Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (75)

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்பது அவ்வினத்தின் மொழி சார்ந்து தான் முதன்மையாக உருவாகிறது. திராவிட மொழிக் குடும்பம் குறித்த அறிதல் என்பது இவ்வகையில் முக்கியமான நிகழ்வு.

கி.பி.1784 இல் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ‘ஆசியவியல் கழகம்’ என்னும் அமைப்பின் மூலம் நிகழ்ந்த ஆய்வுகள், இந்தியாவில் கீழைத்தேயவியல் மரபுக்கு உரிமையுடையது, சமஸ்கிருத மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தன. இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுள்ள மொழி சமஸ்கிருதம் என்னும் கருத்து உலக அளவில் முன்னெடுக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வகையான புரிதலே இருந்தது.

1812-இல் எல்லீஸ், இந்தியாவின் தென்பகுதியில் சமஸ்கிருத மொழியிலிருந்து வேறுபட்ட பல மொழிகள் வழக்கத்தில் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். 1856-இல் கால்டுவெல் இக்கருதுகோளை வளர்த்தெடுத்து ‘திராவிட மொழிக்குடும்பம்’ என்னும் அடையாளத்தை நிலைபேறு கொள்ளச்செய்தார்.

1905 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இந்திய மொழிகளைப் பற்றிய கணக்கெடுப்பு நிறுவனம்’, கால்டுவெல் கருத்தை வலுப்படுத்தி, திராவிட மொழிக்குடும்பத்தில் மேலும் பல மொழிகளை இணைத்தது. 1962-இல் எமனோ மற்றும் பர்ரோ உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியில் 24 மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இனம் கண்டனர். 1984-இல் அந்த அகராதி விரிவாக்கப்பட்ட மீள்பதிப்பைக் கொண்டு வரும்போது 27 திராவிட மொழிகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.

No comments: