இதுவரை இச்சம்பவத்தை நான் பொதுவெளியில் எழுதவோ பேசவோ இல்லை. இன்றைக்குப் பேசியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மேட்டூரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. மால்கோ என்றுபெயர். வேதாந்தாவுக்கு சொந்தமான நிறுவனம் அது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவுகளாலும் புகையினாலும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் புற்றுநோய் உட்பட பல தோல் நோய்கள் உண்டாக்கி மக்கள் அவதியுறுகின்றனர். இக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேச உண்மை அறியும் குழுவின் ஒரு நபராக நானும் சென்றிருந்தேன். அது 2013. அக்கிராமங்களில் மக்கள் படும் அவதியை நேரில் பார்த்தோம். பொதுவாக உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்டவர்களை மட்டும் பார்க்காது. அது தொடர்புடைய அதிகாரிகளையோ அல்லது மக்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களையும் சந்தித்துப் பேச முயல்வது வழக்கம். அந்த வகையில் நாங்கள் மால்கோ நிறுவனத்துக்குச் சென்றோம். அங்கு பொறுப்பில் இருந்த ஒருவரிடம் பேசினோம். அவர் இன்முகத்தோடு எங்களை வரவேற்றுப் பேசினார்.
"நாங்கள் அக்கிராமங்களுக்குச் சென்று மாதமொரு முறை மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதாவது இவர்களுடைய தொழிற்சாலையால்தான் மக்களுக்கு நோய்களும் வருகின்றன. இவர்களே மருத்துவமும் பார்ப்பார்களாம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்களாம். அவருடைய பதிலை பதிவு செய்துகொண்டு திரும்பினோம். திரும்பும் வழியில் பொங்குமாங்காவிரிக்கு அருகே சிறிது நேரம் நின்று அதை ரசித்துவிட்டு காரில் ஏறி ஒரு சாலையில் பயணித்தோம்.
ஆளரவமற்ற சாலை அது. எங்கள் வாகனம் செல்லும் வழியில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அருகே செல்லச் செல்ல ஏதோ விபரீதமாய்ப் பட்டது. ஆனால் எனன்வென்று விளங்கவில்லை. ஒரு நபர் கையில் பெரிய கல் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது எங்கள் வாகனத்தை நோக்கி வந்தது. குறி தப்பி வாகனத்தின் மேற்கூரையில் விழுந்தது. அந்தச் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்துபோனோம். அது ,மட்டும் கண்ணாடியைத் தாக்கி இருந்தால்...நினைத்தே பார்க்கமுடியவில்லை. எல்லோரும் பதட்டமாகி ஒருவரையொருவர் காப்பாற்றுவதற்காக 'குனிங்க...ஒளிஞ்சுக்கோங்க...குனிங்க' என்று அலறினோம். நான் முன்சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். டிரைவரிடம் 'வேகம் வேகம். நிற்காம ஓட்டுங்க.. " என்று நான் கத்தினேன். ஆனால் மீண்டும் மீண்டும் கற்கள் வந்து தாக்கின. கண்ணாடிகள் உடைந்தன. பின்னால் அமர்ந்திருந்த தோழர் ஒருவரின் தலையை உரசிக்கொண்டு ஒரு கல் வந்து விழுந்தது. அன்றைக்கு ஓட்டுநர் கொஞ்சம் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் இல்லையெனில் எல்லோர் மண்டையும் உடைந்திருக்கும். மின்னல் வேகத்தில் அவர் வாகனத்தை ஓட்ட, இரு சககர வாகனத்தில் கற்களை எரிந்துகொண்டே அவர்கள் துரத்தினர். ஆனால் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். மிக வேகமாக பிரதான சாலையை எங்கள் கார் தொட்டுவிட அங்கே மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமிருக்கவே அந்த நபர்கள் எங்களை அதன் பின் தொடரவில்லை.
நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்று வண்டியை நிறுத்தி புகாரளித்தோம். தோழர் கொளத்தூர் மணியிடம் தகவல் சொல்லவும் அவர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை உடனே அனுப்பி வைத்தார். உடனடியாக செய்திச் சேனல்களில் அது செய்தியானது. குறிப்பாக புதிய தலைமுறையில் அதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டதாக நினைவு. அதன் பின் அந்த நபர்கள் யாரென விசாரித்ததில் அது வேதாந்தாவைக் காக்க மால்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர்கள் என்று தெரிந்தது. இன்னமும் வழக்கு இருக்கிறது.
ஆக ஓர் உண்மையறியும் குழு என நான்கைந்து நபர்கள் வந்து விசாரித்து அறிக்கை அளிப்பதைக்கூட விரும்பாத வேதாந்தா, ஸ்டெர்லைட்டுக்காக இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் போராடுவதை எப்படி விரும்பும்? நான்கைந்து பேருக்கு தாக்குதல் என்றால் ஆயிரக்கணக்கானோருக்கு துப்பாக்கிச்சூட்டை அளித்திருக்கிறது வேதாந்தா நிறுவனம். காவல்துறை,அரசு, அதிகாரிகள் என எல்லோரும் துணை நின்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்குடித்திருக்கிறார்கள்.
எங்களைத் தாக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அடியாட்களுக்கும், இந்த அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வயிறு எரிகிறது வேதாந்தாவுக்கு அடியாள் வேலை செய்யும் இந்த அரசுகளின் கீழ் இருப்பதே ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல் இருக்கிறது. அவமானமாகவும் இருக்கிறது. சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்த அரசுகள் அழியட்டும்.
@kavin Malar
No comments:
Post a Comment