Thursday, May 17, 2018

புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள் என்ன?

 புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள் என்ன?
வான்படை வைத்திருக்கும் அளவுக்கு இராணுவ அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன?
விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்;பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்.
இன்றுவரைக்கும் புலிகளின் வாலுகளும் ஒரு சில ஊடகங்களும் புலிகள் செய்தவை எல்லாம் சரி என்று வாதாடுகின்றன, அது ஏதோ ஒரு
வகையில் அவர்களின் பிழைப்பை
கொண்டு செல்ல உதவுகின்றது .
ஆனால் புலிகளில் இருந்து ஒதுங்கி இருப்பவர்கள் இந்த வாலுகளை ஒதுக்கி வைத்துள்ளனர் .

புலிகளை யாரும் வெளியில் இருந்து அழிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. புலிகள் தோற்றுப் போனதற்கான காரணங்கள்:
1. மற்றவர்களுடைய பலவீனத்தை அறிந்த புலிகளுக்கு தங்களுடைய பலவீனத்தை அறிய முடியவில்லை. அதுதான் புலிகளின் தோல்விக்கு அடிப்படைக்காரணம்.
2. அவர்கள் தங்கள் பலவீனத்தை அறிய முடியாமல் செய்தது - உங்களைப் போன்றவர்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் புலிகளைச் சுற்றி விம்பம் கட்டி அவர்களை தன்னிலை மறக்கும் அளவுக்கு அதிகாரப் போதையை ஊட்டியது.
3. புலிகளின் அழிவுக்கு வெளிச்சக்திகள் காரணம் இல்லை. புலிகளுக்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியே முக்கிய காரணம். புலிகளின் முக்கிய தளபதியான மாத்தையாவும் அவரது படையணியில் இருந்த 700 வரையான போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த கருணா அம்மான் பிரிந்த போதும் பல நூற்றுக்கணக்காண போராளிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் வெற்றிகளுக்குக் காரணமான இரு தளபதிகளையும் அவர்களது போராளிகளையும் இழந்த பின் பிரபாகரனால் போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.
4. புலிகள் தங்களைச் சுற்றியிருந்த நட்பு சக்திகளை எல்லாம் படுகொலை செய்து தங்களைச் சுற்றி எதிரிகளை உருவாக்கினர். சகோதர இயக்கப் படுகொலைகளைச் செய்து அவர்களை எதிரிகளாக்கினர். முஸ்லீம்களை படுகொலை செய்து அவர்களை இனச்சுத்திகரிப்புச் செய்து அவர்களை எதிரிகளாக்கினர். சிங்கள மக்களைப் படுகொலை செய்து சிங்கள மக்களை எதிரிகளாக்கினர். ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்து தமிழகத்தையும் இந்தியாவையும் எதிரியாக்கினர்.
5. புலிகள் ஆயுதங்களில் காதல் கொண்டதற்குப் பதிலாக மக்களைக் காதலித்து இருந்தால் சக மக்களுடைய இதயங்களை வென்றிருந்தால் அவர்களும் வெற்றி பெற்றிருப்பார்கள்.
6. புலிகளுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த தெரிந்த அளவுக்கு அரசியலைப் பயன்படுத்தும் அறிவு இருக்கவில்லை. அவர்கள் கற்றறிந்து தேர்ச்சி பெற்ற மொழி ஆயுதமும் வன்முறையும். அதற்கே அவர்கள் இறுதியில் பலியாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் உதவிய இந்தியாவை பகைக்காமல் இருந்திருந்தால் வடக்கு கிழக்கு இணைந்த மானில ஆட்சியாவது கிடைத்திருக்கும் தனிஈழம் என்று ஆசைப்பட்டு எண்ணாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள மேற்குலகை நம்பி ஐம்பதினாயிரம் வீரர்கள் உயிரை இழந்துவிட்டோம் என்று இன்றும் உணராதவர்களுக்கு நீங்கள் எது சொன்னாலும் புரியாது மேலும் மேற்குலகு எவ்வளவு சக்திபடைத்தாலும் இந்தியாவிக்கு அல்லது சீனாவுக்கு அருகில் வந்து நிலை கொள்ளவிடுவார்களா? அதற்கான சக்தியை என்னவிலை கொடுத்தும் அழிக்க தயராக இருப்பார்கள் என்பதெல்லாம் ஏற்பதற்கு கசப்பாகத்தான் இருக்கும்.சூழ்நிலையில் போராளியானவர்களுக்கு மறுபடியும் புனர்வாழ்வுக்காக அழைப்பதைவிட புலம்பெயர் தேசத்தில் போலிப்பெயர்களையும் முகவலயத்தளங்களையும் வைத்திருப்போரை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு காலம் வரவில்லை.

No comments: