Friday, May 18, 2018

உழைத்தவர்க்கெல்லாம் எதிரியாம்

தாழ்த்தப்பட்ட இனத்தில் தான் பிறந்தார். அவர்களுக்காக தான் உழைத்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி.
மத்தியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவராக தான் இருந்தார். ஆனால் விபி சிங்கை தவிர அனைவரையும் தன் மக்களுக்காக எதிர்த்தார். ஆனால் தமிழக மக்களின் எதிரி.
ஈழத்திற்காக யாருமே பேசாத சமயங்களிலும் தன் எழுத்துக்களின் மூலமும் சட்டமன்றத்திலும் தன் எதிர்ப்புகளை கடுமையாக வைத்தார். இந்திரா காந்தியை எதிர்த்து பேசினார். ஆனால் ஈழ மக்களுக்கும் எதிரி.
விடுதலைப் புலிகளுக்காக இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அவர்களை விமர்சித்தோ கண்டித்தோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிரி.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து பல படைப்புகளை தந்து தமிழுக்காக தமிழ் தாய் வாழ்த்து என்ற முறையையும் கொண்டு வந்தார். செம்மொழி மாநாட்டையும் நடத்தினார். ஆனால் இவர் தமிழுக்கும் எதிரி.
கண்ணகிக்கு சிலை திறந்தார். தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் ஆத்திகர்களுக்கும் எதிரி.
இவர் பெரும்பான்மை மக்களுக்கு எதிரியாகத்தான் இருந்தார். ஏனெனில் வாழும் காலம் முழுவதும் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்காகவுமே யோசித்து வாழ்ந்து வந்தவர்.
இன்னும் இவரை இகழாதவை எதாவது இருந்தாலும் இகழ்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் எப்படி இகழலாம் என்று முடிவெடுப்பதற்குள் அதே முறையில் வேறொருவர் இவரை பழித்திருப்பார்.
வேறென்ன பழுத்த மரம் தானே கல்லடி படும்.

No comments: