Thursday, July 12, 2018

ஆரியர்கள் திராவிடர்கள் - 1

"கும்பிடுறேன் சாமி" என்ற அடிமை தமிழையும், "நமஸ்காரம்" என்ற சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஒழித்து "வணக்கம்" என்ற சுய மரியாதை மிக்க சொல்லை பிரபலபடுத்தியது திராவிட இயக்கம் தான். "வணக்கம்" என்கிற கலக சொல்லோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆரியர்கள் திராவிடர்கள் என்றவுடன் என் நண்பர்கள் சிலரே என்னை பிரிவினைவாதியாக பார்த்ததுண்டு. அதற்கான விளங்கங்களை சில பதிவுகளை பகிர்வதன் மூலம் தெளிவு படுத்தி இருக்கிறேன். ஆனால், இன்னும் கூட அவர்கள் என்னை புரிந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது. அதற்காக வருத்தப்பட்டு கொண்டே இருப்பதை விட, இன்னும் தெளிவாக என் கொள்கைகளை (தந்தை பெரியாரின் கொள்கைகளே என் கொள்கைகள்) இன்னும் எடுத்துரைக்க வேண்டும் என்பது வெகு நாட்களாக என் அவா. ஆனால், இந்த பதிவைகூட அவர்கள் படிப்பார்களோ இல்லையோ எனக்கு தெரியாது. பெரியாரை இந்த இடத்தில் முன்னிறுத்துகிறேன்.
அவர் எந்த இடத்தில் அவனமானப்படுத்தப்பட்டாரோ, அந்த இடத்திலேயே அவர் வாழ்ந்த காலத்திலேயெ அவருக்கு சிலை வைக்கப்பட்ட்டது. அவர் படத்தை செருப்பால் அடித்தற்கு பெரியாரின் மறுமொழி, "என் படத்தை செருப்பால் அடிப்பவருக்கு ஒரு செருப்பும் என் உருவ படமும் வழங்கப்படும்" என்பதாகும். ஏன் என கேட்டதற்கு, நம் கொள்கை பரவ இது ஒரு வாய்ப்பு என்றார். அதையே நானும் பயன்படுத்தி கொள்ள போகிறேன். இதையே வாய்ப்பாக கருதி திராவிட கருத்தியலை பரவ வழி செய்ய வேண்டும். அரசியல் கருத்துக்கு ஒத்து போகும் தோழர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
அரசியல் என்பதே உனக்கான எதிரியை வழி மொழிதலில் இருந்து தான் துவங்கு கிறது. தேசியம் என்பதே அரசியல் தான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு தேசியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தும் ஒவ்வொரு தேசியம் கட்டமைக்கப்படும். உந்தன் அடையாளம் எதன் பொருட்டு நீ அடிமையாக்கப்பட்டாயோ அதன் பொருட்டே நீ போராடியாக வேண்டும். அது உந்தன் அடையாளமாகி போகும். உதாரணத்திற்கு, ஸ்பார்ட்டகஸை கூறலாம். அடிமை மரபில் பிறந்து ரோமிற்கு எதிராக இருந்த அனைத்து அடிமைகளையும் திரட்டி போராடிய புரட்சியாளன்.
அதே அடிப்படை தான் வந்தது பெரியாருக்கும். திராவிடம் திராவிடர் தமிழர் போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி ஆதிக்கத்திக்கு எதிரான மிக பெரிய புரட்சியை முன்னெடுத்தார் நம் தந்தை பெரியார்.
ஏன் அந்த கட்டாயம் ஏற்பட்டது? என்பதை பார்க்க நம் ஒரு நூற்றாண்டு பின்னோக்க வேண்டும். நாம் வாழ்ந்த முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த கட்டுரை தொடர். முடிந்த வரை கருத்துகளை பகிருங்கள். தரமான விமர்சனங்களுக்கு கண்டிப்பாக முடிந்தவரை என் அறிவுக்குட்பட்டு முடிவு சொல்கிறேன். நன்றி.

No comments: