Thursday, May 17, 2018

மனுதர்ம'த்தில் மண்டியிட்ட தமிழ் மன்னர்கள்

மன்னர்களுக்கான சிலைகளை கானவில்லையாம்;
இதோ மனுதர்ம'த்தில் மண்டியிட்ட தமிழ் மன்னர்கள் கதைகளை கேள்மின்......
மாரவர்மன் சுந்தரபாண்டியன் ‘மனுநெறி தலைப்ப மணிமுடி சூடி’ ஆள்கிறான் என
அவன் மெய்க்கீர்த்தி பறைசாற்றுகிறது...
குலசேகரப் பாண்டியனோ, “முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுதும் எத்தவச்
சமயமும் இனிதுடன் விளங்க” இறைமாட்சி நடத்தி இருக்கிறான்...
சோழர்கள் என்ன பாண்டியர்களுக்கு இளைத்தவர்களா?
“ஒப்பரிய மறைநூலும் உரை திறம்பா மனுநூலும்,
செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறு சமயம் தழைத்தோங்க” மூன்றாம் இராசராச சோழன்
ஆட்சி நடத்தியிருக்கிறான்.
முதலாம் இராசாதிராசன் “விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து” பரிபாலனஞ் செய்திருக்கிறான்.
இராசமகேந்திர சோழனோ, “தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய”மன்னனாகத் தன்னை மார்த்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.
முதலாம் குலோத்துங்கன் ‘மனுவாறு பெருக’ மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு
அறிவிக்கிறான்.
விக்கிரமச் சோழனோ “மனுநெறி வளர்த்து” நாடாள்வதாக நாப்பறை அடிக்கிறான்.
இரண்டாம் குலோத்துங்கனோ ‘மனுவாறு விளங்க’ செங்கோல் செலுத்துவதாகச் செம்மாந்து கூறுகிறான்.
இரண்டாம் இராசராசன் “மனுவாணை தனி நடாத்தி” மக்களைப் புரந்ததாகப் பெருமை கொள்கிறான்.
இரண்டாம் இராசாதிராசன் “அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க”
அகிலத்தை ஆண்டதாக அறைந்து கூறுகிறான்.
மூன்றாம் குலோத்துங்கன் “மனுவின் நெறி தழைத்தோங்க”, “செயல் வாய்ந்த மனுநூலும்” - பெருக கோலோச்சினான் என அவன் மெய்க்கீர்த்தி விளக்குகிறது.
மூன்றாம் இராசராசன் “பொருவில் மனுநெறி வாழ பொன் மகுடம் கவித்தருளி”
புரோகிதக் கூட்டத்திற்கு பொழுதளந்து சேவை செய்திருக்கிறான்.
நம் மன்னாதி மன்னன் எவனுக்கும் சட்டம் செய்யும் உரிமை இருந்ததில்லை. இது
இந்திய அரசியல் கொள்கை. அவன் தர்ம சாஸ்திரங்களின் கட்டளைகளை சமூகத்தில்
நிறைவேற்றும் ஒரு கருவி மட்டுமே. அண்ணா ‘சிவாஜி கண்ட இந்துராச்சியம்’
எப்படிப்பட்டதென்பதை விளக்கினார். ‘இந்து ராச்சியத்தில்’ எல்லா
மன்னர்களும் சிவாஜிகளே! இநதப் பொது விதிக்குத் தமிழ் மன்னர்கள் மட்டும்
விதிவிலக்கல்ல!
வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து அதை
மீறுவோர்க்கு கொடும் தண்டனையும் வழங்கி உள்ளார்கள். சாதி ஆச்சாரத்தை
நிலைநிறுத்தும் பொறுப்பை பிரமதேய (அக்கிரகார) சதுர்வேதி மங்களங்களின்
ஊர்ச் சபைகளே ஏற்றிருந்தன. பார்ப்பனர் அக்ரகாரத்தில் தனித்து வாழ்வதை
அரசர்கள் பெருமையோடு காத்து வந்தனர். அவர்களுக்கு மானியங்களாக இறையிலி
நிலங்கள்; பாரத விருத்தி, பட்ட விருத்தி, வேத விருத்தி, புராண விருத்தி, தேவதாயம் - இப்படி எத்தனையோ பெயர்களில் அவர்களுக்கு நாட்டிலுள்ள நல்ல நிலங்களை எல்லாம் தாரை வார்த்தார்கள்.
இடையில் வந்த ‘களப்பிரர்கள்’ அந்த நிலங்களை பிடுங்கி உழவர்க்கு கொடுத்தனர். ஆனால், அவர்களை ஒழித்துக் கட்டி மீண்டும் வந்த மனுநீதி தவறா தமிழ் மன்னர்கள் திரும்பவும் உழவர்களிடமிருந்த நிலங்களைப் பார்ப்பனரிடமே
சேர்த்து விட்டனர்

No comments: