Tuesday, May 15, 2018

பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாது

நேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர் அருகில் வந்தமர்ந்தார். சற்றே நீண்ட பயணத்தை அவர் தனியாக மேற்கொண்டார். அவரது பெயர் ராமஜெயம். தமிழ் அய்யங்கார் குடும்பம் என்பதை அவரது நெற்றிக்கோடுகள் அறிவித்து கொண்டிருந்தன. தமிழ் வித்வான். அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1987–ம் வருடத்திலேயே ஓய்வு பெற்றுள்ளார். 31 வருடங்கள் கடந்து விட்டதை ஆச்சரியத்துடன் பகிர்ந்தார். ஓய்வூதியம் 38,000 ரூபாய் பெற்று வருகிறார். தனது பெயர் பள்ளியில் ஒரு பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் என்றார். பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றார். ஆனால் அது அவரது புகாரில்லை. அவர் மிகவும் நிறைவாக காணப்பட்டார். 89 வயது அவருக்கு. அவருடைய பேரக்குழந்தைகளே பெரிய ஆளாகி விட்டார்கள். காஞ்சிபுரத்தில் இருக்கும் தனது மகள் வழி பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தான் சென்று கொண்டிருந்தார். பெருமாள் அனுக்கிரகத்தால் எந்த நோயும் இல்லை. அதனால் தனியே போக பயமில்லை என்றார். அயன் மாத்திரையாவது எடுத்து கொள்ளுங்கள் என்று மருத்துவர் கேட்டதற்கு கீரைகளில் அதை பெற்று விடுகிறேன் என்றுள்ளார். விடைபெறும் நேரத்தில் அவர் வேலை பார்த்த பள்ளியின் பெயரை கேட்டேன். ஈ.வெ.ரா–நாகம்மை பள்ளி என்றார். ‘அவர்(பெரியார்) ஏதோ அந்த காலத்தில் டொனேஷன் கொடுத்துள்ளார்’ என்று கூறினார். நான் சற்று இடைவெளி விட்டு ‘பெரியார் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டேன். சற்று யோசித்தவாறு, ‘பழமைகளை ஒழித்து புதுமைகளை கொண்டு வந்தவர். தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டியவர். பெரிய துணிச்சல்காரர்’ என்றெல்லாம் புகழ்ந்தார். பெரியாருக்கு பாராட்டுரை என்பது புதிதல்ல. யாரிடமிருந்து அது வருகிறது என்பது முக்கியம் தானே. 1987–ல் அந்த முதியவர் ஓய்வு பெறும் போது 4000 பேர் அப்பள்ளியில் படித்ததாக கூறினார். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகநீதி கொள்கை நிலைநாட்டப்பட போராடியதோடு பள்ளிக்கூடங்களை சொந்த காசில் கட்டி தமிழர்கள் படிக்க நேரடி உதவியும் செய்துள்ளார். ராமஜெயம் அய்யங்காருக்கு தெரிந்திருக்கிறது — பெரியார் இல்லையென்றால் இவனுங்க தலை நிமிர்ந்திருக்க முடியாதென்று. இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கையை சுவைத்து கொண்டிருக்கும் முன்பு கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள் எத்தனை பேருக்கு நன்றி உணர்ச்சி உள்ளது?


No comments: