Tuesday, May 22, 2018

அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் நூறாவது நாளை உயிர்க்காவு வாங்கி நிறைவு செய்திருக்கிறது லாபவெறி முதலாளித்துவம்.
உண்மையில், அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை என்பதை, பொட்டிலடித்துக் கற்பித்திருக்கிறது தூத்துக்குடி.
அரச பயங்கரவாதம்,லாக்கப் கொலைகள்,துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்டவை தலித் மக்களுக்கே அதிகம் பரிச்சயமானவை.
பரமக்குடியும், தாமிரபரணியும் அழியாது நினைவில் நிற்பவை.
பொதுச் சமூகமோ, முன்னணி ஹீரோக்கள் விறைப்பான காவல் அதிகாரிகளாக நடித்து, 'நான் போலிஸ் இல்ல பொறுக்கி'.. என வசனம் பேசுவதைக் கண்டு, கைதட்டிச் செல்வதாகவே இருந்தது.
இப்போது, காவல் துறை பொதுமக்களைச் சுட்டுத் தள்ளிய பிறகு,ஆவேசமும் ஆற்றாமையுமாக நிற்கின்றது.
ஆட்சி மட்டுமே பிரச்சினை என்பது போல பார்வைகளும் முன் வைக்கப் படுகின்றன.
ஆனால், கவனிக்க வேண்டியது காவல்துறை எனும் இயந்திரம் அடிப்படையிலேயே வன்முறைக் கருவியாகவே நிறுவப் பட்டது என்பதைத் தான்.
மேலும், வெறும் காவல்துறை எதிர்ப்புணர்ச்சியாக இதைக் குறுக்கிக் கொள்வது கூட போதாமை தான்.
முதலாளித்துவமும், பார்ப்பனீயமும், ஹிந்துத்துவா அடிப்படைவாத அரசியல் சக்திகளும் கைகோர்த்து இயங்குவதைக் கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, தூத்துக்குடி தாக்குதல் என்பது, ஏற்கெனவே தமிழகம் சந்தித்து வரும் பல்முனைத் தாக்குதல்களின் ஒரு பகுதி மற்றும் நீட்சியே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக, நாம் ஒரு இருண்ட காலத்தில் இருக்கிறோம்.
இதை, எப்படிக் கடக்கப் போகிறோம் என்பதில் தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது.

No comments: