Monday, May 14, 2018

இராஜபாளையம் குற்றப்பரம்பரையின் தெரு

விருதுநகர்மாவட்டத்தின் முக்கியமான ஊர் இராஜபாளையம்.
பெயர்தான் நகரம். ஆனால் சாதிவாரியாக தெருக்கள் இருக்கும் நகரம்.
தெய்வமான மாரியம்மனுக்கும் திரௌபதி அம்மனுக்கும் திருவிழா எடுப்பதில் கூட சாதி வாரியாக விழாக்கள் நடக்கும்.
அந்த ஊரில் உள்ள ஒரு தெரு வடக்குக் காவல் நிலையத்தில் மிகுந்த பெயர் பெற்றது.
ஊரில் சாதிக் கலவர மேகங்கள் சூழின் காவல்துறை முதலில் நுழையும் தெரு அது.
சாதியின் இளந்தாரிகள் எல்லாம் ஊர்ச்சாவடியில் ஒரு BA, BSc, Diploma எனப்படித்து விட்டு வேலை வெட்டி இல்லாது கார்த்திக்கும் பிரபுவுக்கும் இரசிகர் மன்றம் வைத்துக் கொண்டு யார் சுத்த ரத்த சாதிக்காரன் எனச் சண்டை வளர்த்துக் கொண்டிருந்த காலம்.
அக்னி நட்சத்திரம் படம் வெளியான போது கட்டி உருண்டு சண்டை போட்ட இளந்தாரிகள் நிறைந்த தெரு அது.
89 ல் கலைஞர் ஆட்சி அமைந்த பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுதியை உருவாக்குகையில் இந்த சாதியையும் சேர்க்கின்றார் அத்தொகுதியினுள்.
Denotified community என ஆங்கிலத்தில் குற்றப்பரம்பரையின் எச்ச சொச்சமாக இருந்த பெயரையும் சீர்மரபினர் என மாற்றி அத்தொகுதியினுள் நுழைத்த பின்னாலேதான் அச்சாதியில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் வாசலை மிதிக்க முடிந்தது.
இத்தனைக்கும் 90 களில் தமிழகத்தின் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 -34 தான்.
இந்த இட ஒதுக்கீட்டின் விளைவால் முதல் செட் இளைஞர்கள் உள்நுழைந்து பின்னால் வந்த இளைஞர்களுக்கு உதாரணமாய்த் திகழ்ந்தனர்.
இன்றைக்கும் ஊரில் சாதி உள்ளது. காவல் நிலையம் உள்ளது. ஆனால் அந்தத் தெரு இளந்தாரிகள் பல்வேறு நகர்களில் நல்ல நல்ல வேலைகளில் இருக்கின்றனர்.
திராவிடம் சாதித்தது என்ன என நாக்கூசாமல் கேட்போருக்குப் பதிலாக தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இது போலும் உள்ள தெருக்களும் அந்தத் தெருக்களில் இருந்து பட்டதாரிகளாகிப் போன இளைஞர்களும் சாட்சிகளாக இருக்கின்றனர்.

No comments: