Saturday, March 09, 2019

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு ..பகுதி-2

திமுக உருவான போது அதில் தலைவர் கலைஞரின் பங்கு
பகுதி-2
1944 ஆம் ஆண்டு திருவாரூர் நகர சுயமரியாதைச் சங்க ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள தந்தை பெரியார் வந்தார். அந்த விழாவில்தான் கலைஞரின் முரசொலி இதழைக் கண்டு பாராட்டினார். அப்போதிருந்து தந்தை பெரியாருடன் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.
அந்த ஆண்டுதான் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. கலைஞருக்கு பத்மாவதி அம்மையாருடன் சுயமரியாதை திருமணம் நடந்ததும் அந்த ஆண்டுதான்.
திராவிடர் கழக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் எழுச்சிமிகு பேச்சாளராக வளர்ந்து வந்த நேரம். 1946 ஆம் ஆண்டு புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது, கலைஞரை காங்கிரஸார் கடுமையாக தாக்கினர். தாக்குதலில் கலைஞர் இறந்துவிட்டதாக கருதி சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்றனர். வயதான பெண்மணியும் இளைஞர் ஒருவரும் கலைஞரை காப்பாற்றினர். அங்கிருந்து இஸ்லாமியரைப் போல வேடம் அணிந்து பெரியாரிடம் வந்தார். அன்றே கலைஞரை தன்னுடன் அழைத்து வந்த தந்தை பெரியார் குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.
அங்கு பணியில் இருக்கும் சமயத்தில்தான் திராவிடர் கழக கொடி வடிவமைக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கருப்பு வண்ணத்தின் நடுவே தனது விரலில் குத்தி எடுக்கப்பட்ட ரத்தத் துளியை பொட்டாக வைத்து கொடி உருவாக துணையாக இருந்தார். அதே ஆண்டில், கோயம்புத்தூரில் இயங்கிய ஜூபிடர் பிக்சர்ஸில் வேலை கிடைத்து, பெரியாரிடம் விடைபெற்ற கலைஞர் ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்றார். ராஜகுமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுதி திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
ராஜகுமாரி வெளிவந்த 1947 ஆம் ஆண்டிலேயே முரசொலி பத்திரிகையை வார இதழாக வெளிக் கொண்டுவந்தார். அந்த ஆண்டு இந்திய விடுதலையை துக்கதினமாக அறிவித்த பெரியாரின் அறிக்கை எதிர்த்து அண்ணா வெளியிட்ட அறிக்கையால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் வகையில் நடுநிலையாளராக கலைஞர் தனது முரசொலி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். பெரியார் மணியம்மை திருமணம் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்திய நிலையில் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது.
அந்த புதிய இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 110 பேரில் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், டி.எம்.பார்த்தசாரதி என்று பெயர் வரிசை இருந்தது.
பிரச்சாரக்குழுவில் கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், என்.வி.நடராசன், காஞ்சி கல்யாணசுந்தரம் என்று பெயர் வரிசை இருந்தது.
பெரியாருடன் அறிமுகம் ஏற்பட்ட மிகக்குறுகிய காலத்தில் கலைஞருக்கு கட்சியில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் மாணவராக இருந்த சமயத்தில் தலைவர்களாக இருந்தவர்களுடன் மிகக்குறுகிய காலத்தில் சமமமாக பணியாற்றும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான்.!!!!!

No comments: