Thursday, July 12, 2018

மனிதர்களை அடிமைப்படுத்துவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் கற்பனை

மனிதர்களை அடிமைப்படுத்துவதற்கு மிகச்சிறந்த ஆயுதம் கற்பனை.
யார் மிகச்சிறந்த சுவாரசியமான கதைகளை காவியங்களை அவர்களுக்கு சாதகமாக உருவாக்குகிறார்களோ அவர்களால்தான் மற்றவர்களை எளிதில் அடிமைப்படுத்த முடிகிறது.
பல்வேறு பழங்குடிகளிடமும் ஆன்மா, கடவுள் நம்பிக்கைகள் இருந்தாலும் அவர்களில் யார் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை.
முதன் முதலில் மக்களை அடிமைப்படுத்துவதற்கு கதைகளை உருவாக்க வேண்டும்.
அதாவது கடவுள் மனிதர்களை தலையிலிருந்தும், மார்பிலிருந்தும் இடுப்பிலிருந்தும் காலில் இருந்தும் படைத்தார், தலையில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்களென்று முதல் கதையை உருவாக்கினார்கள்.
இதை கேட்கிற ஆட்கள் சும்மா இருப்பார்களா? ஏன் கடவுள் எங்களை தாழ்ந்தவர்களாக படைத்தார் என்று கேட்டார்கள்.
இந்த கேள்விகளை சமாளிக்க அடுத்த கதையை உருவாக்கினார்கள் அதாவது முன்ஜென்மம், மறுஜென்ம கதை. அதாவது போன ஜென்மத்தில் நீ தவறு செய்தாய் அதனால் இப்பொழுது கஷ்டப்படுகிறாய். இதையெல்லாம் பொறுத்துக்கொள் அடுத்த ஜென்மத்தில் சரியாகிவிடும்.
இந்த கதையை கேட்டு உண்மை என்று நம்பும் யாராவது ஏன் என்னை இப்படி அடிமைப்படுத்துகிறாய் என்று கேட்பார்களா? விதி என்று கடைசி வரை அடிமையாய் இருப்பார்கள். அப்படித்தான் இரண்டாயிரம் வருடங்களாக நம் மக்கள் அடிமையாக இருந்தனர்.
மக்கள் அடிமையாக இருப்பது அரசர்களுக்கு வசதி. அதனால்தான் இந்த கதைகளை ஊர் ஊராக பரப்ப மன்னர்கள் ஆதரவளித்தனர். குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் மகாபாரதம் எழுதப்பட்ட்டு ஊர் ஊராக பாரதம் பாட தனி மானியம் ஏற்படுத்தினார்கள்.
அதற்கு பிறகு மக்களே மனமுவந்து இதை கிராமத்திருவிழாக்களில் பாரதம் பாட வைத்தனர்.
உலகில் எங்கு சுரண்டல் அதிகம் நடைபெறுகிறதோ அங்குதான் புரட்சி முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பாகவே இந்தியாவில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு எந்த முனுமுனப்பும் இல்லை.
அதற்கு காரணம் எளிய மக்கள் இந்த கதைகளை நம்பினர். தாங்கள் இப்பொழுது சுரண்டப்படுவதற்கு காரணம் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்று நம்பினர். விதி என்று நம்பினர். அப்படிப்பட்ட மக்களிடம் சுயமரியாதையுணர்வு இருக்காது.
நாம் தொடரந்து அடிமையாக இருந்தது வாளினால் ஆன பலாத்காரத்தால் அல்ல. கற்பனையான கதைகளை நம்பியதால்.
இங்கு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு புராணமும், காவியமும் நன்கு திட்டமிடப்பட்டு பெருவாரியான மக்களை அடிமையாக வைத்திருக்க ஒரு தரப்பிற்கு சாதகமாக எழுதப்பட்டவை.
புராணங்களை கதைகளாக பாருங்கள், அதை உண்மையென்று நீங்கள் நம்பும் தருணத்தில் அடிமையாவீர்கள்.

No comments: