ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது ?’
பல ஆண்டுகளுக்கு முன்பு விருந்தொன்றில் நண்பர்களோடு ரோட்டரியின் போலியோ ஒழிப்புக் குறித்து நான் உரையாடிக்கொண்டு இருந்தபொழுது எங்களுடன் இருந்த பிரபல அரசு மருத்துவர் என்னைப் பார்த்து ‘ஆமாம், ரோட்டரி அப்படி என்ன போலியோ ஒழிப்பிற்கு செய்துவிட்டது?’ என்று கேட்டார். மேலும் அவரே தொடர்ந்து ‘சொட்டு மருந்து அரசு வழங்குகிறது. அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கிறார்கள். இவைகள் எல்லாம் நடக்கிற இடம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களிலும்தான். ரோட்டரி இதில் எங்கு உள்ளே வந்தது? தேசிய சொட்டுமருந்து கொடுக்கும் நாளன்று தொப்பியும், மேல் அங்கியும் அணிந்து வந்து கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதும், ஊழியர்களுக்கு சிற்றுண்டி பலகாரம் வாங்கி தருவதுடன் போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது? தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், பல நேரங்களில் உங்களால் தொல்லையாகக்கூட இருக்கிறது’ என்று என் இதயமே நொறுங்கிவிடும் அளவிற்குப் பேசினார். ‘ஒளி, உனக்கு கோபம் வருமா, என்று அப்பொழுது யாராவது கேட்டிருந்தால் ‘ஆமாம், வரும், கடுமையாக வரும். இப்பொழுது அப்படிதான் வந்திருக்கிறது’ என்று சொல்லியிருப்பேன், என்னுடைய கோபம், அப்படி என்னைக் கேள்விகள் கேட்ட அந்த மருத்துவர் மீது அல்ல. அப்படி அவர்கள் கேட்கும்படியான நிலையில் நாம் இருக்கிறோமே, நமது பணிகளை பற்றி யாருக்கும் தெரியாத வகையில் நமக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறதே என்று என் மீதும், நமது அமைப்பின் மீதும்தான் கோபம் வந்தது.
‘சரி, உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன். அனைவரும் முதலில் உட்காருவோம், என்றேன். ‘நான் பேசும்பொழுது இடையில் உங்களுக்கு கேள்விகள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் இறுதியில் கேளுங்கள் பதில் அளிக்கிறேன்’ என்றேன்.
1960களில் அமெரிக்காவில் சின்சினாட்டி ரோட்டரி சங்கத்தின் கௌரவ உறுப்பினர், பிரபல மருத்துவர், நுண்கிருமிகள் ஆய்வாளர் ஆல்பர்ட் சபின் அவர்கள் தனது ஆய்வின் மூலமாக உயிருள்ள போலியோ வைரஸினைக் கொண்டு உருவாக்கப்பட்ட எளிதாக குழந்தைகளுக்கு வாய்வழியாக வழங்கக்கூடிய சொட்டுமருந்தை கண்டுபிடித்தார். பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரும்பொழுது நடைமுறை சிக்கல்கள் உண்டாயின. அப்பொழுது மருத்துவர் ஜோனஸ் சால்க் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட, 1955ல் அரசு உரிமம் பெற்ற ஊசி மூலம் உடலுக்குள் செல்லும் தடுப்பு மருந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஜோனஸ் சால்க் அவர்களின் தடுப்பு மருந்து செயலிழக்கப்பட்ட போலியோ வைரஸ் மூலம் உருவாக்கப்பட்டது.
ஆல்பர்ட் சபின் 1960ல் உலக சுகாதார நிறுவனத்தை அணுகி தன்னுடைய சொட்டுமருந்து, போலியோ அற்ற உலகை உருவாக்க வழிவகுக்கும் என்று விளக்கிக் கூறியபொழுது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால், போலியோ ஒழிப்பு பயணத்தை 1979ல் ரோட்டரி பிலிப்பைன்ஸில் துவங்கியபொழுதும் பின் 1985ல் உலக அளவில் கொண்டுச் செல்லும்பொழுதும் உலகச் சுகாதார நிறுவனம் தன்னை இணைத்துக்கொண்டது.
1978ல் ரோட்டரி உச்சி மாநாட்டில், 1980ல் வரவிருக்கும் ரோட்டரியின் பவள விழாவினையொட்டி உலக அளவில் பெரிய மக்கள் நலத் திட்டம் செய்யவேண்டும் என்று தீர்மானித்து, 3-H (Health> Hunger> Humanity) சுகாதாரம், பசியின்மை, மனித நேயம் என்கிற திட்டத்திற்கு நிதி திரட்டினர். என்ன திட்டம் செய்யலாம் என்று உலகளவில் ரோட்டரி மாவட்டங்களிடம் ஆலோசனை கேட்டனர். பரிந்துரைகள் அனுப்புங்கள் என்று வேண்டினர். வந்திருந்த முப்பத்தைந்து திட்ட வரைவுகளில் ‘பிலிப்பைன்ஸ் நாட்டில் முற்றிலுமாக போலியோ ஒழிக்க வேண்டும்’ என்கிறத் திட்டம் ரோட்டரி தலைவர்களைக் கவர்ந்தது. அதையே முதல் திட்டமாகக் கொள்ளவேண்டும் என்று ரோட்டரி தீர்மானித்தது. உலக சுகாதார நிறுவனமும் இதனை ஏற்றுக்கொண்டது. காரணம் மேற்கு பசிபிக் பகுதியில் இருந்த முப்பதிரண்டு நாடுகளில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பத்தி அய்ந்து சதவீதம் பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே இருந்தனர். அதுமட்டுமின்றி இந்த நாடுகளில் போலியோவால் உண்டான இறப்புகளில் எழுபத்திநான்கு சதவீதம் பிலிப்பைன்ஸ் நாட்டினர். ஆகவே, அங்கு இத்திட்டத்தினை துவங்குவதற்கான நோக்கமும் அவசியமும் காலச் சூழ்நிலையும் இருந்தது.
இதற்காக அமெரிக்க டாலர்கள் 7,60,000 தேவைப்பட்டது. உலகம் முழுக்க இருந்த ரோட்டரி உறுப்பினர்கள் தங்கள் பணத்தை கொடுத்து திட்டத்தை துவங்க வழிவகுத்தனர்.
ஆனால், இன்னொரு முட்டுக்கட்டை. பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் பெர்டின்னன்ட் மார்கோஸ் இதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். தன் நாட்டு குழந்தைகளுக்கு சொட்டுமருந்து அளிக்க இவர்கள் யார் என்றுக் கேட்டார். ரோட்டரி உலக தலைவர் ஜேம்ஸ் போமர் தலைமையில் பன்னாட்டு இயக்குனர்கள் குழு மணிலாவிற்கு சென்றது. அவர்களை வரவேற்ற மார்கோஸ், தன் கையில் எதுவுமில்லை தனது மனைவி இமெல்டாவிடம்தான் பேசவேண்டும் என்றார். அவர்தான் உள்நாட்டு மந்திரி என்றார். திருமதி இமெல்டா மார்கோஸ் அவர்களை பலமுறை சந்திக்க வாய்ப்புக் கேட்டு, கடைசியில் ஒரு வழியாக ஒத்துக்கொண்டாலும் குறித்த நேரம் வரும்பொழுது கூட்டத்தை தவிர்த்து விட்டார்.
ரோட்டரி தலைவர்கள் மனம் தளரவில்லை. பொறுமையாகக் காத்திருந்து இறுதியாக சந்தித்துவிட்டனர். குறைந்த நேரத்தில் இத்திட்டத்தை குறித்து தலைவர்கள் விளக்கினர். எல்லாவற்றையும் கேட்ட மந்திரியம்மா எதுவும் சொல்லாமல், தன் பையிலிருந்த அமெரிக்க பத்திரிகைகளை அவர்கள் முன் வீசி ‘இதென்ன பாருங்கள், என்னையும் என் கணவரையும் எப்படி தரக்குறைவாக, கிண்டலும் கேலியாகவும் உங்கள் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஏன் இப்படி?’’ என்று ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத செய்தியை பேசினார். ரோட்டரி தலைவர்கள் உண்மையில் அதிர்ந்துதான் போனார்கள். சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. பிறகு ரோட்டரி பன்னாட்டு தலைவர், ‘அமெரிக்காவில் பத்திரிகை சுதந்திரம் மிக அதிகம். அரசாங்கம் நினைத்தால்கூட ஒன்றும் செய்ய முடியாது’ என்று விளக்கிய பிறகு இமெல்டா இறங்கி வந்தார். ‘உங்களது ஒரு கையெழுத்து இந்நாட்டின் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வா, சாவா என்கிற போராட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும்’ என்றனர் குழுவினர். சிறிது தயங்கினாலும், இறுதியில் இமெல்டா ஒத்துக்கொண்டார். ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
இத்தாலி நாட்டு முன்னாள் ரோட்டரி ஆளுநர் செர்கியோ அவர்களின் முயற்சியால் இத்தாலி நாட்டு பள்ளிக் குழந்தைகள் பிலிப்பைன்ஸ் நாட்டு பள்ளிக் குழுந்தைகளுக்காக தங்கள் சிறுசேமிப்பிலிருந்து தந்த பணம் மூலம் அய்ம்பதாயிரம் சொட்டுமருந்துகள் கூடுதலாக பெறப்பட்டது. இதனை ரோட்டரி தவிர யாரால் செய்திருக்க முடியும். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட அய்ந்தே ஆண்டுகளில் போலியோ பிலிப்பைன்ஸில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
போலியோ ஒழிப்பிற்காக உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் மற்றும் அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் ரோட்டரியுடன் இணைந்து செயல்பட முன்வந்தனர். தேசிய சொட்டுமருந்து ஒழிப்பு தினத்திற்காக உலக நாடுகளின் ஒப்புதலையும் பெறவேண்டி இருந்தது. அச்சமயம். ஒரு சில நாடுகள் பிலிப்பைன்ஸ் போன்று இதற்கு முதலில் ஒத்துழைக்க மறுத்தனர்.
சீன நாட்டில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்தினை வழங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. அப்படியானால், உங்கள் நாட்டில் தயாரித்த சொட்டுமருந்தை பயன்படுத்துங்கள் என்று கேட்டபொழுது தங்கள் நாட்டில் அதை தயாரிக்கும் மருந்தாலை இல்லை என்று சொன்னார்கள். ரோட்டரி பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஆனால், அவர்களால் ஒரு சொட்டுமருந்துகூட தயாரிக்க முடியவில்லை. ரோட்டரியின் அரும்பெரும் சேவைதனையும் போலியோ நோயை ஒழிப்பதில் கொண்டுள்ள தீவிரத்தையும் உணர்ந்த சீன அரசாங்கம் ரோட்டரியையே சொட்டுமருந்து அளிக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
கியூபா, அரசியல் காரணங்களுக்காக, போலியோ ஒழிப்பு திட்டம் அமெரிக்கா சம்பந்தப்பட்ட ஒன்று என்கிற எண்ணத்தில் இதில் கலந்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தைக்கும் உடன்படவில்லை. எல்லா நாடுகளும் இதில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் இத்திட்டத்தினை வெற்றிகரமாக நடத்தமுடியாது என்று உணர்ந்த ரோட்டரி, கியூபா நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிபர் பெடெரல் காஸ்பரோவ் அவர்களை சந்தித்து ரோட்டரி அமைப்பு ‘எந்த ஒரு தனி நாட்டின் சொத்தும் அல்ல. உலகில் உள்ள மனிதநேய பற்றாளர்கள் கொண்ட அமைப்பு, 2005ல் ரோட்டரி தங்கள் நூற்றாண்டைக் கொண்டாடும்பொழுது போலியோ அற்ற உலகை குழந்தைகளுக்கு பரிசாக வழங்கவேண்டும் என்பது விருப்பம். எல்லா நாடுகளும், எல்லா குழந்தைகளும் போலியோ வைரஸ்க்கு தடுப்பினை உருவாக்கிக்கொள்ளாத வரை இது சாத்தியமில்லை’ என்று எடுத்துரைத்தபின் கியூபா இத்திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
இலங்கையில் போர் உச்ச நிலையில் இருந்தபொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க போர் நிறுத்தப்பட வேண்டியதாக இருந்தது. அரசாங்கத்தால், ரெட் கிராஸ் அமைப்பால் செய்ய முடியாததை, ரோட்டரி மேனாள் ஆளுநரும் இன்றைய உலகத் தலைவருமான கே. ஆர். ரவீந்திரன் அவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு கடிதம் எழுதி, போர் நிறுத்தப்பட்டு சொட்டுமருந்து அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை போலியோ அற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. சூடான் நாட்டில் சொட்டுமருந்து வழங்க நான்கு நாட்கள் போர் நிறுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் கிளிப் டாக்டெர்மன் அவர்களை தொடர்புகொண்டு நான்கு இலட்சம் அமெரிக்க டாலர்கள் உடனடியாக தேவை என்றவுடன் உடனடியாக பணம் அனுப்பப்பட்டு சூடான் நாட்டு குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
மற்ற எல்லா நாடுகளையும்விட இந்தியாவைப் பொறுத்தவரை அதிக அளவில் ரோட்டரி போராட வேண்டியிருந்தது. காரணம், உலகிலேயே அதிக அளவில் போலியோவால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. தென்மாநிலங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமாக தரப்படும் சொட்டுமருந்து வழங்குவதிலேயே எராளமான பிரச்சினைகள். மக்கள் தொகையும் முக்கியக் காரணம். ஒரே நாளில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நாடு முழுவதும் உள்ள ஒன்பது கோடி குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க முடியுமா? இதுகாறும் அப்படி ஒன்றினை செய்த முன்னுதாரணம் கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தல்கள்கூட பலகட்டத்தில்தானே நடைபெறுகிறது. ஆனால், முடியும் என்று சாதித்துக் காட்டியது ரோட்டரிதானே. ஒவ்வொரு ஊரிலும் பகுதி பகுதியாக பிரித்துக்கொண்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனையையும், ஆரம்ப சுகாதார நிறுவனத்தையும் ரோட்டரி சங்கத்தினுடன் இணைத்து, பிறகு மருத்துவர்களுக்கும் ரொட்டேரியன்களுக்கும் பயிற்சியளித்து 1996ஆம் ஆண்டு முதன் முறையாக இந்தியா முழுவதும் மூன்று வயதுக்குட்பட்ட ஒன்பது கோடி குழந்தைகளுக்கு இருபது இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ரோட்டரி குடும்பத்தினர் உதவியுடன் ஆறு இலட்சம் சொட்டுமருந்து சாவடிகள் மூலமாக மாபெரும் போலியோ யுத்தம் தொடங்கியது. (தமிழகத்தில் மட்டும் ஓராண்டுக்கு முன்பே துவங்கப்பட்டது. மேலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சொட்டுமருந்து அளிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் மட்டும் அய்ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது.) அந்நாளன்று ரோட்டரி தோழர்கள் குடும்பம் குடும்பமாக மருத்துவமனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அதிகாலையிலேயே சென்றுவிட்டனர். ஒவ்வொரு சங்கத்திற்கும் அய்ந்து அல்லது ஆறு சாவடிகளுக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டது. ரோட்டரி நண்பர்கள் குழுவாக பிரித்துக்கொண்டு ஒவ்வொரு சாவடியிலும் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். வரும் குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்வதும், சொட்டுமருந்து வழங்குவதிலும், வீடு வீடாகச் சென்று அய்ந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மருந்துக் கொடுக்க அழைப்பு விடுவதுமாக சுறுசுறுப்புடன் இயங்கினர். அந்தக் கட்டத்தில் வெளிவந்த ‘குமுதம்’ வார இதழ் தலையங்கத்தில் ரொட்டேரியன்களை தேனீக்களுக்கு இணையாக பாராட்டி எழுதியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அடுத்த ஆண்டு, 1997 முதல் நாடு முழுவதுமுள்ள அய்ந்து வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து அளிக்கப்பட்டது. இதனால் சுமார் பதினைந்து கோடி குழந்தைகளுக்கு வருடத்திற்கு இருமுறை சொட்டுமருந்து அளிக்கப்பட்டது. ஏவிஎம் ஸ்டுடியோவின் உரிமையாளர்களும் ரோட்டரி உறுப்பினர்களுமான நண்பர்கள் ஏவிஎம் சரவணன் மற்றும் ஏவிஎம் பாலசுப்ரமணியம் ஆகியோர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தில் காலமடைந்த ஆச்சி மனோரமா அவர்களைக் கொண்டு சொட்டுமருந்தின் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றை எடுத்து தமிழகம் எங்கும் திரையரங்குகளில் வெளியிட்டு விழிப்புணர்வை உண்டாக்கினர். அய்ந்தே ஆண்டுகளில் தமிழகம் போலியோ அற்ற மாநிலமாகிவிட்டது. ஆனால், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலைமை வரும்வரை தொடரவேண்டிய கட்டாயம். தினம் ஆயிரக்கணக்கானவர் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துக்கொண்டு இருக்கும்பொழுது முற்றிலும் ஒழித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது அல்லவா. அடுத்த அய்ந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களைத் தவிர மீதி எல்லா மாநிலங்களிலும் போலியோ ஒழிக்கப்பட்டது. இவ்விரு மாநிலங்களிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே காலக் கட்டத்தில் உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா தவிர மீதி நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இம்மூன்று நாடுகளும் இந்தியாவின் இவ்விரு மாநிலங்களும் பெரும் தலைவலியாக இருந்தது. அக்காலக் கட்டத்தில் ஆல்பர்ட் சபின் அவர்களின் சொட்டுமருந்து கேள்விக்குறியாக ஆக்கப்பட்டது. ஜோனஸ் சால்க் அவர்களின் ஊசி மருந்துதான் சிறந்தது என்று கட்டுரைகள் எழுதப்பட்டன. எல்லோரும் தளர்ந்துபோன சமயத்தில் ரோட்டரி மட்டும் உறுதியாக நின்றது. இவ்விரு மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்புகள், ஆண்டு முழுவதும் கொடுக்கப்படும் வழக்கமான சொட்டுமருந்துகள் வழங்குவது, கழிப்பறைகள் கட்டுவது போன்றவைகளை ரோட்டரி தொடர்ந்து செய்து வந்தது. கோஷி ஆற்றில் வௌ;ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தேசிய சொட்டுமருந்து வழங்குவது சிரமமாக இருக்கவே, அக்காலக் கட்டங்களில் ஆற்றிற்கு அக்கரையில் வாழ்பவர்களை எளிதில் அணுகும் வழியில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. மத ரீதியாக சொட்டுமருந்துக்கு எதிர்ப்பு கிளம்பியபொழுது மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அம்மதத்தினைச் சார்ந்த நாட்டின் பிறபகுதியில் வாழும் ரொட்டேரியன்களை அப்பகுதிக்கு செல்லவைத்து அவர்கள் மூலமாக சொட்டுமருந்தின் அவசியத்தையும் ரோட்டரியின் இலட்சியத்தையும் எடுத்துரைக்க வைத்தது ரோட்டரி அமைப்புதானே. இடைவிடாத போராட்டத்தின் முடிவில், ஜனவரி 12, 2011 இந்தியாவில் இருந்து போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக போலியோ இல்லாமையால் உலக சுகாதார நிறுவனத்தால் ‘போலியோ அற்ற நாடாக’ அறிவிக்கப்பட்டது. ஆமாம், போலியோ ஒழிப்பிற்கு ரோட்டரி அப்படி என்னதான் செய்துவிட்டது?
1985ல் உலக அளவில் ஆண்டுக்கு மூன்று இலட்சத்து அய்ம்பதாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து இன்றைக்கு வெறும் நூறு குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்கிற சூழ்நிலை ரோட்டரி இத்திட்டத்தை துவங்கிய காரணத்தினால்தானே ஏற்பட்டது. யுத்தம் இன்னும் முடியவில்லை. மீதியுள்ள மூன்று நாடுகளிலும் பூண்டோடு ஒழிக்கும் வரை ரோட்டரியின் பயணம் ஓயாது. உலகில் கடைசி குழந்தை போலியோ நோயிலிருந்து விடுப்படாதவரை எந்த குழந்தைக்கும் பாதுகாப்பில்லை என்பதுதான் இந்த யுத்தத்தின் யதார்த்தம். இந்த முப்பது ஆண்டுகளில் ரோட்டரி தங்கள் அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மூலமாகவும் வெளியாரிடமும் சேர்த்து இதுவரை இருபத்தி அய்ந்தாயிரம் கோடி ரூபாய் வரை போலியோவிற்காக செலவு செய்துள்ளது.
உலகத்தின் முன்னணி பணக்காரரான பில் கேட்ஸ் அவர்கள் ரோட்டரியின் பணிதனைக் கண்டு வியந்து முந்நூற்று அய்ம்பத்தி அய்ந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை போலியோ ஒழிப்பிற்காக ரோட்டரிக்கு வழங்கினார்.
பிர்லா குழுமத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி பிர்லா அவர்கள் 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை போலியோ ஒழிப்பிற்காக ரோட்டரியிடம் வழங்கினார்.
‘இப்பொழுது சொல்லுங்கள் ரோட்டரி போலியோவிற்கு ஏதாவது செய்துள்ளதா இல்லையா’ என்று எனது விளக்கத்தை முடித்துக் கொண்டேன்.
மருத்துவ நண்பர் நெகிழ்ந்துப்போய்விட்டார். ‘நீங்க சொன்ன செய்திகள் எனது அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டது. ரோட்டரியின் மகத்தான சேவையைக் கண்டு பெருமிதமும் பூரிப்பும் கொள்கிறேன். போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டால் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து முற்றிலுமாக இதுவரை ஒழிக்கப்பட்ட பெரியம்மைக்கு அடுத்த நோயாக இருக்கும். அப்படி விரைவில் நடந்தால் ரோட்டரிக்குதான் அந்த பெருமை. அதற்காக ரோட்டரிக்கு நோபல் பரிசு வழங்கினால்கூட பொருத்தமாக இருக்கும்’ என்றார் மருத்துவர். ‘உண்மைதான் டாக்டர், ஏற்கனவே ரோட்டரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றேன்.
No comments:
Post a Comment