1988/89 காலகட்டம். எம்ஜிஆர் மறைந்து அதிமுக பிளவுபட்டு அடிதடியெல்லாம் நடந்து முடிந்த சூழல். ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார்.
அதில் ஒருநாள் சென்னையில் இருந்து மாலை கிளம்பி பின்னிரவுவரை வடமாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு விடியற்காலை மீண்டும் சென்னை திரும்புவது திட்டம். போகும் வழியில் மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டில் எம்ஜிஆர் சிலையை திறக்க ஏற்பாடு செய்திருந்தார் அதிமுகவின் அந்தபகுதி தளகர்த்தர் எஸ் டி உக்கம்சந்த்.
உண்மையில் எம்ஜிஆரைவிட தன் பகுதி அதிமுகவினருக்கு வாரி வழங்கிய வள்ளல் என்று போற்றப்பட்ட வடநாட்டு சேட்டு அவர். தமிழ் தடுமாறித்தான் பேசுவார். அடகு கடை நடத்திய சேட்டு குடும்பத்தவர் என்றாலும் அவரது புன்னகை தவழும் முகம் கட்சி கடந்தும் அவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்திருந்தது. அதிமுகவின் வடமாவட்ட தூணாக பார்க்கப்பட்டவர்.
அப்பேர்பட்டவர் நெடுஞ்சாலையை ஒட்டி எம்ஜிஆர் சிலையை நிறுவி ஜெயலலிதா கைகளால் அதை திறக்க ஏற்பாடும் செய்திருந்தார். ஏராளமான கூட்டமும் திரண்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஜெயலலிதா அங்கே நின்று சிலையை திறக்கவில்லை. மாலை 4-5 மணிக்கு அந்த பகுதியை கடந்த அவரது வாகனங்கள் நேராக அடுத்த இடத்துக்கு பறந்தன. உக்கம்சந்த் பதறிப்போனார்.
கூட்டம் கலையாமலிருக்க மேடையில் நடந்துகொண்டிருந்த record danceஐ தொடர்ந்து நடத்தும்படி உத்தரவிட்டவர் காரில் ஏறி “சின்னம்மாவை” சமாதானப்படுத்தி அழைத்துவர பறந்தார். சசிகலா மூலம் அவர் தொடர்ந்து முன்னெடுத்த சாமதானபேததண்ட முயற்சிகளின் பலனாக ஜெயலலிதா சென்னைக்குத்திரும்பும்போது எம்ஜிஆர் சிலையை திறக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு. ஜெயலலிதா வாகனத்தை விட்டு இறங்க மாட்டார். மேடையில் ஏறமாட்டார். சிலையை திறக்கும் கயிறு அவரது வாகனத்துக்கு கொண்டுவரவேண்டும். வாகனத்தின் ஜன்னல் கண்ணாடி இறக்கப்படும். அதன் வழியாக நீளும் ஜெயலலிதாவின் கையில் கயிறு கொடுக்கப்படவேண்டும். அதை அவர் இழுப்பார். அதுதான் சிலை திறப்பு.
அதன்படி விடியற்காலை 3-4 மணிவாக்கில் அந்த இடத்துக்கு ஜெயலலிதாவின் வண்டி வந்தது. அவர் வண்டிக்கு பின்னால் வந்த பத்திரிக்கையாளர்களுக்கான வண்டியில் இருந்து யாரும் இறங்கவில்லை. பலரும் அசந்து தூங்கிவிட, அதிமுகவின் கட்சிப்பத்திரிக்கை நிருபரும் ஊடகத்துறைக்கு புதிதாக வந்திருந்த ஆர்வக்கோளாறு கத்துகுட்டி நிருபரும் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ஜெயலலிதா வண்டிக்கு அருகே சென்றனர்.
எம்ஜிஆர் சிலை திறப்புக்கு காரணமான கயிறு கொண்டுவந்து பவ்யமாக நீட்டினார் உக்கம்சந்த். ஜன்னல் கண்ணாடிவழியாக நீண்ட செக்கச்சிவந்த கரம் அந்தகயிற்றை தொட்டது. இழுத்ததா என்று தெரியாது. எம்ஜிஆர் சிலையை சுற்றியிருந்த துணி மறைப்பு விலக கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது.
“அம்மா பெரிய கூட்டம்மா. ரொம்பநேரமா காத்திருக்காங்க. ஒரு தடவ வெளியவந்து பாருங்கம்மா. சந்தோசப்படுவாங்க” என்றார் உக்கம்சந்த்.
வாகனக்கதவு திறந்தது. ஆனால் ஜெயலலிதா இறங்கவில்லை. வாகனத்தில் இருந்தபடியே ஒரு நோட்டம் விட்டார். பின்னால் உட்கார்ந்திருந்த சசிகலா, “ஆமாங்கா பெரிய கூட்டம் தான்கா” என்றார்.
“stupid people. இந்தாளுக்கெல்லாம் ஒரு சிலை. அதை திறக்கறதை பார்க்கறதுக்கு இவ்ளோ நேரம் தூங்காம காத்திருக்குற முட்டாள் கூட்டம். இப்படிப்பட்ட கும்பலை தான் அந்த கிழவன் உருவாக்கி வெச்சிட்டு போயிருக்கான்” என்றது ஒரு பெண் குரல். அடுத்த நொடி வாகனக்கதவு இழுத்து சாத்தப்பட்டது. ஜெயலலிதா வாகன தொடரணி விர்ரென சீறிப்பாய்ந்தது சென்னையை நோக்கி.
வண்டியை விட்டு இறங்கிய அதிமுக கட்சிப்பத்திரிக்கை நிருபரும் ஊடகத்துறைக்கு புதிதாக வந்திருந்த ஆர்வக்கோளாறு கத்துகுட்டி நிருபரும் ஓடிச்சென்று வாகனத்தில் ஏறி அமர்ந்தனர்.
கத்துக்குட்டி நிருபரால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அன்று முழுக்க மேடைதோறும் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் இதயதெய்வம் என்றவர், ரத்தத்தின் ரத்தங்கள் என்றவர் அவரை கிழவன் என்றும் மக்களை முட்டாள்கள் என்றும் பேசியதை கேட்டதில் கிறுகிறுக்க ஆரம்பித்த தலைச்சுற்றல் நின்றபாடில்லை. “என்னங்க அந்தம்மா சட்டுனு அப்படி சொல்லிடிச்சி?” என்று மூத்த கட்சிப்பத்திரிக்கை நிருபரிடம் கேட்டார்.
“தம்பி நீ தொழிலுக்கு புதுசு. உனக்கு இதெல்லாம் புரியாது. அந்தம்மாவுக்கு அவரை சுத்தமா புடிக்காது. ஆனா அவர் பேரை சொன்னாத்தான் கட்சி கைக்குவரும். ஆட்சியை பிடிக்கவும் முடியும். அதுக்காக அந்தம்மா அவர் பேரை use பண்ணுது. இங்கெ கேட்டதை இத்தோட மறந்துரு. வெளில போய் உளரிகிட்டு திரியாத. அப்புறம் எங்கயும் வேலை செய்ய முடியாது” என்றார் அந்த அனுபவஸ்தர்.
அவர் சொன்னது தான் அடுத்த 25 ஆண்டுகள் அட்சரம் பிசகாமல் அப்படியே நடந்தது. எந்த எம்ஜிஆரை தன் அடிமன ஆழத்திலிருந்து வெறுத்தாரோ அவரது ஒரே அரசியல் வாரிசாக தன்னை வடிவமைத்துக்கொள்வதில் பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா. கடைசியில் எம்ஜிஆரின் சமாதியில் கூட எம்ஜிஆரை பின்னுக்குத்தள்ளும் அளவுக்கு ஜெயலலிதாவின் சமாதி உருவாவது அதன் உச்சகட்டக்கொடுமை.
அதைவிட பெருங்கொடுமை எந்த மக்களை அடிமுட்டாள்கள் என்று அவர் வாழ்நாள் முழுக்க வெறுத்து அவமதித்தாரோ அந்த மக்கள்திரளின் கணிசமான பகுதியினர் ஜெயலலிதா ஒரு உதாரண புருஷி, பெண்ணிய பெருந்தலைவி, தன்னம்பிக்கை தலைவி, மக்கள் முதல்வர் என்று போற்றிக்கொண்டிருப்பது.
உண்மையில் ஜெயலலிதா ஒரு ஆகச்சிறந்த நடிகை தான். சந்தேகமே இல்லை. ஆனால் அவரது அதி உன்னத நடிப்பாற்றல் வெளிப்பட்டது அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின்பு என்பதே அதன் தனிச்சிறப்பு.
பல்லாயிரம் பேர் முன்னிலையில் ஜெயலலிதாவால் அவமதிக்கப்பட்ட உக்கம்சந்த் என்ன ஆனார் என்கிறீர்களா?
No comments:
Post a Comment