர் நமது செட்டி நாட்டு சீமான் என்கிற இன்னொரு வரலாறும் வேதாந்தா குழுமத்திற்கு உண்டு...
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமத்தின் தலைவர், அனில் அகர்வாலின் சட்டைப்பையில் நமது பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அடக்கம்...
விதி மீறல்களுக்கும், சுற்றுப்புற சூழலை அழித்து காவு வாங்குவதற்கும் பெயர் பெற்ற இந்த நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டு, உச்ச நீதி மன்றத்தாலும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட துமான அப கீர்த்தி இந்நிறுவனத்திற்கு உண்டு...
மன்னார் வளைகுடாவிலிருந்து தடை செய்யப்பட்ட எல்லைக்குள் இயங்கி வரும் இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசு அனுமதி பெறவில்லை என்பதும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் பெறவில்லை என்பதும் எடப்பாடி உள்ளிட்ட எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்...
தினமும் நச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டு, குழந்தைகளின் நுரையீரல் கந்தகத்தால் நிரப்பப்பட்டு புற்று நோயால் அவதிப்படும், தூத்துக்குடி சுற்றுப்புற மக்கள், கடந்த நூறு நாட்களாக, கிஞ்சித்தும் வன்முறைக்கு இடம் தராமல் அறவழிப் போரில் ஈடுபட்டிருந்தார்கள்...
போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி, அரசு விதித்த, நூத்தி நாப்பத்து நாலு குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கித் திரண்டார்கள்...
ஆட்சியர் அலுவலகம் அருகில் வரை அனுமதித்து விட்டு, முறையான முன்னறிவிப்பின்றி, போராட்டத்தின் முன்னனி கள வீரர்கள் 11 பேரை, சுட்டு கொலை செய்து, முத்து நகரின் வரலாற்றில் ஒரு ஜனநாயகப் படுகொலையை, நிகழ்த்தி இருக்கிறது அரசு...
11 வயது மாணவி வாயில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்...
அரசு மீண்டும் ஒருமுறை தான் , நாசகார ஆலையின் முதலாளி பக்கமே என்று, மக்களின் இரத்தத்தில் தீர்ப்பெழுதியிருக்கிறது...
ஆனால் வரலாற்றுச் சக்கரம் இப்படியே இருக்காது....
வரலாற்றின் சிவந்த கண்கள், அப்பாவிகளின் குருதியை வெறித்துப் பாரத்துக் கொண்டே, தன் சொந்தத் தீர்ப்பை எழுதி முடிக்கும்....
பொறுமை ஒருநாள் புலியாகும்... அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்

No comments: