Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (65)

நீடாமங்கலம் சாதியக் கொடுமை நடைபெற்ற நாள் இன்று.

28.12.1937 அன்று பழைய தஞ்சை மாவட்டம், நீடாமங்கலத்தில் ‘தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3-வது அரசியல் மாநாடு’ நடைபெற்றது.
மாநாடு அன்று பிற்பகல் சமபந்தி விருந்து நடந்தது.
சாதி, மத பேதமின்றி யாவரும் வரலாம் என்று மீண்டும் மீண்டும்  அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த விவசாயக் கூலித்தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் மாநாட்டு விருந்தில் அமர்ந்து உணவருந்தினார். ஆனால் உணவருந்திக் கொண்டிருந்தபோதே அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதற்கு மறுநாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு, அங்கும் அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர்.

 மரத்தில் கட்டிவைத்து உதைத்தும் மொட்டை அடித்தும் சாணிப்பாலை வாயில் புகட்டியும் கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டும் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். சுமார் 20 பேர் இத்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

 இவ்வன்முறை நிகழ்விற்குச் சுயமரியாதை இயக்கம் உடனே எதிர்வினையாற்றியது. சுயமரியாதை இயக்க நாளேடான ‘விடுதலை’ யே இதனை முதன்முதலாக வெளியுலகிற்குக் கொண்டுசென்றது. ‘விடுதலை’ ’குடி அரசு’ இதழ்கள் இரண்டும் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கும் மேலாக இந்த வன்நிகழ்வை மாகாணத் தமிழ் மக்களின் பேசுபொருளாக ஆக்கின.

மேலும், வன்முறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை இவ்வியக்கம் பாதுகாத்தும் வந்தது. இவற்றின் காரணமாக ஒரு தரப்பினரின் கோபத்துக்கு ஆளாகி, நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தது ‘விடுதலை’ ஏடு.


No comments: