Thursday, July 12, 2018

எஸ்டி உக்கம்சந்த்

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் எப்போதுமே ‘மண்ணின் மைந்தன்’ உரிமைக்குரலை உரத்து ஒலிக்கத் தவறியதில்லை. 80களின் திமுகவில் மண்ணின் மைந்தனாக மதுராந்தகத்தார் என்கிற ஆறுமுகம், ஒரு சக்கரவர்த்தி மாதிரி வலுவான மா.செ.வாக யாராலுமே அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். திமுகவில் மா.செ.வாக இருப்பதும், மாவட்டத்தின் ஆட்சியாளராக இருப்பதும் சமமான பதவிகள் என்கிற கருதுகோள் ஏற்பட காரணகர்த்தாக்களில் ஒருவர். “மாவீரன் ஆறுமுகத்தை யாராலும் அடக்க முடியாது” என்று கலைஞரே சொல்வார். கலைஞராலேயே அடக்க முடியாத இன்னொரு ஆறுமுகம், வீரபாண்டியார்.
அப்படிப்பட்ட மதுராந்தகத்தாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் வடநாட்டைச் சேர்ந்தவர். எஸ்டி உக்கம்சந்த். மதுராந்தகத்தில் அடகுக்கடை வைத்திருந்த உக்கம்சந்த், வட இந்தியர்களின் பாரம்பரியப்படி ஆரம்பத்தில் காங்கிரஸ் பிரமுகர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தாருக்கு எதிரான ஒரு தளபதி தனக்கும் தேவையென்று இவரை தெரிவு செய்தார் எம்.ஜி.ஆர்.


‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ கோஷம் போட்ட திமுகவையே தேர்தலில் தோற்கடித்தார் வட இந்திய உக்கம்சந்த்.
மதுராந்தகத்தார் கூட தோற்பாரா என்று ஒட்டுமொத்த வட மாவட்டங்கள் அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் அது. அந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.கழகத்திலேயே கூட மதுராந்தகத்தாரின் பிடி தளர ஆரம்பித்தது. ஒருக்கட்டத்தில் வெறுத்துப்போய் மதிமுகவை தொடங்கிய வைகோ பின்னால் சென்றார். வைகோ, ஒரு காகிதக்கப்பல் என்று உணர்ந்து மீண்டும் திமுகவுக்கு அவர் வந்தபோது எல்லாமே மாறிப்போய் இருந்தது.
மதுராந்தகத்தாரை வென்ற உக்கம்சந்த், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார். பழைய எம்.ஜி.ஆர் ஆட்களை கேவலப்படுத்துவதே ஜெயலலிதாவின் வாடிக்கை. அவ்வகையில் பல்வேறு அவமானங்களை சந்தித்து, கடைசியாக திமுகவுக்கு வந்து சேர்ந்தார் உக்கம்சந்த்.
வடமாவட்டங்களில் முதன்முறையாக திமுகவுக்கு கடுமையான அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரே, பிற்பாடு கடைசிவரை திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் பொறுப்புகளில் இருந்தார் என்பதுதான் அரசியல் வினோதம். கலைஞர், தளபதி இருவருமே மிகவும் மரியாதை பாராட்டி அவரை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளைஞர்கள் எத்தனை பேருக்கு உக்கம்சந்தை தெரியுமென்று தெரியவில்லை. 80களிலும் 90களிலும் அரசியல் ஈடுபாட்டோடு இருந்தவர்களுக்கு உக்கம்சந்த், ஓர் விஐபி. ஒரு வட இந்தியர், தமிழக அரசியலின் போக்கையே மாற்றக்கூடிய சக்தியாக அமைந்தது அரிதிலும் அரிதான நிகழ்வு.
திமுகவில் வன்னிய ஆதிக்கம் (கட்சிதாண்டிய சக்திகளால்) படிப்படியாக கைநழுவிப் போன வரலாற்றை யாரேனும் ஆய்வு செய்தால், அது சுவாரஸ்யமான திரில்லராக அமையும்.
உக்கம்சந்த் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

No comments: