Thursday, July 12, 2018

ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?

ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?
துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. தலையில் பேன் இருந்தால் தலையணை உறைக்குள் துளசியை அடைத்து அதன்மீது படுத்தால் பேன் உதிர்த்து விடும். இருமல், சளிக்குச் சுக்குக் கஷாயத்தோடு துளசியைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகிவிடவில்லை. துளசி பிரசாதமானதிற்கு கதையே வேறு.
இந்த கதை கந்த புராணத்தில் உள்ளது. இந்தப் புராணத்தை எடுத்து விட்டால் சைவமில்லை என்று கூறுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர்.
இனி கதைக்கு வருவோம்.
விருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்கவன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். விருத்தாசுரனின் மனைவி அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.
விருதையை மகாவிஷ்ணு கண்டு மோகித்து தன்வசப்படுத்தத் தந்திரங்கள் பல செய்தும், தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் முடியாமல் விருத்தாசுரனுடன் சண்டையிட்டார். விருத்தாசுரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன் ஆதலால், விருத்தாசுரனுடன் சண்டையிட்ட அவர் தோற்று ஓடி விட்டார்.
ஓடியவர் மைத்துணன் சிவனைக் கண்டு அவரிடம் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார். சிவன் விருத்தாசுரனுடன் சண்டையிட்டுச் விருத்தாசுரனைக் கொன்றார். சிவன் விருத்தாசுரனை கொன்றபிறகு விஷ்ணு விருத்தாசுரன் உடலுக்குள் புகுத்து கொண்டார். விருதையுடன் திருட்டுத்தனமாகக் கூடி கொண்டார்.
விஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் அன்று தெரிந்து விஷ்ணுவை நீ அயோக்கியனினும் அயோக்கியன். நீ ஒரு சண்டாளன். நீ செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது. ஆகையால் நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பை அழிக்கும்படியாகச் சாபம் கொடுக்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டாள். இந்த சாபத்தினால்தான் இராமனாக விஷ்ணு பிறந்ததும், இராவணன் சீதையை கடத்திசென்றதும் என்பார்கள்.
பத்தினி சாபம் பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? எனவே விருதையின் சாபம் பலித்தது.
சாபம் கொடுத்த விருதை அக்கினியில் விழுந்து இறந்துபோனாள். மகாவிஷ்ணுவுக்கோ விருதை இறந்த பின்னரும் அவள்மீது மோகம் தணியவில்லை. விருதையின் மோக ஆசையால் அந்தச் சாம்பலில் விழுந்து புரண்டு கிடந்தார்.
இந்த அவமானத்தை விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி பொறுக்காமல் துளசி என்னும் தன்னுடைய தாதிப் பெண்ணை அனுப்பி விஷ்ணுவின் சோகங்கள் மோகங்களை எல்லாம் தீர்த்து அழைத்து வருமாறு அனுப்பினாள்.
அவ்வாறே துளசி என்னும் பெண் சென்று திருமாலின் மோகங்கள் சோகங்களையெல்லாம் நீக்கி, அவரை அழைத்து வந்தாள். அந்தத் துளசி என்னும் பெண்ணை மகாவிஷ்ணு தம் மார்பில் வைத்துக் கொண்டார்.
அதுபோல் எல்லாரும் துளசியை அணிந்து கொண்டால் எல்லாவித சோகத்தினின்றும் சுகம் பெறலாம் என்று நினைத்து பக்தகோடிகள் அதை பூஜிக்கிறார்கள்.

No comments: