Wednesday, May 16, 2018

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்து

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில்..
எம்.கே.நாராயணன் (புலிகளின விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர்) குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
"எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.
இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.
புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது."
மிகவும் தெளிவாக இச்செய்தியை ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் சொல்லியும் சிங்களப் பேரினவாதம் எதிர்ப்பார்த்த நெருக்கடியை கலைஞருக்கு அளித்த தமிழகத்து போலி தமிழ் தேசியர்கள் யாருக்கானவர்கள்? என்கிற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

No comments: