Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (51)

நீதிக்கட்சியினுடைய கொடி தராசு சின்னம் பொறித்த சிவப்பு வண்ணமுடையது. ஜே.எஸ்.கண்ணப்பர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு கொடியும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது.

இது குறித்துத் தந்தை பெரியார் குறிப்பிட்டது  என்னவென்றால், “கொடி காலத்திற்கேற்றாற் போல் மாற்றப்பட வேண்டும்; விஞ்ஞான அறிவு, இலட்சியம் இவைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்; அதோடு கொடி யாரும் சர்வசாதாரணமாகத் தயாரித்து விடக்கூடிய மாதிரியிலும் இருக்க வேண்டும்” என்பனவாகும்.

இன்றைய திராவிடர் கழகக் கொடியின் கருத்து, ஈரோடு சண்முகவேலாயுதம் என்பவருடையது. நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்தைக் கலைஞர் தம் பெருவிரலில் ஒரு குண்டூசியால் குத்தி குருதியைக் கொடியின் நடுவில் வைத்தார்.

கரூர் தவிட்டுப்பாளையத்தில் 1946ஆம் ஆண்டு முதன்முதலில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றினார் என்.இரத்தினம் என்பவர். கொடியை ஏற்றி அவர் உரையாற்றியது:
 ”நம்மில் சில தோழர்கள் கொடியில் கறுப்பு நிறம் இருப்பது நன்றாயில்லை என்கிறார்கள். அவர்களுக்குக் கூறுகிறேன், கறுப்பு எதிர்ப்புக்கு அறிகுறி. நாம் ஆரியத்துக்கு எதிர்ப்பு- வடநாட்டாருக்கு எதிர்ப்பு- சனாதனிகளுக்கு எதிர்ப்பு- சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் எதிர்ப்பு- வெள்ளையர் ஆட்சிக்கு எதிர்ப்பு- பட்டம் பதவி மோகிகளுக்கும் எதிர்ப்பு என்பன போன்ற பல எதிர்ப்பு வேலைகளை மேற்போட்டுக் கொண்டுள்ள நமது கொடி கறுப்புக் கொடியாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
 எனவேதான், நமது நிலையையும், நமது எதிர்ப்பு வேலையையும் குறிக்கக் கறுப்பு நிறமும், நமது இலட்சியத்தையும் அதற்கான புரட்சி வேலைகளையும் எடுத்துக் காட்ட சிவப்பு நிறமும், நமது கொடியில் அமைக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறோம்”.

இந்நிகழ்வில் ஏற்றப்பட்ட கொடி முழுவதும் கறுப்பு நிறமாகவும், நடுவில் வட்ட வடிவமாகப் பொறிகளுடன்(spark) சிவப்பு நிறமும் இடம்பெற்று இருந்தது.

பின்னர் அதே ஆண்டு ஏப்ரலில் திருச்சியில் கூடிய தி.க. நிர்வாகக் குழு கொடியின் நடுவில் பொறிகளுடன் சிவப்பு நிறம் இடம் பெற்றிருப்பதை வட்டமான சிவப்பாக்கிப் பொறிகளை அகற்றிவிட்டு ஏற்றுக்கொண்டது.

No comments: