Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (66)

72 ஆண்டுகளுக்கு முந்தைய கருஞ்சட்டை மாநாடு.

திருச்சியில் 1945 ஆம் ஆண்டு திராவிடர் கழக மாகாண மாநாடும் சுயமரியாதை மாநாடும் நடைபெற்றன. அம்மாநாட்டில் கருஞ்சட்டைப் படையொன்றை (தொண்டர் படை) அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டின் தீர்மானத்திற்கேற்ப கருஞ்சட்டைப் படை 10.10.1945 அன்று உருவாக்கப்பட்டது.

சென்னையில் 10.2.1946 அன்று கருஞ்சட்டைப் படையினரின் அணி வகுப்பு நடத்தப்பட்டது.

பெரியாரும் அவரது தோழர்களும் 11.5.46 அன்று மதுரையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாட்டை நடத்தினர். 50,000 பேர் கலந்து கொண்ட அம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில் 20,000 பேர் பங்கேற்றனர். அப்பேரணியில் பெரியார், அண்ணா, எஸ்.ஆர்.காந்தி அம்மையார், இரா.நெடுந்செழியன் ஆகியோர் சாரட்டில் வந்தனர். ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், இளம்வழுதி ஆகியோர் தொண்டர் படைத் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

அம்மாநாட்டுப் பந்தல் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்றோர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர் நிர்வாணமாக்கப்பட்டார்.

ஏ.வைத்தியநாத அய்யர்தான் வன்முறையாளர்களுக்குப்  பணம் கொடுத்துத் தூண்டிவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக "குடி அரசு" (18.5.1946) எழுதிற்று.

No comments: