Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் மறைவு

 அம்மையார் மரணமடைந்த போது, நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். பல்வேறு இடங்களில் படத்திரப்பு நிகழ்வுகளும், இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அவர் மரணமடைந்த அன்றே பெரியார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ச் செல்கிறார். அடுத்த நாள் 144 தடை உத்தரவு மீறி சிறைக்குச் செல்கிறார். ஆனால் நாடே நாகம்மைக்கு அஞ்சலி செலுத்தியது. இயக்கத் தொண்டர்கள் சொந்த ன்னையை இழந்தது போல் அழுது பரிதவித்தார்கள், இயக்கம் துயருற்றது. இவையெல்லாம் நாகம்மையாருடைய தொண்டின் சிறப்பை காட்டுகிறது. பெண்கள் இயக்க வரலாற்றில், நாகம்மையார் முதல் முத்தாகத் திகழ்கிறார். சுயமரியாதை இயக்க வரலாற்றில், அதணைத் தோற்றுவித்த மாபெரும் பணியில் நாகம்மையாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைத் தவிர்த்துவிட்டு இந்த இயக்க வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது.

நாகம்மையார் மறைவையொட்டி அய்யா எழுதிய இரங்கல் உரை இலக்கிய நயம் மிக்கது. இதுவரை இப்படியொரு இரங்கல் பா யாரும் எழுதியிருக்க மாட்டார்கள்!.

எனதருமை துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.5.33. தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார், இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் நாகம்மாளை "மணந்து"வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்துவிட்டேன்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை, சுயநல வாழ்வில் "மைனராய், காலியாய், சீமானாய்" வாழ்ந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய்இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரம்மாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம், பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ, அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாளுக்கு நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால் நாகம்மாளோ பெண்ணடிமை விஷாயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 80 to 81.

No comments: