Tuesday, May 15, 2018

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இன்று பிஜேபி என்ற ஒன்றே இருந்திருக்க வாய்ப்பில்லை

காங்கிரஸை ஒழிக்கனும் அதற்கு பிஜேபியை ஆதரிக்கனும் இந்தியாவே அழிந்தாலும்
திமுகவை ஒழிக்கனும் அதற்கு அடிமை அதிமுகவை ஆதரிக்கனும் கடைசித் தமிழன் சாகும் வரை
இதுதான் ஈழத்தின் பெயரில் அரசியல் செய்யும் அத்தனை பேரின் அஜெண்டா.
நான் தொடர்ந்து கேள்வி கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இப்படித்தான் இருக்கும், என்ன நேரடியாக சொல்ல மாட்டார்கள். காங்கிரஸ் வந்தா மட்டும் என்ன ஆகப்போகிறது, திமுக வந்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்பார்கள்.
ஈழம் போரடித்து விட்டால் காஷ்மீர் குழந்தைகளுக்காகவும், நீட்டை எதிர்த்தும் குரல் கொடுப்பார்கள், மறைமுகமாக பிஜேபியையையும் அதிமுகவையும் ஆதரித்து கொண்டே.
அழிவுப்பாதையில் அழைத்து செல்பவர்களை நம்பினால் அழிவது உறுதி.
இத்தகைய மனநிலை உள்ளவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பழகுவதற்கு ஆபத்தானவர்கள்.
தங்களிடம் எந்த தீர்வும் இல்லாமல் இருப்பவை அத்தனையையும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள்.

"2009 மே மாதத்தில் எங்கள் அழுகுரலை கேட்காது படுகொலைக்கு துணை நின்ற காங்கிரஸ்க்கு மரணஅடி விழுந்து கொண்டே இருக்கிறது. இப்போ பஞ்சாப் மற்றும் புதுச் சேரி மட்டுமே காங்கிரஸ் வசம். பாஜகவை ஒழித்துக்கட்ட இனி மாநிலகட்சிகள் திரளட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்படும் என்ற தமிழர்களின் சபதம் நிறைவேறியது ."

இந்த வாதத்தை ஆயிரமாவது முறை படிக்கிறேன் அல்லது கேட்கிறேன். ஈழத்தமிழர்களிடம் இருந்து. 2009 மேமாதம் ஈழத்தமிழரின் அழுகுரலை கேட்காது அவர்களின் படுகொலைக்கு துணை நின்றதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியத்தேர்தல்களில் தொடர்ந்து மரண அடி விழுந்துகொண்டிருக்கிறது என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டால் இரண்டு எதிர்கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் காங்கிரஸ் செய்த பாவத்துக்கான தண்டனைதான் அதன் இந்திய தேர்தல் தோல்விகள் என்றால் முள்ளிவாய்க்காலில் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பல்லாயிரம் ஈழத்தமிழர்கள் எவ்வளவு பெரிய பாவங்களை செய்திருந்தால் அவர்களுக்கு அப்படி ஒரு கோர முடிவு நேர்ந்திருக்கும்? பிரபாகரன் குடும்பமே பூண்டோடு அழிந்து போனதே அதற்கு அவர் செய்த பாவங்கள், கொடூரங்கள் தான் காரணமா? அவரது மகன் சிறுவன் பாலசந்திரன் என்னபாவம் செய்து அப்படி ஒரு கோர முடிவை சந்தித்தான்? ஒருவேளை தமிழ் ஈழத்தில் பெற்றோரின் விருப்பமின்றி பலவந்தமாக பிரபாகரனால் பிடித்துச்செல்லப்பட்ட ஏராளமான சிறார்போராளிகளின் பெற்றோர் விட்ட சாபம் தான் பிரபாகரன் சின்னஞ்சிறு பிள்ளையை காவுவாங்கியது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால் அது எவ்வளவு ஆபாசமாக இருக்குமோ அவ்வளவு ஆபாசம் இந்த ஆத்திரம் பொங்கும் பதிவு. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணேனும் போனதே என்று ஆறுதல் அடையும் மடத்தனத்தில் இருந்தும் சொந்த மகன் செத்தாலும் பரவாயில்லை வந்த மருமக தாலியறுந்தே ஆகணும் என்கிற சுயசிதைவு பழிவாங்கும் வெறியில் இருந்தும் விடுபடாதவரை ஈழத்தமிழரின் அரசியல் பார்வையும் விவாதகளமும் சமூக செயல்பாடுகளும் ஒருநாளும் 21ஆம் நூற்றாண்டிற்கேற்றவையாக மாறவே போவதில்லை. இத்தகையவர்களிடம் இன்னும் அரசியல் பேச முடியும் என்கிற சுபவீ போன்றோரின் செயல் பாலைக்கு இறைக்கும் குடிநீராக பாழாகுமே தவிர எந்த பயனும் தராது. குறிப்பாக தமிழ்நாட்டுத்தமிழருக்கு.
பிகு: காங்கிரஸை கரித்துக்கொட்டிக்கொண்டே இந்தியாவில் இருக்கமுடியும். திமுகவை திட்டிக்கொண்டும் தமிழ்நாட்டில் இருக்கலாம். இயங்கலாம். அரசியல் பேசலாம் பல்கலைக்கழகங்களிலேயே படிப்பிக்கலாம். அந்த அளவு அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்கும் இவர் போன்றவர்களுக்கு அவர்கள் தரத்துக்கே கீழிறங்கி ஒரே ஒரு கேள்வியை எழுப்பமுடியும். விடுதலைப்புலிகளை விமர்சிக்கக்கூட வேண்டாம் சந்தேகித்தாலே கழுத்தில் டயர்போட்டு எரித்ததும் வீதியில் விளக்கு கம்பத்தில் பொதுவில் தூக்கிட்டு தொங்கவிட்டதும் எந்த மண்? தமிழ் ஈழம் என்கிற புனிதமண் தானே? அத்தோடு ஒப்பிட காங்கிரஸின் இந்தியாவும் திமுகவின் தமிழ்நாடும் ஜனநாயகரீதியிலும் மனித உரிமைகளை மதிப்பதிலும் மேம்பட்டே இருந்தன. இருக்கின்றன. அடுத்து காங்கிரஸ் மோசம், திமுக மோசம் என்பதன் மறுபக்கம் பாஜக நல்லது அதிமுக அதைவிட நல்லது என்பது தானே? குஜராத்தில் மோடி முஸ்லிம்களுக்கு எதிராக செய்த “நற்செயல்களும்” தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஒட்டுமொத்த தமிழருக்கும் செய்வித்த ஏராளமான “நன்மைகளும்” இவரைப்போன்ற ஈழத்தமிழர்களுக்கு இனிக்கும். ஏனென்றால் எழுபதாயிரம் முஸ்லிகளை கட்டியதுணியோடு யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்த “விடுதலைப்போராளிகளுக்கு” விழுந்து கும்பிட்டு ஆதரித்த கூட்டத்துக்கு மோடிகளும் லேடிகளும் ஆதர்ஷமாய் இருப்பதில் வியப்பென்ன?

ராஜீவ்காந்தியைக் கொன்று அமிர்தலிங்கத்தை கொன்று பத்மநாபாவைக்கொன்று திராவிடர் இயக்கங்கள் மேல் ஜனநாயக இயக்கங்கள் என மக்கள்கொண்டிருந்த நம்பிக்கையை கொன்று பாசிச ஜெயலலிதாவும் பார்ப்பன பாரதியஜனதாவும் பெருவளர்ச்சியடைய ஆதரவாகவும் எதிர்மறையாகவும் முக்கியப்பங்காற்றி தமிழ்நாட்டை முட்டாள்களின் படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டு தன்னையும் அழித்துக்குட்டிச்சுவராக்கிக் கொண்டது ஈழப்போராட்டம்.

ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து அடித்த பெரு அலையில்தான் ஜெயலலிதா என்ற பாசிஸம் தமிழகத்தில் பச்சை பிடித்தது. தமிழர்களின் அழிவு அன்றிலிருந்துதான் தொடங்கியது. ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இன்று பிஜேபி என்ற ஒன்றே இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒற்றை கொலையில் எங்களின் அத்தனை தீமைகளையும் கொண்டுவந்து சேர்த்தவர்கள் நீங்கள்.


No comments: