Monday, May 21, 2018

ஈழக்கதை

ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்

LTTE இயக்கம் 5 May 1976 உமா மகேஸ்வரனை தலைவராகவும் பிரபாகரனை கமேன்டராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் உமா மகேஸ்வரன் ஊர்மிளா என்னும் பெண்ணை காதலித்ததால் அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி 1979 இல் பிரபாகரன் தானே தலைவரானார். உமா மகேஸ்வரன் PLOT என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.
EROS (1975), TELO (1979), PLOTE (1980), EPRLF (1980) and TELA (1982) போன்ற இயக்கங்களும் உருவாயின.

'70 களில் கலைஞருடன் ஈழ மிதவாத தலைவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

அப்போது Tamil Eelam Liberation Organisation (TELO) தலைவர் சபாரத்தினம் கலைஞரோடு நெருக்கமாக இருந்தார்.

கலைஞருக்கு எதிராக செய்யவேண்டும் என்பதற்காக ஆட்சியில் இருந்த M.G.R தானும் ஈழ ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள LTTE யுடன் நெருங்கினார். அதனால் விடுதலைப்புலிகள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கலைஞர் ஈழவிடுதலை ஆதரவுநிதிதிரட்டி அனைத்து இயக்கங்களுக்கும் பகிர்ந்தளித்தபோது அதை வாங்கமறுத்தவர் பிரபாகரன். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும்தொகையினை நிதியாக பெற்றிருந்தார் பிரபாகரன். எனவே கலைஞர் கொடுத்த நிதியை பெற மறுத்துவிட்டார் பிரபாகரன்.

1986 இல் LTTE க்கும் TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு புலிகளால் அழிக்கப்பட்டனர்.

1986ல்ஈழவிடுதலைஇயக்கங்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி என்டிராமராவ்,ஃபரூக்அப்துல்லா,
பிஜுபட்நாயக் என பல பெருந்தலைவர்களை அழைத்து மதுரையில் ஈழ ஆதரவுமாநாடு நடத்தினார் கலைஞர்.மறுவாரமே சிறீசபாரத்னத்தையும்அவரதுபடையணியினரையும் சதிசெய்து கொன்றனர் LTTEயினர்.

தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE ஆல் கொல்லப்படவர்களில்
சிலர்.

மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார். ஆனால் அதையெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாக கூட மதித்ததேயில்லை.

மிக நீண்ட காலத்திற்கு பின் திமுக 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1990 ஜூன் 19 இல் EPRLF தலைவர்கள் பத்மநாபா உட்பட 13 பேர் இலங்கையிலிருந்த வந்த LTTE யினரால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது கலைஞருக்கு பேரிடியாய் அமைந்தது. கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேசப்பட்டு திமுக ஆட்சி இரண்டே வருடத்தில் கலைக்கப்பட பிரபாகரனே காரணமாயிருந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." என சுப்பிரமணியன் சுவாமி
('விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012) இல்
தெரிவித்தை கொண்டு திமுக ஆட்சியில் LTTE யினர் வளமாக இருந்ததை புரிந்துக் கொள்ளலாம்.

சீருடைக்கு உதவி செய்தார் என்பதற்காகத்தான் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜகதீசன் சிறையில் அடைக்கபட்டார்

1990 இல் அன்று முதல்வராக இருந்த கலைஞர் இலங்கை தமிழர்களை கொன்ற இந்தியப்படையை வரவேற்க முடியாது என திடமாக மறுத்தார் கலைஞர் அவர்கள்.

1991இல் LTTE இயக்கத்தை ஆதரித்ததற்காக கலைஞரின் திமுக அரசை ஜெயலலிதா கலைக்க போராடினார். திமுக அரசும் கலைக்க பட்டது.

அதன்பின்னர்1991மே 21 இல் ராஜீவ் காந்தி LTTE யால் கொல்லப்பட்டபோது அன்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை திமுக இழந்ததுடன் பிரபாகரனால் திமுக ராஜீவ் கொலைப்பழியையும் சுமக்க நேர்ந்தது.

திமுக ஆட்சியை இழந்து
மதிமுக ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்கனவேயிருந்த கள்ளத்தோனி உறவை பிரபாகரனுடன் பலப்படுத்திக் கொண்டார் வைக்கோ.

வைக்கோவின் அறிவுரைப்படி நடந்த பிரபாகரன் அதன் பின்னர் கலைஞரின் ஆலோசனையை காது கொடுத்து கேட்டதில்லை.

தன் அரசியல் சுயநவத்திற்காக பிரபாகாரனுக்கும் கலைஞருக்கும் இடையே எந்த நட்பும் புரிதலும் வராது பார்த்துக்கொண்டனர் வைக்கோ & கோ

கலைஞரை என்றுமே லட்சியம் செய்யாத பிரபாகரன் போரை துவங்கும் போதாவது அல்லது நடந்த போதாவது கலைஞரை தொடர்பு கொண்டதுண்டா ?
ஏன் செய்யவில்லை ?

இறுதிப்போருக்கான காரணம் இலங்கையா?

LTTE மாவிலாறு அணையை 21 July 2006 மூடியதே இறுதிப்போருக்கான காரணமாக அமைந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 15000 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போர் மூண்டது. 2009 இல் முடிவுக்கு வந்தது.

கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..

விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.

இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..

அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கனிமொழி கடைசி நேரத்தில் புலிகளை காப்பாற்ற முயற்சித்தது உண்மைதான்.

அவர் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசியதும் உண்மைதான். அவர் பேசிய நேரம் எல்லாம் கை மீறி போய்விட்டதும் உண்மைதானே.

சரணடைதல் எப்படி நடந்தது தெரியுமா?

நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:

* மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடங்கள்.'

* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'

* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'

* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார். "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'

* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.

* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக் குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.

* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.

* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.

* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.

* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.

* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.

* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.

கோத்தபய்யா உத்தரவின் பேரில் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாதான் இப்படுகொலைகளை நிகழ்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் தொடர்ச்சியினை முற்றாக அழிப்பதே கோத்தபய்யாவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்பு களோடு பேசினார்கள் என் பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தை களில் நேரடியாக சம்பந்தப் பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சரணடைதலில் அரசியல் செய்ய அவரது ஆளுமையால் இயலாது.

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை காப்பாற்றி இருக்க முடியுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள். நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்? கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

No comments: