Monday, May 21, 2018

இதுதான் சாதாரண "துன்பியல் சம்பவமா"??

1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானார்.
முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
அங்கிருந்து சுமார் பத்தடி தொலைவில் கல்ஃப் நியூஸின் செய்தியாளராக பணிபுரிந்தவரும் தற்போது டெக்கான் க்ரானிகலின் பெங்களூர் நிருபராகவும் பணிபுரியும் நீனா கோபால், ராஜீவ் காந்தியின் நண்பர் சுமன் துபே ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
"என் கண்களின் முன்னால் வெடிகுண்டு வெடித்தது"
நீனா சொல்கிறார், "சுமனுடன் நான் பேச தொடங்கி இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, என் கண் முன்னே குண்டு வெடித்தது. வழக்கமாக வெண்ணிற ஆடைகளை அணியாத நான் அன்று வெள்ளை நிறப் புடவை அணிந்திருந்தேன். குண்டு வெடித்த பிறகு என் வெண்ணிற புடவை கறுப்பாக உருமாற, அதில் சிவப்பு வண்ணத்தில் ரத்தமும், சதை துண்டுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவு அருகில் இருந்த நான் எப்படி உயிர் தப்பினேன்! மிகப்பெரிய அதிசயம்தான்".
குண்டுவெடிப்புக்கு முன்னர் பட்டாசு வெடித்தது போல பட படவென்ற ஓசை கேட்டது, பின்னர் மிகப்பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. நான் முன்னோக்கி சென்றபோது, அங்கிருந்தவர்களின் துணிகளில் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அலறினார்கள். நாலாபுறமும் ஓடினார்கள் ஒரே குழப்பமாக இருந்தது, ராஜீவ் காந்தி உயிரோடிருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை."
ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடித்ததும், அந்த இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் ஜி.கே.மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ராஜீவ் காந்தியை தேடி அலைந்தார்கள். புகை சற்று அடங்கிய பிறகு ராஜீவ் காந்தியின் உடல் தெரிந்தது. பூமியை நோக்கி அவருடைய உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அவரது மண்டை பிளந்து கிடந்தது. சிதறிக்கிடந்த ராஜீவின் மூளை, மரணத்தின் இறுதி கணங்களை நெருங்கிக் கொண்டிருந்த ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி பி.கே. குப்தாவின் காலடியில் கிடந்தது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு
இந்த துயர நிகழ்வுக்கு பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஜி.கே மூப்பனார் இவ்வாறு கூறினார், "வெடிப்பு சப்தம் கேட்டவுடனே அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். காயமடைந்து கீழே விழுந்தவர்களும், இறந்து போனவர்களும் என சிதைந்த உடல்களே என் முன்னால் இருந்தன. அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பிரதீப் குப்தா உயிருடன் இருந்தார். அவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் குழப்பமாக வெளிப்பட்ட நிலையிலேயே, என் கண் முன்னரே அவரது உயிர் பிரிந்தது".
"ராஜீவ் காந்தியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று தோன்றியது. அவரது தலையை தூக்க முயன்றேன், ஆனால் கையில் சதையும், ரத்தமுமாக கொழகொழவென்று வந்தது, உடனே துண்டை எடுத்து மூடினேன்" என்று அந்த கொடுமையான சம்பவத்தை மூப்பனார் நினைவு கூர்ந்திருந்தார்.
மூப்பனார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஜெயந்தி நடராஜன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றார்.
அந்த கணத்தைப் பற்றி பிறகு ஒரு நேர்காணலில் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு கூறினார்: "போலிஸ் விலகி ஓடியது, முதலில் திகைத்து நின்ற நான், அந்த சடலங்களுக்கு இடையில் ராஜீவ் காந்தி இருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதலில் என் கண்ணில்பட்டது பிரதீப் குப்தா. அவரது முழங்கால் அருகே தரையில் கிடந்த ஒரு தலையை பார்த்தேன்., இருந்தது... "ஓ மை காட், திஸ் லுக்ஸ் ராஜீவ்" என்ற வார்த்தைகள் என்னையறிமால் வாயில் இருந்து வெளிவந்தன.
குண்டு வெடித்த பிறகு சில நொடிகளில் நீனா கோபால், ராஜீவ் காந்தி இறுதியாக நின்ற இடத்திற்கு சென்றார்.
"ராஜீவ் காந்தியின் உடலை பார்த்துவிட்டேன். அவரது காலணி அடையாளம் தெரிந்தது. சந்தேகத்தில் கையை பார்த்தேன், அதில் இருந்த கைக்கடிகாரம் அது ராஜீவ் காந்தி தான் என்பதை உறுதி செய்துவிட்டது. இந்த துயர சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக காரின் முன் இருக்கையில் ராஜீவ் காந்தி அமர்ந்திருக்க, பின் இருக்கையில் நான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கரத்தில் இருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்ததால் அது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது" என்று நினைவுகூர்கிறார் நீனா.

No comments: