Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் மறைவால் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை  நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வாந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால் நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்கமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான் நாகம்மாள் நான் காங்கிரஸில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டும்மா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டும்மா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியேயென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு நாற்பத்தெட்டு வாயதே ஆன போதிலும், அது மனித வாழ்வில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்து மூன்று வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் உண்மையென்று கருதுகிறேன்.

எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களோ இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற இரு உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 81 to 82.

No comments: